'ஓர் அசிங்கம்' - பாலியல் வழக்குகளில் இரு விரல் பரிசோதனை கூடவே கூடாது... ஏன்?

By கற்பகவள்ளி

பாலியல் வழக்குகளில் இரு விரல் பரிசோதனைக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில்,
இந்தப் பரிசோதனை முறையின் பிற்போக்குத்தனங்களையும், மோசமான விளைவுகளையும் பகிர்கிறார் வழக்கறிஞர் அஜிதா.

சமீபத்தில் மதுரை உயர் நீதிமன்ற கிளை நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், என்.சதீஷ்குமார் ஆகியோர் பிறப்பித்த ஓர் உத்தரவில், "இரு விரல் பரிசோதனைக்கு முடிவு கட்ட வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. பாலியல் வழக்குகளில் குறிப்பாக இளம் வயதினர் சம்பந்தப்பட்ட பாலியல் வழக்குகளில் இரு விரல் பரிசோதனை அமலில் உள்ளது. இந்த சோதனை தனியுரிமை மீறல் என 2013-ல் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. பல்வேறு உயர் நீதிமன்றங்களும் இந்த பரிசோதனையை நிறுத்த வேண்டும் என்று கூறியுள்ளது. எனவே, இரு விரல் பரிசோதனை தொடர்வதை அனுமதிக்க முடியாது. தமிழக அரசு உடனடியாக இரு விரல் பரிசோதனைக்கு தடை விதிக்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தனர்.

இரு விரல் பரிசோதனை என்றால் என்ன? இதற்கு முற்றிலும் தடை விதிக்கப்பட வேண்டியதன் அவசியம் ஏன்? - இதுபோன்ற அடிப்படைக் கேள்விகளுக்கு தெளிவுபடுத்துகிறார் வழக்கறிஞர் அஜிதா...

“இரு விரல் பரிசோதனை என்பது பெண்ணுறுப்பிற்குள் இரு விரல் விட்டு பரிசோதிப்பதாகும். பெண்ணுறுப்பில் ’ஹைமன்’ என்ற சவ்வு இருக்கும். அந்த சவ்வு கிழிந்துள்ளதா, இல்லை... கிழியாமல் அப்படியே இருக்கிறதா என்று இரு விரல்களை உள்விட்டு பார்க்கிறார்கள். இந்தப் பரிசோதனை முறை மிகவும் வலி தரக்கூடியது.

சாமானிய மக்களில் இருந்து மருத்துவம் படித்த மேதைகள் வரையிலும் பெரும்பாலானோரிடமும் ஒரு பிற்போக்குத்தனம் குடிகொண்டுள்ளது. இந்த ’ஹைமன்’ என்ற ஆங்கில வார்த்தையை தமிழில் 'கன்னித்திரை' என்கின்றனர். இதுவே முதலில் தவறு. அது ஒரு சவ்வு. அவ்வளவுதான்.

அந்த சவ்வு இருந்தால் அந்தப் பெண் இதுவரை யாருடனும் உடலுறவு வைக்கவில்லை என்றும், அந்த சவ்வு இல்லையெனில் அப்பெண் இதற்கு முன் உடலுறவில் ஈடுபட்டிருக்கிறார் என்றும் புரிந்துகொள்ளும்படியான பொதுபுத்தி இங்கு பலரிடம் உள்ளது. இதை மருத்துவர்களில் ஒரு தரப்பினரும் நம்புகிறார்கள் என்பதுதான் வருத்தத்திற்குரியது.

200 ஆண்டுகளுக்கு முன்பு வரை பெண்களை ஒரு குறிப்பிட்ட வயது வந்தவுடன், அதாவது 13 வயதைத் தாண்டினால் ஓடி விளையாட விடமாட்டார்கள். நடக்கும் போது கால் அடியை பின்னிப் பின்னிதான் நடக்கச் சொன்னார்கள். பெரிய அடியாக எடுத்து வைத்தால் இந்த ‘ஹைமன்’ சவ்வு கிழிந்துவிடும். பிறகு கன்னித்தன்மை போய்விடும் என நம்பி வந்தார்கள். ஆக, அவர்களுக்கும் தெரிந்துள்ளது, கால் அடியை வேகமாக எடுத்து வைத்தாலே இந்த சவ்வு கிழிந்துவிடும் என்று. ஆனால் அந்த சவ்விற்கு பெயர் 'கன்னித்திரை' என வைத்ததால் அதற்காகவே கிழியாமல் பார்க்க முயன்றனர்.

