ஏவி.எம்மின் 70 ஆண்டுகால வரலாறு!

By வெ.சந்திரமோகன்

மிழ்த் திரையுலக வரலாற்றில் தவிர்க்க முடியாத பெயர் ஏவி.எம். டி.ஆர்.மகாலிங்கம், சிவாஜி கணேசன், கமல்ஹாஸன், வி.கே.ராமசாமி, வைஜெயந்தி மாலா, சிவக்குமார் உள்ளிட்ட ஏராளமான திரைக் கலைஞர்களை அறிமுகப்படுத்திய நிறுவனம். பாரதியின் பாடல்களைத் திரைப்படத்தில் முதன்முதலில் பயன்படுத்திய நிறுவனம். தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் மிகப் பெரிய வெற்றிப் படங்களைத் தந்த நிறுவனம் என பட்டியலுக்குள் அடங்காதவை ஏவி.எம்மின் சிறப்புகள். இப்புத்தகத்தில் ஏவி.எம். நிறுவனத்தின் தொடக்கம், வளர்ச்சி, சவால்கள், சாதனைகள் பற்றி ஏவி.எம்.சரவணன் பதிவுசெய்திருக்கும் தகவல்கள், திரையுலக வரலாற்றைத் தெரிந்துகொள்ள விரும்புபவர்களுக்கும் புதிய தகவல்களைத் தரும்!

1910-களிலேயே காரைக்குடியில் ‘ஏவி. அண்ட் சன்ஸ்’ எனும் பெயரில் சூப்பர் மார்க்கெட்டைத் தொடங்கிய ஆவிச்சி செட்டியாரின் மகன்தான் ஏவி.மெய்யப்ப செட்டியார். இளம் வயதிலேயே கடைப் பொறுப்பு கைக்கு வந்தது. துணிச்சலும், புத்திக்கூர்மையும் கொண்ட மெய்யப்ப செட்டியார் அதைத் திறம்படக் கையாண்டார். ஒரு கட்டத்தில் திரைப்படத் துறையில் ஆர்வம் வர, பிறருடன் இணைந்து படங்கள் தயாரித்தார். சினிமாவின் சூட்சுமம் கைவராததால் தோல்விகள்தான் கிடைத்தன. எனினும், துவண்டுவிடாமல் தொடர்ந்து உழைத்து வெற்றிகளைச் சுவைத்தார். உண்மையில், அவர் எதிர்கொண்ட பிரச்சினைகள்தான், அடுத்தட்ட நகர்வுகளுக்கு அவரை உந்தித்தள்ளியிருக்கின்றன. இரண்டாம் உலகப் போர் காரணமாக சென்னையில் மின்சார இணைப்புகள் கிடைப்பதில் பிரச்சினை வந்ததும் தேவக்கோட்டையில் ஸ்டுடியோவைத் தொடங்கியவர் அவர். அங்கு வாடகைத் தொகை அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஏவி.எம். ஸ்டுடியோவை சென்னைக்குக் கொண்டுவந்தார். ஒரு பெரிய அரங்கைப் பிரிக்காமல் அப்படியே லாரியில் கொண்டுவந்ததைப் பதிவுசெய்திருக்கிறார் சரவணன்.

நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு முதல் கதை விவாதம் வரை மெய்யப்ப செட்டியார் காட்டிய அக்கறையும் ஈடுபாடும் பல வெற்றிகளைத் தந்திருக்கின்றன. படத்துக்கு ஒரு கலைஞர் அவசியம் என்றால் சம்பளம் பற்றிக் கவலைப்படாமல் அவரை ஒப்பந்தம் செய்வது மெய்யப்ப செட்டியாரின் குணம். அதேசமயம், தயாரிப்பு நிர்வாகத்தில் ஈடுபட்டிருக்கும் தனது மகன்களோ அல்லது முக்கிய நபர்களோ முன்வைக்கும் யோசனைக்கும் செவிசாய்ப்பவராகவும் இருந்திருக்கிறார். ‘பராசக்தி’ படத்தில் சிவாஜி கணேசன் ஒப்பந்தம் செய்யப்பட்டபோது, அவரது தோற்றத்திலும் நடிப்பிலும் மெய்யப்ப செட்டியாருக்குத் திருப்தி இல்லை. பங்குதாரரான பெருமாளுக்கோ சிவாஜியை விட மனமில்லை. நல்ல சாப்பாடு, உடற்பயிற்சி, தனி அறை என்று சிவாஜிக்கு சிறப்பு வசதிகள் செய்துகொடுக்கப்பட்ட பிறகு எல்லாம் மாறியது. திரைத் துறையில் தனக்குக் கிடைத்த முதல் வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்திக்கொண்டு சிவாஜி அடைந்த வெற்றி மெய்யப்ப செட்டியாரை ஆச்சரியப்படுத்தியது. அவரது பரம ரசிகரானார். தமிழுக்கு ஒரு மாபெரும் கலைஞர் கிடைத்தார்.

