பார்த்திபன் கனவு 2: ராஜ குடும்பம்

By அமரர் கல்கி

பொன்னன் போன பிறகு, வள்ளி வீட்டுக் காரியங்களைப் பார்க்கத் தொடங்கினாள். குடிசையை மெழுகிச் சுத்தம் செய்தாள். மரத்தடியில் கட்டியிருந்த எருமை மாட்டைக் கறந்து கொண்டு வந்தாள். பிறகு காவேரியில் மரக் கிளைகள் தாழ்ந்திருந்த ஓரிடத்திலே இறங்கிக் குளித்துவிட்டு வந்தாள். சேலை மாற்றிக் கொண்ட பிறகு மறுபடியும் அடுப்பு மூட்டிச் சமையல் செய்யத் தொடங்கினாள்.

ஆனால், அவளுடைய மனது என்னமோ பரபரவென்று அலைந்து கொண்டிருந்தது. அடிக்கடி குடிசை வாசலுக்கு வந்து தன்னுடைய கரிய பெரிய கண்களைச் சுழற்றி நாலாபுறமும் பார்த்துவிட்டு உள்ளே போனாள். ஏதோ விசேஷ சம்பவங்கள் நடக்கப் போகின்றன என்று ஆவலுடன் எதிர்பார்த்தவளாய்த் தோன்றினாள்.

அவள் எதிர்பார்த்தது வீண் போகவில்லை. சற்று நேரத்துக்கெல்லாம் உறையூர்ப் பக்கத்தில் இருந்து பத்துப் பதினைந்து குதிரை வீரர்கள் வந்தார்கள். அவர்களுக்கு மத்தியில் அழகாக அலங்கரிக்கப்பட்ட இரண்டு வெள்ளைப் புரவிகளும் ஒரு தந்தப் பல்லக்கும் வந்தன. அந்த வெண் புரவிகளின் மேல் யாரும் வீற்றிருக்கவில்லை; பல்லக்கும் வெறுமை யாகவே இருந்தது. திடகாத்திர தேகிகளான எட்டுப்பேர் பல்லக்கைச் சுமந்து கொண்டு வந்தார்கள்.

எல்லோரும் தோணித்துறைக்குச் சற்று தூரத்தில் வந்து நின்றார்கள்; பல்லக்குக் கீழே இறக்கப்பட்டது. குதிரை மீதிருந்தவர்களும் கீழே இறங்கிக் குதிரைகளை மரங்களில் கட்டினார்கள்.

இதையெல்லாம் குடிசை வாசலில் நின்று வள்ளி கண்கொட்டா மல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவள் அப்படி நிற்பதைப் பார்த்த வீரர்களில் ஒருவன், “அண்ணே! வள்ளியிடம் தண்ணீர் வாங்கிக் குடித்துவிட்டு வரலாம்” என்றான்.

“அடே, வேலப்பா! காவேரி நிறையத் தண்ணீர் போகிறது. வள்ளி யிடம் என்னத்திற்காகத் தண்ணீர் கேட்கப் போகிறாய்?” என்றான் மற்றவன்.

“இருந்தாலும் வள்ளியின் கையால் தண்ணீர் குடிப்பது போல ஆகுமா, அண்ணே!”

இப்படி பேசிக்கொண்டு இருவரும் குடிசை யருகில் வந்து சேர்ந்தார்கள்.

“வள்ளி! கொஞ்சம் தாகத்துக்குத் தண்ணீர் தருகிறாயா?” என்று வேலப்பன் கேட்டான்.

வள்ளி உள்ளே விரைவாகச் சென்று சட்டியில் மோர் எடுத்துக்கொண்டு வந்து இரண்டு பேருக்கும் கொடுத்தாள். அவர்கள் குடிக்கும்போதே “மகாராஜா இன்றைக்கு உறையூ ருக்குப் போகிறாராமே? ஏன் இவ்வளவு அவசரம்? இந்த மாத மெல்லாம் அவர் ‘வசந்த மாளிகையில்' இருப்பது வழக்கமாயிற்றே?” என்று கேட்டாள்.

“எங்களை ஏன் கேட்கிறாய், வள்ளி? உன்னுடைய புருஷனைக் கேட் கிறதுதானே? படகோட்டி பொன்ன னுக்குத் தெரியாத ராஜ ரகசியம் என்ன இருக்கிறது?” என்றான் வேலப்பன்.

