360: ஜெர்மனியில் திருவள்ளுவர்

By செய்திப்பிரிவு

ஜெர்மனியில் திருவள்ளுவர்

ஜெர்மனியின் பாடன் உர்ட்டெம்பெர்க் மாநில அரசின் ஒப்புதலோடு, தமிழ் மரபு அறக்கட்டளையும் லிண்டன் அருங்காட்சியகமும் இணைந்து, டிசம்பர் 4, அன்று ஐரோப்பிய ஒன்றியத்தில் முதன்முறையாக இரண்டு ஐம்பொன்னாலான திருவள்ளுவர் சிலைகளை நிறுவியிருக்கின்றன. ஸ்டுட்கார்ட் நகரிலுள்ள லிண்டன் அரசு அருங்காட்சியகத்தின் சிறப்புப் பகுதியில் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. ஃப்ரெடரிக் காமரர், கார்ல் கிரவுல் ஆகியோரின் ஜெர்மானிய திருக்குறள் மொழிபெயர்ப்பு நூல்களும், கௌதம சன்னாவின் ‘திருவள்ளுவர் யார் - கட்டுக்கதைகளைக் கட்டுடைக்கும் திருவள்ளுவர்’ புத்தகமும், தமிழ் மரபு அறக்கட்டளையின் சார்பில் கதிரவன் உருவாக்கிய குழந்தைகளுக்கான திருக்குறள் மென்பொருளும், உலகத்தின் பல்வேறு தமிழறிஞர்கள் எழுதிய கட்டுரைகள் அடங்கிய விழா மலரும் அந்நாளில் வெளியிடப்பட்டன. ஐரோப்பியத் தமிழர்களின் தினமாகவும் அந்நாள் அறிவிக்கப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பு!

தமிழவனின் புதிய நாவல் ‘ஷம்பாலா’

தனது தனித்துவமான சிந்தனையின் மூலம் 1980-90களின் தமிழ் இலக்கியப் போக்கில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியவர் தமிழவன். பேராசிரியருக்கே உரிய கண்டிப்புடன் இலக்கிய உரையாடலை நிகழ்த்திய தமிழவனின் கட்டுரைகள் எல்லாம் வாசகர்களுக்கான பாடநூல் எனலாம். தமிழக அரசியல் வரலாற்றைப் பற்றிய அவரது அணுகுமுறையும் தனித்துவமானது. சமீபத்தில், ‘ஒரு அரசியல் நாவல்’ என்ற பிரகடனத்தோடு வெளிவந்திருக்கிறது தமிழவனின் புதிய நாவல் ‘ஷம்பாலா’. மேலும், இது நாவல்களுக்கான காலம்போல. எதிர்வரும் சென்னை புத்தகக்காட்சியை முன்னிட்டு இருபதுக்கும் மேற்பட்ட நாவல்கள் வெளிவரவிருக்கின்றன. சிறுகதைகளிலிருந்து நாவல் நோக்கிப் படையெடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள் இளம் எழுத்தாளர்கள்.

பிரபஞ்சன் நினைவு நாவல் பரிசுப் போட்டி

மறைந்த எழுத்தாளர் பிரபஞ்சனின் நினைவாக நாவல் பரிசுப் போட்டியை முன்னெடுத்திருக்கிறது டிஸ்கவரி புக் பேலஸ். முதலாம் ஆண்டு போட்டியில், ம.காமுத்துரையின் ‘குதிப்பி’, கீரனூர் ஜாகிர்ராஜாவின் ‘ஞாயிறு கடை உண்டு’, இளங்கோவின் ‘மெக்ஸிக்கோ’ ஆகிய நாவல்கள் பரிசை வென்றிருக்கின்றன. பிரபஞ்சனின் முதலாம் ஆண்டு நினைவு நாளான டிசம்பர் 21 அன்று தேவநேயப் பாவாணர் நூலக அரங்கில் விழா நடைபெறவுள்ளது. விருது விழாவில் பிரபஞ்சன் எழுதிய ‘மகாநதி’ நாவலைக் கதையாகச் சொல்கிறார் பவா செல்லதுரை. விருது பெற்ற மூன்று நாவல்களும் அன்றைய தினத்தில் வெளியிடப்படவிருக்கின்றன. விருதாளர்களுக்கு வாழ்த்துகள்!

சத்திய சோதனைத் தேர்வு

ஒவ்வொரு ஆண்டும் மாநில அளவில் மாணவர்களுக்கு சத்திய சோதனைத் தேர்வு நடத்தி பரிசு வழங்கிவருகிறது காந்தி கல்வி நிலையம். இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் விழா டிசம்பர் 9 அன்று காலை 11 மணியளவில் சென்னை தி.நகரிலுள்ள தக்கர் பாப வித்யாலயா வளாகத்தில் நடைபெறவுள்ளது. காந்தியச் சிந்தனைகளை முன்னெடுத்துச் செல்லும் பத்திரிகையாளர்களும், பதிப்பாளர்களும் இந்த விழாவில் சிறப்பிக்கப்படவிருக்கிறார்கள். மேனாள் நீதிபதி சந்துரு விருது வழங்கிக் கௌரவிக்க, பத்திரிகையாளர் கடற்கரை வாழ்த்துரை வழங்குகிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

49 mins ago

வலைஞர் பக்கம்

52 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

58 mins ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

மேலும்