தொடங்கியது வாசகர் திருவிழா

By சமஸ், டி. கார்த்திக்

தமிழக வாசகர்களின் உற்சாகத் திருவிழாவான சென்னைப் புத்தகக் காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது. தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கம் சார்பில் 37-வது ஆண்டாக நடத்தப்படும் இந்தப் புத்தகக்காட்சி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்வியியல் கல்லூரி மைதானத்தில் நடைபெறுகிறது.

பிரமாண்டமோ பிரமாண்டம்

சுமார் இரண்டு லட்சம் சதுர அடி பரப்பளவில் 777 அரங்குகளுடன் அமைக்கப்பட்டுள்ள இந்தப் பிரமாண்ட புத்தகக் காட்சியில் 435 தமிழ் பதிப்பாளர்கள், 263 ஆங்கிலப் பதிப்பாளர்கள், 59 ஊடகப் பதிப்பாளர்கள் பங்கேற்றுள்ளனர். ஏறத்தாழ ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளில் ஐந்து கோடிக்கும் மேற்பட்ட புத்தகங்களும், கல்வி தொடர்பான குறுந்தகடுகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் புதிய தலைப்புகள் மட்டும் மூவாயிரத்துக்கும் மேல்.

எதுவரை நடக்கிறது?

ஜனவரி 10-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நடைபெற உள்ள இந்தப் புத்தகக் காட்சி, வார நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும். விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும். ஜனவரி 11-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை பலருக்கும் தொடர் விடுமுறை நாட்கள் என்பதால், இந்த ஆறு நாட்களும் காலை 11 மணி முதல் இரவு 9 வரை புத்தகக் கண்காட்சிக்கு வரலாம்.

சிறாருக்கு இலவசம்

புத்தகக் காட்சிக்கு நுழைவுக் கட்டணமாக ரூ. 10 நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ஆனால், இந்த நுழைவுக் கட்டணம் 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத்தான்; சிறாருக்குக் கட்டணம் ஏதும் இல்லை. தவிர, இந்த ஆண்டு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு சுமார் ஏழு லட்சம் இலவச அனுமதிச் சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளதால், மாணவர்கள் தங்கள் பள்ளி, கல்லூரி நிர்வாகங்களை அணுகலாம்.

நிகழ்ச்சிகள்

நாள்தோறும் விழா அரங்கில் மாலை 6 மணி முதல் 9 மணி வரை கவியரங்கம், உரையரங்கம், கலைநிகழ்ச்சிகள், குறும்படங்கள் திரையீடு ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. படைப்பாளிகள் இந்நிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றனர்.

குழந்தைகளுக்குப் போட்டிகள்

குழந்தைகளிடையே வாசிப்புத் திறனை அதிகரிக்கும் வகையிலும் புத்தகக் காட்சி தொடர்பான விழிப்புணர்வை வளர்க்கும் வகையிலும், முதல்முறையாகப் பள்ளி மாணவர்களுக்குப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. தொடக்கப் பள்ளி மாணவர்களுக்குத் திருக்குறள் ஒப்புவித்தல் மற்றும் ஓவியப் போட்டியும், உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு பேச்சு மற்றும் ஓவியப் போட்டியும் நடத்தப்படுகின்றன (மேல் விவரங்களுக்கு: 94442 80158).

தள்ளுபடி

எல்லா ஆண்டுகளையும்போல இந்த ஆண்டும் புத்தகங்கள் 10% தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகின்றன; சில பதிப்பகங்கள் குறிப்பிட்ட சில புத்தகங்களுக்கு 50% வரையிலும்கூட தள்ளுபடி அளிக்கின்றன.

விருதுகள்

புத்தகக் காட்சியின் தொடக்க நிகழ்ச்சியில், இந்த ஆண்டின் சிறந்த தமிழறிஞர் விருது அவ்வை நடராஜனுக்கும் சிறந்த குழந்தை எழுத்தாளருக்கான விருதை எஸ்.பூவை அமுதனுக்கும் சிறந்த ஆங்கில நூல் எழுத்தாளர் விருது எம்.ஆர்.வெங்கடேஷுக்கும் சிறந்த பதிப்பாளருக்கான விருது அன்னம் பதிப்பகத்துக்கும் சிறந்த விற்பனையாளருக்கான விருது கிரி டிரேடிங் ஏஜென்ஸிக்கும் சிறந்த நூலகர் விருது மீனாட்சி சுந்தரம்; ரவிச்சந்திரன் ஆகியோருக்கும் சங்கத்தின் சார்பில் வழங்கப்பட்டன.

புத்தகக் காட்சி தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினர்களாக வேளாண் துறை இயக்குநர் எம்.ராஜேந்திரன், காவல்துறை இணை இயக்குநர் திருஞானம் பங்கேற்றனர். புத்தகக் காட்சியை உயர்நீதி மன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் தொடக்கி வைத்தார். முன்னதாக, தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கத் தலைவர் மெ.மீனாட்சி சோமசுந்தரம் வரவேற்றார்; செயலர் கே.எஸ்.புகழேந்தி நன்றி கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

41 mins ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

5 hours ago

விளையாட்டு

7 hours ago

சினிமா

7 hours ago

சுற்றுச்சூழல்

7 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

11 hours ago

வலைஞர் பக்கம்

11 hours ago

இந்தியா

11 hours ago

மேலும்