மதுரை சித்திரைத் திருவிழாவில் 4 பக்தர்கள் உயிரிழப்பு: கோவிந்தா கோவிந்தா என பக்தர்கள் பரவசத்துடன் முழங்க பச்சைப் பட்டுடுத்தி கள்ளழகர் மதுரை வைகை ஆற்றில் வெள்ளிக்கிழமை அதிகாலை இறங்கினார். லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு கள்ளழகரை தரிசனம் செய்தனர். இந்த சித்திரைத் திருவிழாவின்போது, வைகை ஆற்றில் மூழ்கி 3 பக்தர்களும் உயிரிழந்தனர். இதனிடையே, தண்ணீர் பீய்ச்சிய ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
பலத்த பாதுகாப்புக்கு இடையிலும் இளைஞர்கள், பெண்கள் என பக்தர்கள் முண்டியடித்து சுவாமியை பார்த்தனர். ஆழ்வார்புரம் பகுதியே பக்தர்கள் கூட்டத்தால் திணறியது. இருப்பினும், உற்சாக மிகுதியில் யானைக்கல் தரைப்பாலம் அருகிலுள்ள தடுப்பணையில் தேங்கிய தண்ணீரில் பக்தர்கள் சிலர் குதித்து விளையாடினர். இந்நிலையில், கள்ளழகர் ஆற்றில் இறங்கிய பின், தடுப்பாணை பகுதியில் ஆண் உடல் ஒன்று மிதந்தது தெரியவந்தது. போலீஸார் உடலை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இதற்கிடையில், மதியம் தடுப்பாணை பகுதியில் மேலும் இருவரின் உடல் தண்ணீர் மிதப்பது போலீஸாருக்கு தெரிந்தது. அந்த இருவரின் உடல்களும் மீட்கப்பட்டன.
முன்னதாக, ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், அதிகாலையில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கியபின், மண்டகப்படிக்கு எழுந்தருளியபோது, மதிச்சியம் பகுதியில் சுவாமிக்கு முன்பாக பக்தர்களுக்கு மத்தியில் தண்ணீர் பீய்ச்சிக் கொண்டிருந்தார். திடீரென நெஞ்சு வலியால் மயங்கி விழுந்தார். அவரை அக்கம், பக்கத்தினர் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனாலும், அவர் வழியிலேயே உயிரிழந்தது தெரிந்தது. இது குறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆக.2-ல் தொடக்கம்: தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும்தனியார் பொறியியல் கல்லூரிகளில் இளநிலை பொறியியல் படிப்புகளில் முதலாமாண்டு சேருவதற்கான விண்ணப்பப் பதிவு வெள்ளிக்கிழமை தொடங்கியது. விருப்பமுள்ள மாணவர்கள் இணையதளங்கள் வாயிலாக ஜூன் 4-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இணைய வசதியில்லாதவர்கள் தங்கள் மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள இ சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
மாணவர்கள் விண்ணப்பிக்கும் போதே சான்றிதழ் சரிபார்ப்புக்கான சேவை மையத்தை தேர்வு செய்துவிட வேண்டும். பொறியியல் படிப்புகள் சேர்க்கைக்கான கலந்தாய்வை வரும் ஆகஸ்ட் 2-ம் தேதி தொடங்கி அக்டோபர் 3-ம் தேதிக்கு முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி ரேண்டம் எண் ஜூன் 7-ம் தேதி வெளியிடப்பட்டு, சான்றிதழ் சரிபார்ப்பு ஜூன் 12 முதல் 30-ம் தேதி வரை நடைபெறும். ஜூலை 12-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என்று உயர்கல்வித் துறை தெரிவித்துள்ளது.
ஆளுநரை வெளியேற்ற திமுக கூட்டணி ஆலோசனை: கே.பாலகிருஷ்ணன்: ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள், கருத்துகளை கடுமையாக விமர்சித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன், “தமிழகத்தில் இருந்து ஆளுநரை வெளியேற்றுவது தொடர்பாக கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் விரைவில் ஆலோசனை செய்யப்படவுள்ளது” என்று தெரிவித்தார்.
புயல் சின்னம்: தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை வாய்ப்பு: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 7-ம் தேதி உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்தடுத்த நாட்களில் காற்றழுத் தாழ்வு மண்டலமாகி, புயலாக வலுபெறக் கூடும். இதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 4 நாட்களுக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
‘தி கேரளா ஸ்டோரி’ படத்துக்கு பிரதமர் மோடி ஆதரவு: 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம், இந்திய தேசத்துக்கு எதிரான சதியை அம்பலப்படுத்தியுள்ளதாக கர்நாடக மாநிலம் பெல்லாரியில் மேற்கொண்ட தேர்தல் பிரச்சாரத்தின்போது பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
அந்தப் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய மோடி,"'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம், இந்திய தேசத்துக்கு எதிரான சதியை அம்பலப்படுத்தியுள்ளது. இந்தத் திரைப்படம் சமூகத்தில் பயங்கரவாதத்தால் ஏற்படும் விளைவுகளை அம்பலப்படுத்த முயற்சிக்கிறது. குறிப்பாக, கேரளா போன்ற அழகான ஒரு மாநிலத்தில், உழைப்பாளிகளையும், சிறந்த திறமைசாலிகளையும், அறிவுஜீவிகளையும் கொண்ட மாநிலத்தில் எத்தகைய விளைவை ஏற்படுத்தும் என்பதை அம்பலப்படுத்துகிறது. ஆனால், காங்கிரஸ் கட்சி அப்படத்தை தடை செய்து பயங்கரவாத சக்திகளுக்கு உதவ நினைக்கிறது. காங்கிரஸுக்கு தடை செய்வதும், வளர்ச்சியைக் கண்டுகொள்ளாமல் செல்வதும்தான் தெரியும்" என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில்,'தி கேரள ஸ்டோரி' திரைப்படத்தின் டீசரில் கேரளாவில் 32 ஆயிரம் பெண்கள் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இணைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டதால் ஏற்பட்ட சர்ச்சையைத் தொடர்ந்து, அந்த டீசரை நீக்குவதாக படத் தயாரிப்பாளர் அறிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து படத்தை திரையிட தடை விதிக்க முடியாது என்று கூறி படத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை கேரளா உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
‘இலவசங்கள்’குறித்து அமித் ஷா கருத்து: அனைத்து மொழிகளும் வளர வேண்டும் என்பதே பாஜகவின் விருப்பம் என்றும், மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த அளிப்பவை ‘இலவசங்கள்’ அல்ல என்றும் பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா தெரிவித்துள்ளார்.
