ஞானி பேசுகிறார்

By செய்திப்பிரிவு

இன்று என்னிடம் கடவுள் இருக்கிறாரா என்று கேட்டால், இல்லை என்பேன். கடவுள் ஒரு அழகான, போதையூட்டும் கருத்தாக்கம். அவ்வளவுதான். ஆனால், சமூகத்தில், சாமானிய மக்களிடம் உள்ள கடவுள் - மதத்துக்கான நியாயத்தை என் சொந்த விருப்பங்களிலிருந்து அணுக மாட்டேன்.

ஜான் லெவிஸ் சொல்கிறார், “மதத்தின் மேலடுக்கு பூசாரித்தனம். தெய்வம், கோயில், வழிபாடு, சடங்கு இதெல்லாம் இந்த மேலடுக்கு. உள்ளடுக்கு ஒன்று இருக்கிறது - தீர்க்கதரிசனம்.” என்னைப் பொறுத்த அளவில் இந்த உள்ளடுக்கையே மதமாக நான் பார்க்கிறேன். சமூகத்தில் ஒடுக்கப்படும் சூழலுக்கு எதிராக மக்களுக்கு ஒரு சகிப்புத்தன்மை தேவைப்படுகிறது. இதற்கு மதம் பயன்படுகிறது. ஒடுக்கப்படும் சூழல் நிலவும் காலம் முழுவதும் மதம் உயிரோடு இருக்கும். அடுத்து, மதம் சார்ந்து காலங்காலமாக உருவாகியிருக்கும் கலாச்சாரப் பொக்கிஷங்கள். தமிழிலக்கியத்தில் சரிபாதி அளவுக்கு இருக்கும் பக்தி இலக்கியத்தை எடுத்துக்கொள்வோம். மதத்தோடு சேர்த்து அதையும் நாம் புறக்கணித்து விட முடியுமா?

ஒட்டுமொத்த இந்திய சமூகத்தில் சாதியின், பிராமணியத்தின் ஆதிக்கத்தைப் புரிந்துகொண்டேன். பெரியாருடைய கடவுள் எதிர்ப்பு, மத எதிர்ப்பு, சாதி எதிர்ப்பு எல்லாமே சமத்துவத்துக்கான முழக்கம்தான். உண்மையில், சுயமரியாதைதான் பெரியாரின் மெய்யியல் – தத்துவம். பகுத்தறிவு என்பதேகூட பெரியாருடைய ஆய்வுமுறையே தவிர, அது அவருடைய மெய்யியல் கிடையாது. பெரியாரியத்தின் மையம் சமதர்மம். இந்தப் புள்ளியில்தான் மார்க்ஸுடன் பெரியாரை இணைக்கிறேன்.

என்னுடைய தமிழ் தேசியமானது, தமிழ் மொழியின் தொன்மை வழியே எனக்குள் இறங்குகிறது. வள்ளுவரை நான் எனக்குள் தரிசிக்கிறேன். கணியன்பூங்குன்றன் எனக்குள் தங்கி வளம் சேர்க்கிறார். ஆழ்வார்களோடும் நாயன்மார்களோடும் நானும் கலந்திருக்கிறேன். ஆண்டாளோடு சேர்ந்து நானும் கண்ணனைத் தேடுகிறேன். நான் குறிப்பிடும் தமிழ் தேசியத்தின் ஆட்சி என்பது தமிழ் நாகரிகத்தின் ஆட்சி.

மார்க்ஸியர்களுடைய தோல்விக்கான முக்கியக் காரணமே, இந்த மண்ணின் தன்மையை அவர்களால் பெற முடியாததுதானே? திராவிட இயக்கத்தை எதிர்க்க வேண்டி இருந்ததாலேயே தமிழ் மரபையும் அவர்கள் ஒதுக்கினார்கள். திராவிட இயக்கத்தோடு தோழமையுடன் மார்க்ஸியர்கள் உரையாடியிருக்க வேண்டும். தமிழ் மெய்யியலை மார்க்ஸியர்கள் காண முடியாமல்போனது தற்செயலானது அல்ல. இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைமையை பிராமணத் தலைவர்கள் ஆக்கிரமித்திருந்ததன் விளைவையும், இங்கே கம்யூனிஸ்ட் கட்சிகளில் பிராமணியத்தின் தாக்கம் எப்படியெல்லாம் இருந்தது என்பதையும் ஆய்வுக்குள்ளாக்க வேண்டும்.

காந்தி, அம்பேத்கர், பெரியார் ஆகிய மூவர்தான் இந்தியாவின் மகத்தான இடதுசாரிகள். கொடிய சமத்துவ எதிரியான, ஒவ்வொரு இந்திய உடலுக்குள்ளும் உறைந்திருக்கும் தீண்டாமையின் ஆகிருதியை நமக்கு உணர்த்துகிறார் அம்பேத்கர். அந்தத் தீண்டாமையைத் தத்துவமாக மாற்றும், இந்தியாவின் வலிய எதிரியான பிராமணியத்தை எதிர்ப்பதற்காகவே ஒரு இயக்கத்தை உருவாக்கியதன் மூலம் அதனுடைய ஆகிருதியை உணர்த்துகிறார் பெரியார். எந்த அநீதிக்கும் எதிரான போராட்ட வடிவமான சத்தியாகிரகத்தை நமக்குத் தருகிறார் காந்தி. நாம் அத்தனை பேரும் சாகத் துணிந்து சாத்வீகமாக உட்கார்ந்துவிட்டால், எப்படியான அதிகாரமும் பணிந்துதான் ஆக வேண்டும். ஒரு சாமானிய இந்தியனுக்கு இவர்களைக் காட்டிலும் கைக்கொள்ளப் பற்றுக்கோல்கள் இல்லை.

இயற்கை இல்லாமல் நாம் இல்லை. இயற்கையின் கருணையில் நாம் வாழ்கிறோம். இடியும் புயலும்கூட நமக்கு நல்லவை. இயற்கை நம்மை வாழவைக்கிறது. நம்மைப் படைக்கிறது. வாழ்விக்கிறது. நம்மை அழித்து மீண்டும் படைக்கிறது. உயிர் இயக்கத்துக்கு ஓய்வு இல்லை. இந்த இயக்கத்தோடு நாம் இருக்கிறோம். இதற்குக் கடவுள் என்று பெயர் கொடுக்கிறார்கள். எதையும் எதிர்பாராமல் இயற்கை தருவதால் இது கடவுள். கடவுள் என்ற பெயருக்குப் பின்னால் இருப்பது இயற்கை.

மார்க்ஸியத்தை வெறும் பொருளாதார வாதமாக்குவதன் மூலம் இந்தியச் சூழலில் மார்க்ஸியம் தனது செழிப்பைப் பெற முடியாது. மார்க்ஸியம் தனது தத்துவத்தின் மூலம் இந்தியனை வெல்ல முடியும். மார்க்ஸியம் இந்தியத் தத்துவமாவதன் மூலமே உலகம் தழுவிய தத்துவமாகவும் முடியும். இந்தியாவில் தனது தத்துவ சாரத்தை இழந்துவிட்ட மார்க்ஸியம், இந்தியச் சமயங்களுக்குள் புகுந்துவருவதன் மூலம், தனது சாரத்தைப் பெற முடியும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

சினிமா

5 hours ago

விளையாட்டு

6 hours ago

வணிகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

க்ரைம்

7 hours ago

சுற்றுச்சூழல்

8 hours ago

க்ரைம்

8 hours ago

இந்தியா

8 hours ago

சினிமா

9 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

மேலும்