தீர்ந்த சுனை, காய்ந்த பனை

By ப.கலாநிதி

தஞ்சாவூரில் உள்ள தென்னகப் பண்பாட்டு மையமும் உதிரி நாடக நிலமும் இணைந்து உலக நாடக நாள் விழாவை சமீபத்தில் கொண்டாடின. அதையொட்டி நாடகக் கலைஞர் கு.விஜயகுமாரின் ‘மாள்வுறு’ என்கிற நவீன நாடகம் நிகழ்த்தப்பட்டது. அன்னை வேளாங்கண்ணி கலை, அறிவியல் கல்லூரியின் முதலாமாண்டு மாணவர்கள் சுமார் 30 பேர் பங்கேற்ற இந்த நாடகம், பசுமையான சூழலில் அழகான திறந்தவெளி அரங்கு, தரமான ஒளி - ஒலி அமைப்புகள், அளவான ஒப்பனைகள், நேர்த்தியான திரைக்கதை என வித்தியாசமான கலை அனுபவத்தை வழங்கியது.

காவிரி நீர் உரிமைக்கு மறுப்பு, மீனவர்கள் கடலில் கொல்லப்படுவது, கச்சத்தீவில் இழந்த உரிமை, கூடங்குளம் மக்களின் போராட்டம், சாதிய மோதல்கள், மத வெறுப்புவாதம், நாட்டு விதைகளை மரபணு மாற்றுதல், மீத்தேன் - ஹைட்ரோ கார்பன் - நியூட்ரினோ போன்றவற்றுக்காக இயற்கை வளங்கள் சூறையாடப்படுவது என தமிழகத்தின் சமகாலப் பிரச்னைகள் அனைத்தும் இந்நாடகத்தில் பேசுபொருளாக்கப்பட்டிருந்தது.

தன்னை பாதிக்கக்கூடிய எந்தப் பிரச்னையாக இருந்தாலும் ‘பார்த்துக் கொள்ளலாம்’ என்று அலட்சியமாகக் கடந்துசெல்லும் குடிமக்கள் இருக்கும்வரை அவர்கள் மீது கொடுங்கோன்மை மட்டுமே ஏவப்படும் என்பதை தொடக்கத்திலேயே சில காட்சிகளின் மூலமாக அழுத்தமாகப் பதிய வைத்துவிடுகிறார் கு.விஜயகுமார். தண்ணீர் உரிமையைத் தனியாருக்கு ஏலம் விட முடிவு செய்கிறது அரசு. அதற்கிணங்கி தங்களது தண்ணீர் உரிமையை விட்டுத்தரும் ஒவ்வொருவருக்கும் பிரதிபலனாக அழகிய பரிசுப் பெட்டி வழங்கப்படுகிறது. அதனுள்ளே விலையுயர்ந்த அதி நவீன கைப்பேசியும், அதனுடன் எப்போதும் யாருடனும் பேசிக் கொள்ளலாம் என்கிற வகையிலான தொலைதொடர்பு வசதியும் இருக்கின்றன. மக்கள் அனைவரும் மதிமயங்கி, அந்தக் கைபேசிக்குள்ளாகவே மூழ்கிப் போகிறார்கள்.

சில ஆண்டுகள் கழித்துப் பார்த்தால், ஊரில் ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லை, விவசாயம் இல்லை, உணவு உற்பத்தி இல்லை. யாரெல்லாம் தண்ணீர் ஏலத்திற்கு இணங்கி உரிமையை விட்டுக்கொடுத்தார்களோ, அவர்களே தாகத்தால் இறக்கிறார்கள். சிலர் உணவின்றி இறக்கிறார்கள். மீதமுள்ள இடங்களில் சாதி-மத-மொழி-இன அடிப்படையில் கலவரங்களும் போர்களும் கட்டவிழ்த்துவிடப்படுகின்றன. விளைவாக, உலகின் அனைத்து நாடுகளும் ‘கவர்ன்மெண்ட் ஆஃப் வேர்ல்ட்’ன் கீழ் காலனி நாடுகளாகின்றன. தண்ணீர் என்கிற அடிப்படை உரிமையில் கைவைக்கும்போதே மக்கள் விழிப்புணர்வோடு இருந்திருந்தால் இப்படி ஆகியிருக்குமா? என அனைத்தையும் இழந்தவர்கள் கேட்கிறார்கள். நிறைவாக, ‘கொலைவாளினை எடடா’ பாடலோடு நாடகம் நிறைவுறுகிறது.

நாடக இயக்குனர் கு.விஜயகுமாரே, இசையமைத்திருந்தார். மூங்கில் கொம்புகள், குமிழ்தேக்கு விதைகள் என எளிய பொருட்களை வைத்துக் கொண்டே மாறுபட்ட இசையை காட்சிக்குக் காட்சி வழங்கினார். ‘தீர்ந்த சுனை, காய்ந்த பனை, நேர்ந்த வினை’ என நாடகத்தின் உள்ளடக்கம் குறித்து ஒற்றை வரியில் குறிப்பிட்டார் விஜயகுமார். உள்ளடக்கம் எல்லாக் காட்சிகளிலும் எதிரொலித்தது.

- ப.கலாநிதி, தொடர்புக்கு: b.kalanidhi@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

க்ரைம்

4 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

க்ரைம்

4 hours ago

இந்தியா

4 hours ago

சினிமா

5 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

சுற்றுலா

6 hours ago

மேலும்