வீணை தனம்மாள் - 150: கலை முன்னோடிக்கு ஒரு மரியாதை!

By வா.ரவிக்குமார்

ஜார்ஜ்டவுன் பகுதியில் ஒரு காலத்தில் கைகளால் இழுத்துச் செல்லப்படும் ரிக்சாக்கள் இருக்கும். அதன் பிறகு இப்போது சைக்கிள் ரிக்சாக்கள் அதிகம் புழங்கும் இடம் இது. ஜார்ஜ் டவுன் பகுதியிலிருக்கும் ராமகிருஷ்ண செட்டி தெருவிலிருந்த ஒருவரின் வீடுதான், அன்றைய நாளில் பல சங்கீத வித்வான்களுக்குமே இசையின் முகவரியாக இருந்தது.

கர்னாடக இசையில் பெரிதும் ஆர்வமுள்ள ரசிகர்கள், கலைஞர்கள் அனைவருமே அவரின் வீட்டுக்கு வாரம்தோறும் வெள்ளிக்கிழமை மாலையில் கூடிவிடுவார்கள். சில சமயங்களில் உள்ளூர்க் கலைஞர்கள், வெளியூரிலிருந்து வந்திருக்கும் கலைஞர்கள், முக்கியஸ்தர்களின் கூட்டம் அந்த வீட்டில் நடக்கும் இசை நிகழ்ச்சிக்குத் திரண்டிருக்கும். அந்நாளில் மிகவும் பிரபலமாக விளங்கிய அந்த இசை மேதையின் பெயர் வீணை தனம்மாள். அவருடைய மரபின் தொடர்ச்சியாகத்தான் பாலசரஸ்வதி, பிருந்தா, முக்தா போன்ற அடுத்தடுத்த தலைமுறையைச் சேர்ந்த கலைஞர்கள் உருவாகினார்கள்.

ஒரு பெரும் கலை மரபின் முன்னோடிகளுள் ஒருவரான வீணை தனம்மாளின் 150-வது பிறந்த ஆண்டு இது. அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக, வீணை தனம்மாளின் 150-வது பிறந்த நாள் விழாவை ‘பிருந்தா ரெபர்ட்டரி’ அமைப்பு இன்று முதல் ஆகஸ்ட் 9-வரை மயிலாப்பூர், ராகசுதா ஹாலில் கொண்டாடுகிறது. தொடக்க நாளில் காலை 9 மணிக்கு தனம்மாள் பாணி தொடர்பான காணொலிக் காட்சி (ஒருங்கிணைப்பு: பரத் சுந்தர்) நடைபெறவிருக்கிறது. தொடர்ந்து, சித்ரவீணா ரவிகிரணின் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மாலையில் வசந்த்குமாரின் வீணை இசையும், வீணை தனம்மாளின் நினைவைப் போற்றும் இசை நிகழ்ச்சியை ஹரிஹரன், அருணா ரங்கநாதன், திருவாரூர் கிரீஷ் ஆகியோர் வழங்குகின்றனர்.

ஆகஸ்ட் 7-ல் திருச்சி சிவகுமாரின் வீணை இசை, டி.எம். கிருஷ்ணாவின் இசை நிகழ்ச்சியும் ஆகஸ்ட் 8-ல் வீணை தனம்மாள் பாணி குறித்து ஸ்ரீராம் பரசுராமின் இசை அரங்கமும், ஹைதராபாத் சகோதரர்களின் இசை நிகழ்ச்சியும் நடக்கின்றன. ஆகஸ்ட் 9-ல் பாணி குறித்த குழு விவாதத்தில் எஸ்.சவுமியா, அருணா ரங்கநாதன், அனுராதா ஸ்ரீராம், ஸ்ரீராம் பரசுராம், சித்ரவீணா ரவிகிரண், திருவாரூர் கிரீஷ், அனிருத்தா நைட் ஆகியோர் பங்கேற்கின்றனர். இந்த விவாதத்தைத் தொடர்ந்து எஸ். சவுமியாவின் இசை நிகழ்ச்சி நடைபெறும். வீணை தனம்மாளும் அவருடைய கலை மரபும் நம் பாரம்பரியத்தின் பெருமிதங்களுள் ஒன்று. நம் கலை பொக்கிஷங்களையும் அவற்றை உருவாக்கிய பெருங்கலைஞர்களையும் நாம் மறந்துவிடலாகுமா? ஆகவே, அவரைச் சிறப்பிப்பது ஒரு தனி அமைப்போடு முடிந்துவிடக் கூடாது. மத்திய, மாநில அரசுகளும் பொதுச் சமூகமும் அந்த மாபெரும் கலைஞரின் 150-ம் ஆண்டைக் கொண்டாடிச் சிறப்பிக்க வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

23 mins ago

தமிழகம்

13 mins ago

சினிமா

21 mins ago

தமிழகம்

43 mins ago

க்ரைம்

59 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

44 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

க்ரைம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

மேலும்