வழக்கறிஞர் அஜிதா

அந்தக் காலத்தில் கல்வியறிவு பெரிதாக இல்லை. முற்போக்கான சிந்தனை இல்லை. 'இப்படிச் சிந்திப்பது சரி இல்லை' என சொல்வதற்கு ஆள் இல்லை. மேலும், இந்த நூற்றாண்டை போல தகவல்களை தெரிந்துகொள்வதற்கான தளங்கள் இல்லை. இப்போது நமக்கு எல்லாம் தெரிந்தாலும் இந்த இரு விரல் பரிசோதனை முறையை பின்பற்றுகிறோம். இது முற்றிலும் தவறான ஒன்று.

தற்போது பெண்கள் விளையாட்டில் தலையோங்கி திகழ்கிறார்கள், தொடர்ச்சியாக விளையாட்டுப் பயிற்சி பெறும் பெண்களுக்கு இந்த ஹைமன் சவ்வு இருக்காது. சைக்கிள் ஓட்டும் பெண்களுக்கு இந்த சவ்வு இருக்காது. ஏன்... உடற்பயிற்சி கூடங்களுக்கு செல்லும் பெண்களுக்கும் இந்த சவ்வு இருக்காது.

எனவே, இந்த சவ்வு கிழிய உடலுறவில் இருந்திருக்க அவசியம் இல்லை. தமிழ்நாட்டில் கூட பரவாயில்லை, சில மாநிலங்களில் திருமணம் ஆன பிறகு பெண்ணிற்கு ஹைமன் சவ்வு இல்லையென்றால், அப்பெண்ணை கொடூரமாக நடத்தும் சூழ்நிலையெல்லாம் உள்ளது.

இதெல்லால் ஒரு புறம் இருக்கு, ஒரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படும்போது, அப்பெண் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டுள்ளாரா என இந்த சவ்வை வைத்து தெரிந்துகொள்வதற்காக இரு விரல் பரிசோதனை செய்யும் முறையை பயன்படுத்துகிறார்கள். வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்ட நபர் புகார் கொடுத்து எஃப்.ஐ.ஆர் பதிவு செய்த பிறகு, மருத்துவ அறிக்கைக்காக இந்த இரு விரல் பரிசோதனையை செய்கிறார்கள்.

2018-ம் ஆண்டு ஐ.நா சபை இந்தப் பரிசோதனை முறையை தடை செய்து அறிவித்தது. ஏனென்றால், மருத்துவ ரீதியாக இந்த சவ்வு இருந்தால் 'உடலுறவில் ஈடுபடாதவர்', 'பாலியல் ரீதியாக வன்புணர்வு செய்யப்படாதவர்' என்பது தவறான கண்ணோட்டம் என ஐ.நா தெரிவித்தது.

நம் உச்ச நீதிமன்றமும் உயர் நீதிமன்றமும் இரு விரல் பரிசோதனை செய்யக்கூடாது என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனாலும், இந்த முறை நடந்துகொண்டே தான் உள்ளது. இந்த இரு விரல் பரிசோதனை முறையால் உடல் ரீதியான வலி, மன ரீதியான வலி ஏற்படும்.

மேலும், இது விஞ்ஞானபூர்வமற்ற ஒன்று. சட்டத்திற்கு எதிரான ஒன்று. சட்டத்தில் குடிமக்களை கண்ணியத்துடன் நடத்த வேண்டும் என உள்ளது. இந்தப் பரிசோதனை முறை இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாட்டில், இவ்வளவு சட்டங்கள் உள்ள ஒரு நாட்டில் அரங்கேறி வருவது அசிங்கமான ஒரு விஷயமாகத்தான் பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு அரசு நினைத்தால் உடனடியாக ஒரு சுற்றறிக்கையில் ’இனி இந்த பரிசோதனையில் ஈடுபடும் மருத்துவர்கள் தண்டிக்கப்படுவார்கள்' என்றும், 'இந்தப் பரிசோதனையில் ஈடுபடும் பரிசோதனை மையத்தின் உரிமம் ரத்து செய்யப்படும்’ என்றும் அறிவித்தால் மட்டும்தான் இதனை உடனடியாக தடுத்து நிறுத்த முடியும்.

நம் மாநிலம் பல விஷயங்களில் முன்னேறிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் இந்த இரு விரல் பரிசோதனைக்கும் உடனடியாக நடவடிக்கை எடுப்பதே தீர்வாக இருக்கும்” என்றார் வழக்கறிஞர் அஜிதா.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

4 mins ago

சுற்றுச்சூழல்

27 mins ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

4 hours ago

வலைஞர் பக்கம்

4 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

6 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்