விசித்திர வாசகர்கள்!- தி.வே.கோபாலய்யர்: மாந்தக் கணினி

தமிழ் அறிஞர் தி.வே. கோபாலய்யர்! செய்யுள் நூல், உரைநடை நூல், கடினமான இலக்கண நூல் எதுவாக இருந்தாலும் அவற்றைப் படித்து மனனம் செய்துகொண்டு அந்த நூல்கள் பற்றி எப்போது கேட்டாலும் விளக்கம் தரும் வல்லமை பெற்றவர். அவரது வியக்கவைக்கும் வாசிப்பின் ஆற்றல் காரணமாக அவரை ‘மாந்தக் கணினி’ (human computer) என்றே தமிழ் ஆய்வாளர்கள் அழைத்தனர். சாதாரணப் பள்ளி ஆசிரியராய்ச் சேர்ந்து திருவையாறு அரசர் கல்லூரி முதல்வராக உயர்ந்து, புதுவை பிரெஞ்சு இந்தியவியல் கலை நிறுவனத்தில் மதிப்புறு பேராசிரியராகப் பணிபுரிந்தார்

புத்தகங்களைப் படித்து மனனம் செய்யும் இயல்பு இவரது இளம் வயதிலேயே ஏற்பட்டுவிட்டது. இதற்குக் காரணம், புத்தகங்களைக் காசு கொடுத்து வாங்க முடியாத வறுமையே. திருவையாற்றிலிருந்து தஞ்சைக்கு நடந்தே வருவாராம். அப்போது சீவகசிந்தாமணியில் இரண்டு இலம்பகங்கள் சொல்லி முடித்திருப்பார். நினைவிலிருந்து ஏற்கெனவே பதிவுசெய்து வைத்திருக்கும் புத்தகங்களைப் பதிவிறக்கம் செய்து வாசிப்பது அவர் வழக்கமாக இருந்தது.

நரசிம்ம அவதாரம் எத்தனை இடங்களில்?

தனது ஆசிரியர் புருஷோத்தம நாயுடு வைணவர் என்பதால் கோபாலய்யருக்கு நாலாயிர திவ்யப் பிரபந்தத்தின்மீது மிகுந்த நாட்டம் உண்டாயிற்று. கோபாலய்யரிடம் ஓர் அன்பர் வந்து “ஐயா, நாலாயிர திவ்யபிரபந்தம் முழுவதும் படித்துவிட்டேன், அதில் நரசிம்ம அவதாரம் பற்றிய குறிப்புகள் 18 இடங்களில் வருகின்றன” என்றார். கோபாலய்யர் “18 இடங்களில் அல்ல 178 இடங்களில் வருகிறது” என்று திருத்தினாராம். கம்பராமாயணத்தில் உள்ள 10,000 பாடல்களில் ஏறத்தாழ எட்டாயிரம் பாடல்கள் அவருக்கு மனப்பாடமாகத் தெரியும்.

அறிவுப் பசியின் தவிப்பு!

பழைய புத்தகக் கடை ஒன்றில் அரிய தமிழ் நூல் ஒன்றை கோபாலய்யர் கண்டார். அதன் விலை ரூ. 120 என்று கடைக்காரர் கண்டிப்பாகக் கூறினார்.

“சரி 110 ரூபாய்க்காவது தருவீரா?” என்று கோபாலய்யர் கேட்க, “சரி இந்தாருங்கள்” என்று கொடுத்திருக்கிறார் கடைக்காரர். பக்கத்தில் இருந்த நண்பர் கேட்டார். “அது என்ன 110 ரூபாய் கணக்கு?”

“வேறொன்றுமில்லை இன்று நான் வாங்கிய சம்பளம் ரூ.110 என் சட்டைப் பையில் இருந்தது. அதனால்தான் அந்தத் தொகையைக் கொடுத்தேன்” என்றாராம் கோபாலய்யர்.

ஆறு மாதக் கட்டிடம் இடிந்தது!

ஒருமுறை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் டாக்டர் வ.சுப. மாணிக்கம் இலக்கிய உரை ஆற்றியபோது அகத்திணையில் வரும் கைக்கிளை பற்றி தாம் மிகுந்த ஆராய்ச்சி செய்து ஆய்வேட்டைத் தயாரித்திருப்பதாகவும், இதுவரை இத்தகைய உறவு குறித்து எந்த இலக்கண நூலிலும் குறிப்பிடப்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.

கோபாலய்யர் எழுந்து, நான் இதை மறுக்கலாமா என்று கேட்டுவிட்டு, கைக்கிளை பற்றித் தொல்காப்பி யத்தில் இந்த இடத்தில் இன்ன சூத்திரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது என்றாராம். வ.சுப. மாணிக்கம், மிகுந்த நெகிழ்ச்சியுடன் “ஆறு மாத காலம் நான் உருவாக்கிய கட்டிடம் இடிந்து விழுந்துவிட்டது” என்றாராம்.

புத்தகத்தைப்பார்த்தபடி....

தமது அந்திமக் காலத்தில் ரங்கத்தில் வந்து தங்கினார் கோபாலய்யர். அப்போது ரங்கத்தில் மடத்தில் கோபாலய்யர் பதிப்பித்த திருமங்கை ஆழ்வார் பிரபந்தங்களின் மூன்றாவது தொகுதியை ஆண்டவன் சுவாமிகள் வெளியிடுவதாக இருந்தது. அப்போது கோபாலய்யர் உடல் நலம் குன்றி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அருகில் உதவிக்கு சந்தக்கவி ராமசாமி இருந்தார். ஒரு நாள் கோபாலய்யர் சொன்னார், “இன்று நூல் வெளியீட்டு விழா இன்னேரம் நடந்து முடிந்திருக்கும்.” சற்றைக்கெல்லாம் மடத்திலிருந்து சற்று முன் வெளியிடப்பட்ட நூலின் பிரதியும் பிரசாதமும் வந்து சேர்ந்தன.

அவற்றைப் பார்த்ததும் கோபாலய்யர் முகம் மலர்ந்தது. அவர் கண்கள் மெல்ல மூடின. தாம் விரும்பியபடியே புத்தக நிழலில் தன் இன்னுயிர் நீத்தார் கோபாலய்யர்.

கோபாலி, தொடர்புக்கு:- thanjavurkavirayar@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

க்ரைம்

4 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

க்ரைம்

4 hours ago

இந்தியா

4 hours ago

சினிமா

5 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

சுற்றுலா

6 hours ago

மேலும்