“நான் நிம்மதியாக உணருகிறேன்” - மல்லிகார்ஜுன கார்கேவிடம் பொறுப்பை ஒப்படைத்த சோனியா பேச்சு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: "என்னால் முடிந்த அளவுக்கு எனது பணியினை நான் சிறப்பாக செய்தேன். அந்தப் பொறுப்புகளில் இருந்து இன்று நான் விடுபடுகிறேன். தற்போது நிம்மதியாக உணர்கிறேன்" என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி தெரிவித்தார். சுமார் 23 வருடங்களாக அவர் காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பு வகித்து வந்தார்.

சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்ட மல்லிகார்ஜுன கார்கே டெல்லியில் உள்ள கட்சி அலுவலகத்தில் புதன்கிழமை தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். அந்த நிகழ்வில் காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக இருந்த சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

கட்சி தலைமை பொறுப்பை கார்கேவுக்கு மாற்றிக் கொடுக்கும் நிகழ்வில் பேசிய சோனியா காந்தி, "நான் மிகவும் நிம்மதியாக இன்று உணர்கிறேன் நான் ஏன் இவ்வாறு சொல்கிறேன் என்று விளக்குகிறேன். உங்களின் அன்பையும், நீங்கள் எனக்கு அளித்த மரியாதையும் நான் என்னுடைய கடைசி மூச்சு இருக்கும் வரை மதிப்பேன். ஆனால்
அந்த மரியாதை மிகப்பெரிய பொறுப்பு வாய்ந்தது. என்னால் முடிந்த அளவுக்கு எனது பணியினை நான் சிறப்பாக செய்தேன். என் தோல்களின் மேல் ஒரு சுமை இருந்தது. அந்த பொறுப்புகளில் இருந்து இன்று நான் விடுபடுகிறேன். அதனால் இயல்பாகவே நான் நிம்மதியாக உணருகிறேன். காங்கிரஸ் கட்சியின் தலைமை என்பது மிகப் பெரிய பொறுப்பு. இனி இந்த பொறுப்பு மல்லிகார்ஜுன கார்கேவினுடையது.

காங்கிரஸ் கட்சி பல சவால்களை சந்தித்துள்ளது. அந்தச் சவால்களை நாம் எவ்வாறு எதிர்கொண்டோம். முழு பலத்துடன் ஒற்றுமையாக நாம் முன்னேறி வெற்றி பெற்றோம். தற்போது நமது முன்னால் நாட்டின் ஜனநாயக மதிப்புகளுக்கு ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தல் மிகப் பெரிய சவால் உள்ளது" என்று தெரிவித்தார்.

அவரைத் தொடர்ந்து பேசிய புதிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, "சோனியா காந்தி எப்போதும் உண்மையானவராக இருந்தார். அவர் நமக்கு காட்டிய முன்மாதிரி சார்புகளற்றது. அவரது தலைமையின் கீழ் இரண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுகள் அமைந்தன. அந்த அரசு ஆட்சியில் இருந்தபோது, தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம், உணவுப் பாதுகாப்பு சட்டம், தகவல் அறியும் உரிமைச் சட்டம் போன்றவை அமல்படுத்தப்பட்டன” என்றார்.

கடந்த 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அடைந்த தோல்விக்கு பொறுப்பேற்று அப்போது கட்சியின் தலைவராக இருந்த ராகுல் காந்தி தனது பொறுப்பை ராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி பொறுப்பேற்றார். முன்னதாக, 1998-ஆம் ஆண்டு முதல் 2017-ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தி பொறுப்பு வகித்து வந்தார். அவர் தலைமையின்போது, சசி தரூர் உள்ளிட்டோர் உறுப்பினர்களாய் இருக்கும் ஜி23 குழு, கட்சியில் உள்கட்சித் தேர்தல் நடத்தி கட்சியை மறுசீரமைக்க வேண்டும் என்று நீண்ட கடிதம் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

அக்டோபர் 17-ஆம் தேதி நடந்த உள்கட்சி தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட சசி தரூரை விட பெருவாரியான வாக்குகள் அதிகம் பெற்ற மல்லிகார்ஜுன கார்கே காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு இன்று கட்சித் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

இந்தியா

7 mins ago

தமிழகம்

28 mins ago

சினிமா

24 mins ago

தமிழகம்

46 mins ago

தமிழகம்

48 mins ago

க்ரைம்

54 mins ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

59 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்