மதுரை சித்திரைத் திருவிழாவில் 4 பக்தர்கள் உயிரிழப்பு
மதுரை: மதுரையில் சித்திரைத் திருவிழாவின்போது, வைகை ஆற்றில் மூழ்கி 3 பக்தர்களும் உயிரிழந்தனர். தண்ணீர் பீய்ச்சிய ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
சித்திரைத் திருவிழாவின் முக்கிய விழாவான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு இன்று அதிகாலை 5.52 மணிக்கு நடந்தது. இதையொட்டி, வைகை ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டு, இரு கரையை தொட்டு தண்ணீர் ஓடும் நிலையில்தான் கள்ளழகர் வைகை ஆற்றில் தங்க குதிரையில் எழுந்தருளினார். இக்காட்சியை பக்தர்கள் கண்டு தரிசித்தனர். இதற்காக கோரிப்பாளையம், ஆழ்வார்புரம், வைகை வடகரை, தென்கரை மற்றும் ஏவி மேம்பாலம், ஓபுளாபடித்துறை மேம் பாலம், யானைக்கல் தரைப்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் பல லட்சம் பக்தர்கள் திரண்டு இருந்தனர்.
பலத்த பாதுகாப்புக்கு இடையிலும் இளைஞர்கள், பெண்கள் என பக்தர்கள் முண்டியடித்து சுவாமியை பார்த்தனர். ஆழ்வார்புரம் பகுதியே பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்தது. இருப்பினும், உற்சாக மிகுதியில் யானைக்கல் தரைப்பாலம் அருகிலுள்ள தடுப்பணையில் தேங்கிய தண்ணீரில் பக்தர்கள் சிலர் குதித்து விளையாடினர். இந்நிலையில், கள்ளழகர் ஆற்றில் இறங்கிய பின், தடுப்பாணை பகுதியில் ஆண் உடல் ஒன்று மிதந்தது தெரியவந்தது. போலீஸார் உடலை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். விசாரணையில், அவர் தெற்குமாசி வீதியைச் சேர்ந்த நல்லமாயன் என்றும், திருவிழா பார்க்க வந்தபோது, தடுப்பணை தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாகவும் தெரிகிறது.
இதற்கிடையில், மதியம் தடுப்பாணை பகுதியில் மேலும் இருவரின் உடல் தண்ணீர் மிதப்பது போலீஸாருக்கு தெரிந்தது. இதைத் தொடர்ந்து இருவரின் உடல்கள் மீட்கப்பட்டன. இதில் ஒருவர் மதுரை மாவட்டம், விளாச்சேரி சுண்ணாம்புகாளவாசல் பகுதி ஜெயக்குமார் மகன் பிரேம்குமார் (18) என தெரிந்தது. மற்றொருவரின் பெயர், முகவரி குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர். இவர்களும் சித்திரைத் திருவிழாவுக்கு வந்தவர்கள் என போலீஸார் தெரிவிக்கின்றனர்.
மயங்கி இறந்த பக்தர்: மதுரை வடக்குமாசி வீதி நல்லமாடன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் சுடலைமுத்து (58). அதிகாலை கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கியபின், மண்டகப்படிக்கு எழுந்தருளியபோது, மதிச்சியம் பகுதியில் சுவாமிக்கு முன்பாக பக்தர்களுக்கு மத்தியில் தண்ணீர் பீய்ச்சிக் கொண்டிருந்தார். திடீரென நெஞ்சு வலியால் மயங்கி விழுந்தார். அவரை அக்கம், பக்கத்தினர் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனாலும், அவர் வழியிலேயே உயிரிழந்தது தெரிந்தது. இது குறித்து மதிச்சியம் போலீஸார் விசாரிக்கின்றனர்.
