அலகாபாத்தில் திருவள்ளுவர் சிலை அமைக்க 32 ஆண்டுகளாக காத்திருக்கும் ‘பாஷா சங்கம்’ - பாஜக அரசு அனுமதி அளிக்குமா?

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: அலகாபாத்தில் திருவள்ளுவர் சிலை அமைக்க கடந்த 32 ஆண்டுகளாக முயற்சிக்கப்படுகிறது. காசி தமிழ்ச் சங்கமம் நடைபெறும் இத்தருணத்தில் மாநில பாஜக அரசின் அனுமதி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத்தில் கங்கை, யமுனை மற்றும்மண்ணுக்குள் ஓடுவதாகக் கருதப்படும் சரஸ்வதி ஆகிய மூன்று ஆறுகள் சங்கமிக்கும் திரிவேணிசங்கமம் உள்ளது. இதில் புனிதநீராட தமிழர்கள் ஏராளமானோர் அன்றாடம் இங்கு வருகின்றனர். எனவே சங்கமம் பகுதியில் திருவள்ளுவர் சிலை அமைக்க உ.பி.யின் இந்தி அறிஞர்கள் விரும்பினர்.

இவர்கள், உ.பி.யில் மொழிகளை இணைக்க அமைந்த ‘பாஷாசங்கம்’ எனும் சமூகசேவை அமைப்பை சேர்ந்தவர்கள். பெரும்பாலும் வட மாநிலத்தவர்களை கொண்ட இந்த அமைப்பு, அலகாபாத்தை தலைமையிடமாகக் கொண்டு கடந்த 1976 முதல் செயல்படுகிறது.

அலகாபாத் சங்கமத்தின் தென்கரை சாலைக்கு திருவள்ளுவர் பெயரை வைத்து அங்கு அவரது சிலையையும் அமைக்க பாஷா சங்கம் கடந்த 1990 முதல் வலியுறுத்தி வருகிறது. கடந்த ஜூன் 24,2017-ல் திரிவேணி சங்கமத்தின் தென்கரை சாலைக்கு திருவள்ளுவர் பெயர் வைத்து சிலையும் அமைக்க அலகாபாத் மாநகராட்சி அனுமதி அளித்தது.

இதையடுத்து அதே ஆண்டு ஜூலை 10-ல் ‘தமிழ்கே சந்த் கவி திருவள்ளுவர் மார்க்’ (தமிழ் ஐயன் திருவள்ளுவர் சாலை) என்ற இந்தி, தமிழ் கல்வெட்டுக்களை இன்மா இன்டர்நேஷனல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ரத்தினவேல் திறந்து வைத்தார். இத்துடன்அவர், 2021 ஜனவரி 15, திருவள்ளுவர் தினத்தன்று சிலை வைக்க நன்கொடை முன்பணமாக ரூ.1 லட்சம் அளித்திருந்தார். ஆனால் சிலை அமைக்க முற்பட்டபோது, பொது இடங்களில் சிலை வைக்க நீதிமன்ற தடை இருப்பதாகக் கூறி அனுமதி மறுக்கப்பட்டது.

கருணாநிதி குரல் கொடுத்தார்: இதுபற்றி ‘இந்து தமிழ் திசை’யிடம் பாஷா சங்கத்தின் பொருளாளர் சந்திர மோகன் பார்கவா கூறும்போது, “முதலில் இரண்டுக்கும் அனுமதி அளித்த அலகாபாத் வளர்ச்சி ஆணையம் பிறகு சிலைவைக்க முதல்வர் யோகியின் உத்தரவு அவசியம் என்று கூறி தடைவிதித்தது. கடந்த 6 ஆண்டுகளாக அவரை சந்திக்கவும் முடியாமல் உள்ளது. இது தொடர்பான செய்தியை கடந்த 2015 முதல் ‘இந்து தமிழ்’ நாளேடும் வெளியிட்டு வருகிறது. இதைக் கண்டு, தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி குரல் கொடுத்தும் சிலைக்கு அனுமதி கிடைக்கவில்லை” என்றார்.

பாஷா சங்கம் சார்பில் வடமாநிலங்களின் பல இடங்களில் தமிழ்மொழி வகுப்புகளும் எடுக்கப்படுகின்றன. திருவாசகம், பெருங்கதை, வளையாபதி, குண்டலகேசி ஆகிய நூல்களை இந்தியிலும், துளசிதாசரின் 12 நூல்களில் 7-ஐதமிழிலும் பாஷா சங்கம் மொழிபெயர்த்துள்ளது. இவற்றில், இந்தி வழியே தமிழ் கற்பிக்க எழுதப்பட்ட 3 நூல்களில் ‘சக்தி மாலை’-க்கு மத்திய அரசு ரூ.1 லட்சம் பரிசும் அளித்துள்ளது.

பாஷா சங்கம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் திருவள்ளுவர், நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை, பாரதியார், பாரதிதாசன் போன்ற தமிழ்க் கவிகளுக்கும் கன்னடம், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழி அறிஞர்களுக்கும் விழா எடுக்கப்படுகிறது.

பாஷா சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளரும் திருக்குறளை இந்தியில் மொழிபெயர்த்தவருமான தமிழர் எம்.கோவிந்தராஜன் கூறும்போது, “சங்கமம் அருகே அரைன் காட் எனும் இடத்தில் உள்ள சச்சா பாபா ஆசிரமத்தில் திருவள்ளுவர் சிலை வைத்துக்கொள்ள அதன் தலைவர் சுவாமி கோவிந்த தாஸ் அனுமதி தந்தார். இதனால், திருவள்ளுவருக்கு குறிப்பிட்ட சமயத்தின் அடையாளம் வந்துவிடும் என அஞ்சி மறுத்து விட்டோம்” என்றார்.

அனுமதி கிடைக்காதது ஏமாற்றம்: வாரணாசியில் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி, கடந்த 19-ம்தேதி தொடங்கி ஒரு மாதம் நடைபெறுகிறது. இதை தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, திருக்குறள் மொழிபெயர்ப்புகளை 13 மொழிகளில் வெளியிட்டார். இதன் பிறகும் அலகாபாத்தில் திருவள்ளுவர் சிலை அமைக்க அனுமதி கிடைக்காமல் இருப்பதை பெரும் ஏமாற்றமாக உ.பி.வாசிகள் கருதுகின்றனர்.

இதேபோல், புதுடெல்லியில் தமிழர்கள் அதிகம் வாழும் சகூர்பூர்பகுதி மெட்ரோ ரயில் நிலையத்துக்கு திருவள்ளுவர் பெயர் வைக்க வேண்டும் என கோரப்படுகிறது. டெல்லியின் ‘தமிழ் இளைஞர்கள் கலாச்சார சங்கம்’ எனும் தமிழர் அமைப்பு கடந்த 2018 முதல் இக்கோரிக்கையை எழுப்பி வருகிறது. இதற்காக, முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், நடிகர்கமல்ஹாசன் உள்ளிட்ட பல பிரபலங்கள் ஆதரவு கடிதம் அளித்தும் அனுமதி கிடைக்கவில்லை.

இதில் உதவவேண்டி, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோரிடமும் மனு அளிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளுவர் சிலை வைக்க உத்தரப்பிரதேச முதல்வர் யோகியின் உத்தரவு அவசியம் என்று கூறி ஆணையம் தடை விதித்தது. கடந்த 6 ஆண்டுகளாக அவரை சந்திக்கவும் முடியாமல் உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

7 mins ago

இந்தியா

7 mins ago

தமிழகம்

32 mins ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

விளையாட்டு

12 hours ago

மேலும்