பார்த்திபன் கனவு 55: கண்ணீர்ப் பெருக்கு

By அமரர் கல்கி

“இளவரசருக்கு எப்படி அனுப்புகிறது? அவர் இருக்குமிடந்தான் யாருக்குத் தெரியும்? பாவம்! எந்தக் கண்ணில்லாத் தீவிலே என்ன கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறாரோ?” “அதற்காக இல்லை, வள்ளி! பல்லவ சக்கரவர்த்தி உறையூருக்கு வருகிறார் என்ற செய்தி தெரிந்தவுடனே மகாராணி எனக்கு இந்தக் கட்டளையை இட்டார். பல்லவ குலத்தாரின் வழக்கம் தெரியுமோ, இல்லையோ? நல்ல வேலைப்பாடான பொருள் எதைக் கண்டாலும் கொண்டு போய் விடுவார்கள். சிற்பிகள், சித்திரக்காரர்கள் இருந்தால், அழைத்துப் போய்விடுவார்கள். சுவரில் எழுதியிருக்கும் சித்திரங்களை மட்டுந்தான் அவர்களால் கொண்டுபோக முடியாது. அதற்காகத்தான் நமது பார்த்திப மகாராஜா உறையூரில் சித்திரக் காட்சி மண்டபம் மட்டும் ஏற்படுத்தியிருந்தார்!”

“ஐயையோ! அப்படியா சமாசாரம்? எனக்குத் தெரியாமல் போச்சே!”

“அதனால்தான் நான் சிவனடியாரிடம் பெட்டியைக் கொடுக்கத் தயங்கினேன். நீ ‘கொடு கொடு’ என்று அவசரப்படுத்தினாய்!”

“நான் என்ன செய்வேன்? அந்த அவசரத்தில், வேறு என்னதான் பண்ணியிருக்க முடியும்? இருந்தாலும், என் மனத்திற்குள் ஏதோ சொல்கிறது. பெட்டி பத்திரமாய் வந்துவிடும் என்று.”

“வந்தால் நல்லதுதான். இல்லாவிட்டால் மகா ராணியின் முகத்திலேயே நாம் விழிக்க முடியாது! ஆமாம்; அந்தச் சிவனடியார் யார் வள்ளி? அவரைப் பற்றி உனக்கு என்ன சந்தேகம்?”

அப்போது வள்ளி பொன்னன் காதோடு ஏதோ சொன்னாள். அதைக் கேட்டதும், அவனுக்கு உண்டான ஆச்சரியம் முகத்தில் தெரிந்தது. அதே சமயத்தில் வெளியில் குதிரைகளின் குளம்புச் சத்தம், பல்லக்குச் சுமப்பவர்களின் குரலொலி முதலியவை கேட்கவே, பொன்னன், வள்ளி இரண்டு பேருமே வியப்படைந்து குடிசை வாசலுக்கு வந்து பார்த்தார்கள்.

வள்ளியும் பொன்னனும் குடிசைக்கு வெளியில் வந்தபோது பார்த்திப மகாராஜாவின் காலத்திற்குப் பிறகு அவர்கள் பார்த்திராத அதிசயமான காட்சியைக் கண்டார்கள். உறையூர்ப் பக்கத்திலிருந்து காவேரிக் கரைச் சாலை வழியாக அரச பரிவாரங்கள் வந்து கொண்டிருந்தன. குதிரை வீரர்களும், காலாட் படைகளும், கொடி, பரிவட்டம் அலங்கரித்த உயர்ஜாதிப் புரவிகளும், இராஜ ஸ்திரீகளுக்குரிய முத்து விதானம் கட்டிய தந்தப் பல்லக்குகளும் வந்து கொண்டிருந்தன.

இந்த இராஜ பரிவாரமெல்லாம் தோணித் துறைத் தோப்பில் வந்து இறங்கத் தொடங்கியபோது, ஓடக் காரப் பொன்னனும், அவன் மனைவியும் ஆச்சரியக் கடலில் மூழ்கினார்கள்.

இதோடு ஆச்சரியம் முடிந்தபாடில்லை. காவேரி நதியில் அதே சமயத்தில் ஒரு விந்தைக் காட்சி காணப் பட்டது. உறையூர்ப் பக்கத்திலிருந்து அலங்கரித்த பல படகுகள் அன்னப் பட்சிகளைப் போல் மிதந்து கிழக்கு நோக்கி வந்து கொண்டிருந்தன.

அவற்றின் நடுவில் சிங்கக்கொடி பறந்த அழகிய படகைப் பார்த்ததும், சக்கரவர்த்தியும் அவருடைய பரிவாரங்களுந்தான் வருகிறார்கள் என்பது பொன்னனுக்குத் தெரிந்து போயிற்று.