பிற தயாரிப்பு நிறுவனங்களுடன் மெய்யப்ப செட்டியார் கொண்டிருந்த நல்லுறவு நிச்சயம் வணிகரீதியானது மட்டுமல்ல. அதனால்தான் எஸ்.எஸ்.வாசன், நாகிரெட்டியார் போன்ற தயாரிப்பாளர்களின் நன்மதிப்பையும் அவரால் பெற முடிந்தது. மெய்யப்ப செட்டியாருக்குப் பிறகு சகோதர்களுடன் இணைந்து தயாரிப்புப் பணியில் முழுமையாக ஈடுபட்டவர் சரவணன். தயாரிப்பு நிர்வாகத்தில் தனக்கு இருந்த அனுபவம், நடிகர்கள், இயக்குநர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களுடன் இருந்த நெருங்கிய நட்பு ஆகியவை தனக்குப் பெரும் உதவியாக இருந்ததை இப்புத்தகத்தில் அவர் பதிவுசெய்திருக்கிறார். ஒரு இடைவெளிக்குப் பிறகு, 1980-ல் ஏவி.எம். தயாரித்த ‘முரட்டுக்காளை’, ‘சகலகலாவல்லவன்’ படங்கள் வணிகத்தை எங்கோ கொண்டுசென்றன; இரு பெரும் நாயகர்களை எப்படி உருவாக்கின என்று தெரிந்துகொள்ள விரும்புபவர்களுக்கும் நிறைய செய்திகள் புத்தகத்தில் இருக்கின்றன. அந்த வகையில், திட்டமிட்ட தயாரிப்புப் பணிகள், குறித்த நேரத்தில் வெளியீடு ஆகிய விஷயங்களில் ஏவி.எம். நிறுவனம் காட்டிய ஈடுபாடு எளிதில் புறந்தள்ள முடியாதது.

பொதுவாக, திரை நட்சத்திரங்களின் வாழ்வில் நடந்த சம்பவங்கள் தொடர்பாக வாய்மொழித் தகவல்களை வைத்து எழுதப்படும் தகவல்களுக்கு மத்தியில், நேரடியான அனுபவம் கொண்ட சரவணன் எழுதியிருக்கும் பல தகவல்கள் திரை ஆய்வாளர்களுக்கும் ஆர்வலர்களுக்கும் மிக முக்கியமானவை எனலாம். சிவாஜிக்கும் அசோகனுக்கும் இடையில் இருந்த கசப்புணர்வு, இருவரும் ஒரே படத்தில் (‘உயர்ந்த மனிதன்’) நடிக்கும்போது பரஸ்பரம் காட்டிய பகை, வெளிப்புறப் படப்பிடிப்பில் நடனக் காட்சிகள், சண்டைக் காட்சிகளைத் தவிர்ப்பதில் எம்.ஜி.ஆர். காட்டிய அக்கறை, ‘பாக்யராஜ் படமா ஆளை விடுங்கள்’ என்று இளையராஜா காட்டிய தயக்கம் என்று சுவாரஸ்யமான பல தகவல்கள் பதிவாகியிருக்கின்றன. திரைத் துறை சார்ந்த நிகழ்ச்சிகளில் பணிவுடன் கைகட்டி நிற்கும் சரவணன், இயல்பில் அபாரமான நகைச்சுவை உணர்வு கொண்டவர் என்பது அவர் குறிப்பிட்டிருக்கும் பல தகவல்களில் தெரியவருகிறது. ஏவி.எம். நிறுவனத்தின் 70 ஆண்டுகால வரலாற்றை எளிமையான நடையில் பதிவுசெய்திருக்கும் புத்தகம் இது!

- வெ.சந்திரமோகன்,

தொடர்புக்கு: chandramohan.v@thehindutamil.co.in

நானும் சினிமாவும்

ஏவி.எம்.சரவணன்

தினத்தந்தி பதிப்பகம்

வேப்பேரி, சென்னை-7

விலை: ரூ. 250

தொடர்புக்கு: 044-25303336

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

8 mins ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

8 hours ago

விளையாட்டு

9 hours ago

வணிகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

10 hours ago

க்ரைம்

10 hours ago

சுற்றுச்சூழல்

11 hours ago

க்ரைம்

11 hours ago

மேலும்