“காலையில் சாப்பிட உட்கார்ந்தார்; அதற்குள் அவசரமாய் ஆள் வந்து, மகாராஜாவுக்குச் சேதி கொண்டுபோக வேண்டுமென்று சொல்லவே, எழுந்து போய்விட்டார். சரியாகச் சாப்பிடக் கூட இல்லை!” என்றாள் வள்ளி.

“பாரப்பா, புருஷன் பேரில் உள்ள கரிசனத்தை! பெண்சாதி என்றால் இப்படியல்லவோ இருக்க வேணும்!” என்றான் வேலப்பன். வள்ளியின் கன்னங்கள் வெட்கத்தால் குழிந்தன. "சரிதான் போங்கள்! பரிகாசம் போதும்” என்றாள்.

“இல்லை வள்ளி! இந்த மாதிரி பரிகாசமெல்லாம் இன்னும் எத்தனை நாளைக்குச் செய்யப் போகிறோம்?” என்றான் வேலப்பன்.

“ஏன் இப்படியெல்லாம் பேசுகிறீர்கள்? என்ன சமாசாரம் என்றுதான் சொல்லுங்களேன்!” என்றாள் வள்ளி.

“பெரிய யுத்தம் வரப்போகிறதே, தெரியாதா உனக்கு?”

“ஆமாம்; யுத்தம் யுத்தம் என்றுதான் பேச்சு நடக்கிறது. ஆனால் என்னத்துக்காக யுத்தம் என்றுதான் தெரியவில்லை.”

“நாலைந்து வருஷமாய் நமது மகாராஜா, காஞ்சி நரசிம்மவர்ம சக்கரவர்த்திக்குக் கப்பம் கட்டவில்லை. வடக்கே படையெடுத்துப் போயி ருந்த சக்கரவர்த்தி திரும்பி வந்துவிட்டாராம்; நமது மகாராஜா நாலு வருஷமாய்க் கப்பம் கட்டாததற்கு முகாந்திரம் கேட்பதற்காகத் தூதர் களை அனுப்பியிருக்கிறாராம். அவர்கள் இன்றைக்கு வந்து சேர்வார்களாம்” என்றான் வேலப்பன்.

“இதற்காக யுத்தம் ஏன் வரவேண்டும்? நாலு வருஷத்துக் கப்பத்தையும் சேர்த் துக் கொடுத்து விட்டால் போகிறது!” என்றாள் வள்ளி.

“அதுதான் நம்முடைய மகாராஜாவுக்கு இஷ்ட மில்லை. முன் வைத்த காலைப் பின்வைக்க முடியாது என்கிறார்.”

இப்படி இவர்கள் பேசிக் கொண்டேயிருக்கும்போது நடு ஆற்றில் படகு வருவது தெரிந்தது. வேலப்பனும் இன்னொருவனும் உடனே திரும்பிப் போய் மற்றவர்களுடன் சேர்ந்து கொண்டார்கள். சிறிது நேரத் துக்கெல்லாம் படகு துறையை அடைந்தது. இது பொன்னன் போகும்போது தள்ளிக்கொண்டு போன சாதாரணப் படகல்ல; அழகிய வேலைப்பாடுகளுடன் ஒரு பக்கம் விமானம் அமைத்துச் செய்திருந்த ராஜ படகு.

படகின் விமானத்தில் மூன்று பேர் அமர்ந்தி ருந்தார்கள். அவர்களைப் பார்த் ததும் ராஜகுடும்பத்தினர் என்று தெரிந்து கொள்ளலாம். பார்த்திப சோழ மகாராஜாவும், அருள் மொழி மகாராணியும், இளவரசர் விக்கிரமனுந்தான் அவர்கள்.

அறையில் பூண்ட உடை வாளும், கையில் நெடிய வேலா யுதம் தரித்த ஆஜானுபாகுகளான இரண்டு மெய்க்காவலர்கள் படகின் இரு புறத்திலும் நின்று கொண்டிருந்தார்கள். பொன்னனும் இன்னொருவனும் படகு தள்ளிக் கொண்டு வந்தார்கள்.

- அடுத்த வெள்ளியன்று மீண்டும் கனவு விரியும்... | ஓவியங்கள் : பத்மவாசன்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

விளையாட்டு

27 mins ago

இந்தியா

45 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

53 mins ago

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

ஆன்மிகம்

51 mins ago

கருத்துப் பேழை

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

2 hours ago

உலகம்

2 hours ago

மேலும்