ஒரு வேளை அந்தப் படகுகள் எல்லாம் இந்தத் தோணித் துறைக்குத்தான் வருமோ என்று பொன்னன் எண்ணமிட்டுக் கொண்டிருக்கையிலேயே, படகுகளின் திசைப்போக்கு மாறியது! காவேரியைக் குறுக்கே கடந்து, வசந்தத் தீவை நோக்கி அவை செல்லத் தொடங்கின. "ஓகோ! சக்கரவர்த்தி வசந்தத் தீவுக்கு ஏன் போகிறார்? ஒருவேளை மகாராணியைப் பார்க்கப் போகிறாரோ?" என்று பொன்னன் நினைத்தான். உடனே, தோப்பில் வந்து இறங்கிய வீரர்களிடம் நெருங் கிப்போய் விசாரித்தான். அவன் எண்ணியது உண்மை யென்று தெரிந்தது. சக்கரவர்த்தியுடன், குந்தவிதேவி, சிறுத்தொண்டர், அவருடைய பத்தினி முதலியோர் அருள்மொழி ராணியைப் பார்க்க வசந்தத்தீவுக்குப் போகிறார்களென்று அறிந்தான். மேலும், விசாரித்து அவர்கள் அங்கிருந்து திரும்பி இந்தத் தோணித் துறைக்கு வருவார்களென்றும் இங்கிருந்து சிறுத்தொண்டர் கீழச் சோழநாட்டுக்கு யாத்திரை போகிறார் என்றும் சக்கரவர்த்தியும் குந்தவிதேவியும் உறையூருக் குத் திரும்புகிறார்கள் என்றும் தெரிந்து கொண்டான்.

அந்தச் சமயம் வசந்தத் தீவில் தானும் இருக்க வேண்டும் என்றும், என்ன நடக்கிறதென்று தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் பொன்னனுக்கு உள்ளம் துடித்தது. ஆனால், அந்த ஆவலை வள்ளியிடம் தெரிவித்தபோது அவள், "நன்றாயிருக்கிறது! சக்கரவர்த்தி அங்கே போயிருக்கும் போது, அவருடைய கட்டளையில்லாமல் நீ ஏன் அங்கே போக வேண்டும்? என்ன நடக்கிறதென்று தானே தெரிகிறது. அவசரம் என்ன?" என்றாள்.

எனவே, பொன்னன் துடிதுடித்துக் கொண்டு இக்கரையிலேயே இருந்தான். ஒரு முகூர்த்த காலம் ஆயிற்று. வசந்தத்தீவின் தோணித் துறையில் கலகலப்பு ஏற்பட்டது. பலர் அங்கே கும்பலாக வந்தார்கள். படகுகளிலும் ஏறினார்கள். படகுகள் இக்கரையை நோக்கி வரத்தொடங்கின.

வருகிற படகுகளை மிகவும் ஆவலுடன் வள்ளியும் பொன்னனும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அருகில் நெருங்க நெருங்கப் படகுகளில் இருந்தவர்கள் கண்ணுக்குத் தெரிய ஆரம்பித்தார்கள். சிங்கக்கொடி கம்பீரமாகப் பறந்த படகிலே சக்கரவர்த்தியும், ஒரு மொட்டைச் சாமியாரும் இருந்தார்கள்.

இதற்குள் அவர்களுடைய பார்வை இன்னொரு படகின் மேல் சென்றது. அதில் மூன்று பெண்மணிகள் இருந்தார்கள்? அருள்மொழித்தேவி போல் அல்லவா இருக்கிறது?

ஆமாம். அருள்மொழித் தேவிதான். படகு கரையை அடைந்து எல்லாரும் இறங்கியபோது, பொன்னனும் வள்ளியும் வேறு யாரையும் பார்க்கவுமில்லை; கவனிக்க வுமில்லை. அருள்மொழித்தேவியின் காலில் விழுந்து எழுந்து அவள் முகத்தையே பார்த்துக் கொண்டு திகைத்து நின்றார்கள்.

அருள்மொழித்தேவி அவர்களை நோக்கித் தழு தழுத்த குரலில் கூறினாள்:- "பொன்னா! வள்ளி! என்னால் இங்கே தனியாகக் காலங் கழிக்க முடியவில்லை. நான் திவ்ய ஸ்தல யாத்திரை போகிறேன். நீங்கள் என்னைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். இந்தத் தோணித் துறையிலேயே இருந்து கொண்டிருங்கள். ஒருவேளை எப்போதாவது மறுபடியும் திரும்பி வந்தால்..."

இச்சமயம் பொன்னன் - வள்ளி இவர்கள் கண்களில்கண்ணீர் பெருகுவதை அருள்மொழித்தேவி கண்டதும், அவளுக்கும் கண்களில் நீர் துளிர்த்தது. பேச முடியாமல் தொண்டையை அடைத்தது. பக்கத்திலிருந்த சிவவிரதை யின் கரத்தைப் பிடித்துக் கொண்டு மேலே நடக்கத் தொடங்கினாள்.

- மீண்டும் கனவு விரியும்...

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 min ago

சுற்றுச்சூழல்

24 mins ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

4 hours ago

வலைஞர் பக்கம்

4 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

5 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்