நாடகம்: சக்திக் கூத்து - சமகாலத்தின் மீது படரும் வரலாற்றின் நிழல்

By அரவிந்தன்

நவீன நாடகம் என்பது கதையைச் சொல்வதல்ல. பல்வேறு கதைகளை ஒன்று சேர்த்த கதையாடலாக அது உருப்பெறுகிறது. பல்வேறு கதைகள். பல்வேறு காலங்கள். பல்வேறு அதிர்வுகள். காலம் எல்லாவற்றையும் மாற்றிவிட்டாலும் சில விஷயங்கள் மாறுவதே இல்லை. பெண்கள் நடத்தப்படும் விதம் அவற்றில் ஒன்று. போர்கள் நடத்தப்படும் விதம் இன்னொன்று. ப்ரஸன்னா ராமஸ்வாமியின் நாடகங்களில் இந்த இரு படிமங்களும் திரும்பத் திரும்ப வருகின்றன. ஒவ்வொரு முறையும், ஒவ்வொரு காட்சியும், ஒவ்வொரு ஒலியும் ஒவ்வொரு அசைவும் நம் மன அரங்கில் புதுப் புது அதிர்வுகளை ஏற்படுத்துகின்றன. அண்மையில் சென்னையில் அரங்கேறிய சக்திக் கூத்தும் அப்படிப்பட்ட ஒரு நாடகம்தான்.

ப்ரஸன்னாவின் நாடகங்கள் மரபு நாடகங்களின் எல்லைகளை மட்டுமல்ல, நவீன நாடகங்களின் ஆகிவந்த எல்லைகளையும் மீறுகின்றன. இவரது நாடகங்கள், உள்ளடக்கத்தின் தீவிரம், சிக்கல், உட்சரடுகள் ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் வடிவத்தைக் கொண்டவை. எனவே இவை தமிழ் மேடையில் அதிகம் அறிமுகமாகியிராத வடிவத்தை இயல்பாகவே கைக்கொள்கின்றன.

சிக்கலை அதன் பன்முகத்தன்மையுடன் பிரதிபலிக்க முனையும் கலைஞர் அதற்கேற்ற வடிவத்தையே கைக்கொள்ள முடியும். இதைப் புரிந்துகொண்டால் ப்ரஸன்னாவின் நாடக வடிவத்தையும் புரிந்துகொள்ளலாம். செந்தமிழில் பேசும் பாத்திரங்கள் ஏன் திடீரென்று கொச்சை மொழியிலும் ஆங்கிலத்திலும் பேசுகிறார்கள்? வரலாற்றின் வெளியில் சஞ்சரிக்கும் காட்சிகளுக்கு இடையே நடிகர் பார்வையாளர்களைப் பார்த்து ஏன் பேசுகிறார்? அதுவும் தனது ஒப்பனை பற்றி? பாரதியாரின் கவிதைகளுக்கிடையே முத்துஸ்வாமி தீட்சிதரின் கீர்த்தனை யும் நவீன கவிதைகளும் ஒலிப்பது ஏன்? வசனங்களில் புராணிகமும் சமகாலத் தன்மையும் கலந்து வருவது ஏன்?

பாஞ்சாலி எழுப்பும் கேள்விகள்

எல்லாக் கேள்விகளுக்கும் தெளிவான பதிலை ப்ரஸன்னாவின் நாடகம் தந்துவிடாது. நாடகப் பிரதி எழுப்பும் வலுவான கேள்விகளைப் பின்தொடர்ந்து சென்றால் இந்தக் கேள்விகளுக்கும் விடைகள் கிடைக்கலாம். அப்படித் தேடிச் செல்லும்போது ப்ரஸன்னாவின் நாடகம் நம் மனதில் மேலும் வலுவுடன் உருக்கொள்வதை உணரலாம். வெவ்வேறு கூறுகளுக்கிடையில் இருக்கும் உள்ளார்ந்த தொடர்பை உணரலாம். வாய் மூடி இருக்கும் சபையையும், சப்பைக்கட்டு தர்மம் பேசும் பீஷ்மனையும், மகத்தான சக்தி படைத்தும் மௌனமாக இருக்கும் தன் தன் கணவர்களையும் பார்த்து துவாபர யுகத்துப் பாஞ்சாலி எழுப்பும் கேள்விகள் இன்றைய முள்ளிவாய்க்காலில் எதிரொலிப்பதைக் கேட்கலாம். மாபெரும் அநீதி, மாபெரும் மவுனம், கேட்பாரற்ற புலம்பல். இந்த மூன்றும் வரலாற்றின் ஒவ்வொரு திருப்புமுனையிலும் பெண்களுக்கும் அப்பாவி மக்களுக்குமான யதார்த்தங்களாக அமைந்திருப்பதை முகத்தில் அறைந்து சொல்கிறது நாடகம்.