இலவசங்களுக்கு எதிராக பிரதமர் மோடி தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறார். ஆனால், பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இலவசங்கள் இடம் பெற்றுள்ளதே? என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், “இலவச கலாச்சாரம் என்றால் என்ன என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நாங்கள் 3 கோடி மக்களுக்கு வீடுகளை வழங்கி இருக்கிறோம். 5 கோடிக்கும் அதிகமான மக்கள் பயன்பெறும் வகையில் குழாய் மூலம் குடிநீர் வழங்குகிறோம்.
எரிவாயு சிலிண்டர் வழங்குகிறோம். ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவக் காப்பீடு வழங்குகிறோம். ஊட்டச்சத்து குறைபாட்டைப் போக்கும் வகையில் உணவு தானியங்கள் வழங்குகிறோம். இவை எதுவும் இலவசங்கள் அல்ல. இவை மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் அளிக்கப்படுபவை. ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதம் ரூ.3 ஆயிரம் வழங்குவோம் என கூறுவதைத்தான் இலவச கலாச்சாரம் என்கிறோம்” என்று அமித் ஷா கூறினார்.
“போலீஸ் விசாரணையை முடிக்க விடுங்கள்” - மத்திய அமைச்சர்: "போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மல்யுத்த வீரர்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன. டெல்லி போலீஸார் தங்களின் பாரபட்சமில்லாத விசாரணையை முடிக்க வீரர்கள் ஒத்துழைக்க வேண்டும். டெல்லி போலீஸார் உண்மையைக் கண்டறிந்து சட்டப்படி நடவடிக்கை எடுப்பார்கள்" என்று மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், பாஜக எம்பியும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீதான பாலியல் புகார், மிரட்டல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, துரோணாச்சாரியார் விருது வென்ற பயிற்சியாளர் மகாவீர் சிங் போகத், வீரர்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்றால் தனது பதக்கங்களைத் திருப்பித் தரப் போவதாக எச்சரித்துள்ளார்.
அரசுப் பேருந்துகளின் எண்ணிக்கை குறைப்பு: இபிஎஸ் குற்றச்சாட்டு: மகளிருக்கு இலவச பயணத்தை அறிவித்துவிட்டு, தமிழகம் முழுவதும் பேருந்துகளின் எண்ணிக்கையை அரசு குறைத்து உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அவர், "ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் முடிவடைய உள்ள நிலையில் ஒரு புதிய பேருந்து கூட வாங்காமல், ஏற்கெனவே சென்னையில் தனியார் பேருந்துகள் ஒப்பந்த முறையில் இயக்கப்படும் என்று கூறிய இந்த அரசு, தற்போது ஓட்டுநர்கள் குறைவாக உள்ளனர்; எனவே, நடத்துநர்களுக்கு வேலையில்லை என்று கடந்த சில நாட்களாக அரசு நடத்துநர்களுக்கு பணி வழங்காமல் இருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளன. இந்நிலையைப் பார்க்கும்போது, பேருந்து சேவையை தனியாருக்கு தாரை வார்க்க இது போன்ற சித்து விளையாட்டுகளில் திமுக அரசு ஈடுபட்டுள்ளதோ என்ற சந்தேகம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
ராஜினாமா முடிவை வாபஸ் பெற்ற சரத் பவார்: மகாராஷ்டிராவின் தொண்டர்கள் உணர்வுகளுக்கு மதிப்பளித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவராக தொடரப்போவதாக சரத் பவார் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கூறுகையில், “எல்லா விஷயங்களையும் மறுபரிசீலனை செய்த பின்னர், கட்சியின் தலைவராக நான் தொடர்வேன் என்று அறிவிக்கிறேன். எனது முந்தைய முடிவை திரும்பப்பெறுகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, வெள்ளிக்கிழமை நடந்த கட்சிக் குழு கூட்டத்தில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் ராஜினாமா நிராகரிக்கப்படுவதாகவும், அவரே தொடர்ந்து கட்சியை வழிநடத்த வேண்டும் என்றும் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. தேசியவாத காங்கிரஸ் தலைவரான சரத் பவார், தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக கடந்த செவ்வாய் கிழமை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
சூடானில் சண்டைக்கு மத்தியில் சிக்கியிருக்கும் குழந்தைகள்: சூடானில் கடும் சண்டைக்கு மத்தியில் குழந்தைகள் சிக்கி இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இது குறித்து ஐ.நா. சபை தரப்பில், “வியாழக்கிழமை சூடானில் உள்நாட்டுப் போர் நிறுத்த உடன்படிக்கை இருந்த போதிலும் கடுமையான சண்டை நீடித்தது. பேச்சுவார்த்தைகளுக்கு இடையே சண்டைகள் தொடர்கின்றன. கடும் சண்டையில் குழந்தைகள் சிக்கி உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.