பார்த்திபன் கனவு- பாகம் 2: அத்தியாயம் 4 | வம்புக்கார வள்ளி

By செய்திப்பிரிவு

வம்புக்கார வள்ளி

“எ

ங்கள் ராணியைவிட அழகாயிருப்பாளா? சொல்லுங்கள்.”

“உங்கள் ராணி அவ்வளவு அழகா என்ன?”

“எங்கள் ராணியா? இல்லை, இல்லை! எங்கள் ராணி அழகே இல்லை. சுத்த அவலட்சணம். உங்கள் சக்கரவர்த்தி மகள்தான் ரதி...”

“என்ன வள்ளி, இப்படிக் கோபித்துக்கொள்கிறாய்?”

“பின்னே என்ன? எங்கள் ராணியை நீங்கள் எத்தனையோ தடவை பார்த்திருந்தும் இப்படிக் கேட்கிறீர்களே? அருள்மொழித் தேவியைப் போல் அழகானவர் இந்த ஈரேழு பதினாலு உலகிலும் கிடையாது...”

“நான்தான் சொன்னேனே, அம்மா! ஆண்டியாகிய எனக்கு அழகு என்ன தெரியும்? அவலட்சணந்தான் என்ன தெரியும்?”

“உங்களுக்குத் தெரியாது என்றுதான் தெரிகிறதே! ஆனால் காஞ்சி சக்கரவர்த்தியை எப்போதாவது பார்த்தால் கேளுங்கள்; அவர் சொல்லுவார். அருள்மொழித் தேவிக்கும் பார்த்திப மகாராஜாவுக்கும் கலியாணம் ஆவதற்கு முன்னால் நடந்த செய்தி உங்களுக்குத் தெரியுமா? அருள்மொழித் தேவியின் அழகைப் பற்றி நரசிம்மவர்மர் கேள்விப்பட்டு “அருள்மொழியைக் கலியாணம் செய்துகொண்டால் செய்துகொள்வேன்; இல்லாவிட்டால் தலையை மொட்டையடித்துக் கொண்டு புத்த சந்நியாசியாகப் போய்விடுவேன்” என்று பிடிவாதம் செய்தார். ஆனால் அருள்மொழித் தேவிக்கு அதற்கு முன்பே பார்த்திப மகாராஜாவுடன் கலியாணம் நிச்சயமாகிவிட்டது. இன்னொரு புருஷனை மனதினால்கூட நினைக்கமாட்டேன் என்று கண்டிப்பாய்ச் சொல்லி, கடைசியில் பார்த்திப மகாராஜாவையே கலியாணம் செய்துகொண்டார்.”

சிவனடியார் முகத்தில் மந்தகாசம் தவழ, “ஆமாம் அம்மா! நரசிம்மவர்மர் அப்புறம் என்ன செய்தார்? தலையை மொட்டை அடித்துக்கொண்டு பௌத்த பிக்ஷு ஆகிவிட்டாரா?” என்று கேட்டார்.

“ஆண் பிள்ளைகள் சமாசாரம் கேட்க வேண்டுமா? சுவாமி! அதிலும் ராஜாக்கள், சக்கரவர்த்திகள் என்றால் மனது ஒரே நிலையில் நிற்குமா? அப்புறம் அவர் பாண்டிய ராஜகுமாரியைக் கலியாணம் செய்துகொண்டார்.

இன்னும் எத்தனை பேரோ, யார் கண்டது? நான் மட்டும் ராஜகுமாரியாய்ப் பிறந்திருந்தால் எந்த ராஜாவையும் கலியாணம் செய்துகொள்ள மாட்டேன். அரண்மனையில் பத்துச் சக்களத்திகளோடு இருப்பதைக் காட்டிலும், கூரைக் குடிசையில் ஒருத்தியாயிருப்பது மேலில்லையா?” சிவனடியார் கலகலவென்று சிரித்தார். “நீ சொல்வது நிஜந்தான் அம்மா! ஆனால் நரசிம்மவர்மன் நீ நினைப்பதுபோல் அவ்வளவு பொல்லாதவன் அல்ல...” என்றார்.

“இருக்கட்டும் சுவாமி! அவர் நல்லவராகவே இருக்கட்டும். அவர்தான் உங்களுக்கு ரொம்ப வேண்டியவர் போலிருக்கிறதே! ஒரு காரியம் செய்யுங்களேன்? சக்கரவர்த்தியின் மகளை எங்கள் இளவரசருக்குக் கலியாணம் செய்துவைத்து விடுங்களேன்! சண்டை, சச்சரவு எல்லாம் தீர்ந்து சமாதானம் ஆகிவிடட்டுமே.”

“நல்ல யோசனைதான் வள்ளி! ஆனால் என்னால் நடக்கக்கூடிய காரியம் அல்ல.

நீ வேண்டுமானால் சக்கரவர்த்தியைப் பார்த்துச் சொல்லேன்...”

“நான் சக்கரவர்த்தியை எப்போதாவது பார்த்தால் நிச்சயமாய்ச் சொல்லத்தான் போகிறேன். எனக்கு என்ன பயம்?” என்றாள்.

அச்சமயத்தில், படகு கரைக்கு வந்துசேர்ந்த சத்தம் கேட்டது.

வள்ளி, “படகு வந்துவிட்டது” என்று சொல்லிக்கொண்டு குடிசைக்கு வெளியே வந்தாள்.

- மீண்டும் கனவு விரியும்...

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

54 mins ago

கருத்துப் பேழை

50 mins ago

சுற்றுலா

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

34 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

12 mins ago

மேலும்