சூதாடுவதற்கான அழைப்பை ஏற்று பாண்டவர்கள் பாஞ்சாலியுடன் வரும் வழியில் சூரிய அஸ்தமனக் காட்சியைப் பாரதியார் வர்ணிக்கிறார். ரோஹிணியின் உணர்ச்சிகரமான கண்களும் மொழிகளின் எல்லைகளைத் தாண்டிச் செல்லும் உடல் மொழியும் பொருத்தமான பாவங்களுடன் வெளிப்படும் உச்சரிப்பும் சேர்ந்து இந்தக் காட்சியை அற்புதமான கவிதையாக்குகின்றன. பாஞ்சாலிக்கு இழைக்கப்பட்ட அநீதியை வரலாற்றுப் பிரவாகத்தின் பின்னணியில் வைத்துக் காட்டும் நாடகத்தில் இப்படி ஒரு காட்சி. அழகான இந்தக் காட்சியை நாடகத்தின் விரிவான பின்புலத்தில் வைத்துப் பார்க்கும்போது வேறொரு பரிமாணம் எடுக்கிறது. சூரிய அஸ்தமனத்தைக் கண்டு ரசிக்கும் திரௌபதியால் பிறகு ஒருபோதும் எந்த சூரிய அஸ்தமனத்தைக் கண்டும் ரசித்திருக்க முடியாது.

போர் அழிக்கும் வாழ்வு

ஹஸ்தினாபுரத்து நிகழ்வுகள் அவள் வாழ்க்கையை முற்றிலுமாக மாற்றிவிடுகின்றன. போரில் மடியும், துயருறும் மக்களின் வாழ்க்கையும் இப்படித்தானே? தன்முனைப்பு, அதிகாரம், மண்ணாசை ஆகியவற்றின் பலிகடாக்கள் வரலாறெங்கும் எத்தனை கோடி? அவர்களும் சூரிய உதயத்தையும் அஸ்தனமத்தையும் பார்த்து ரசித்திருப்பார்கள் அல்லவா? கடலலைகளில் கால் நனைத்து மகிழ்ந்திருப்பர்கள் அல்லவா? அவர்களுக்குத் துளியும் சம்பந்தமற்ற போர் அவர்கள் வாழ்வை அழித்துவிடுகிறது அல்லது சீர்செய்ய முடியாதபடி கலைத்துவிடுகிறது. எந்தக் குற்றமும் செய்யாத பாஞ்சலியின் சோகம் வரலாற்றின் மீது பெரும் நிழலெனப் படர்கிறது. சக்திக் கூத்தினூடே நிகழும் மாயம் இது.

இயக்குநரின் கற்பனைகளுக்கும் பார்வைகளுக்கும் உயிர்கொடுப்பவர்கள் நடிகர்கள். ரோஹிணியும் ரேவதி குமாரும் பிரதியின் நுட்பங்களை நன்கு உள்வாங்கி உயிர்ப்போடு வெளிப்படுத்தினார்கள். கணந்தோறும் மாறும் ரோஹிணியின் முக பாவங்களும் காட்சியின் உணர்வுக்கேற்பப் பல வித அவதாரங்கள் எடுக்கும் உடல் மொழியும் பிரமிக்கவைத்தன. சூரிய அஸ்தமனத்தைக் கண்டு பரவசத்தில் ஆழும் உணர்வும், பீஷ்மரைக் கேள்வி கேட்கும் ரௌத்திரமும் கொத்துக் கொத்தாக மனிதர்கள் மடிவதை உணர்த்தும் பதைப்பும் அவர் முகத்திலும் குரலிலும் அற்புதமாக வெளிப்பட்டன. ரேவதி குமாரின் நளினமான நடன அசைவுகளும் பாவம் நிறைந்த இனிமையான குரலும் நாடக அனுபவத்துக்குச் செழுமை சேர்த்தன. மணிகண்டனின் இசை, ரவீந்திரனின் ஒளி அமைப்பு ஆகியவையும் சேர்ந்து இந்த அனுபவத்தை மறக்க முடியாததாக ஆக்கின.

ப்ரஸன்னா காட்டும் பாஞ்சாலி வெறும் பெண் அல்ல. அவள் சக்தி. அவளது வாழ்வின் மிக முக்கியமான தருணம் மனித குலம் என்றென்றைக்கும் மறக்க இயலாத சோகம். வரலாறு நெடுகிலும் பெண்களும் அப்பாவிப் பொதுமக்களும் நாதியற்ற அகதிகளும் பட்டுவரும் வேதனைகளின் படிமம் பாஞ்சாலி. அந்த வேதனைகளுக்குக் காரணமான அநீதிக்கு எதிரான வீறார்ந்த குரலும் அவள்தான். அநீதியை ஏற்க மறுக்கும் போராட்டத்தின் குரல். எத்தனை யுகமானாலும் அநீதிக்குப் பிராயச்சித்தம் கோரும் தகிப்பின் சுடர். பல்வேறு கலை வடிவங்கள், வெவ்வேறு இலக்கியப் பிரதிகள் இவற்றினூடே இத்தகைய பன்முக அனுபவங்களைச் சாத்தியப்படுத்திய ப்ரஸன்னாவின் சக்திக் கூத்து மறக்க முடியாத அனுபவமாக விளங்குகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

39 mins ago

சினிமா

2 hours ago

விளையாட்டு

3 hours ago

வணிகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

க்ரைம்

4 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

க்ரைம்

5 hours ago

இந்தியா

5 hours ago

சினிமா

6 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

மேலும்