மழைநீர் சேமிப்பு இயக்கமாக மாற வேண்டும்: வானொலி உரையில் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தல்

By பிடிஐ

பருவமழைக் காலத்தில் ஒவ்வொரு துளி நீரையும் சேமிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தனது மாதாந்திர வானொலி உரையில் வலியுறுத்தி உள்ளார்.

அகில இந்திய வானொலியில் ‘மனதிலிருந்து பேசுகிறேன்’ (மன் கி பாத்) என்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மாதந்தோறும் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். அதன்படி அவர் நேற்றைய உரையில் கூறியதாவது:

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கடும் வெப்பம் நிலவுகிறது. இதனால் மனிதர்கள் மட்டுமல்லாது பறவைகள், விலங்குகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கெல்லாம் காரணம் சுற்றுச்சூழல் சீர்கேடுதான்.

குறிப்பாக வனப்பகுதிகள் அழிக்கப்படுவதுடன் மரங்கள் தொடர்ந்து வெட்டப்பட்டு வருகின்றன. இதன்மூலம் மனிதர்களே சுற்றுச்சூழலை சீரழித்து பேரழிவை தேடிக் கொள்கின்றனர். எனவே வனப்பகுதிகளைப் பாதுகாப்பதும் தண்ணீரை சேமிப்பதும் நம் ஒவ்வொருவருடைய பொறுப்பு ஆகும்.

வரும் ஜூன் முதல் செப்டம்பர் வரை பருவமழைக் காலம் ஆகும். இந்தக் காலத்தில் பெய்யும் ஒவ்வொரு துளி மழை நீரையும் வீணாக்காமல் சேமிக்க அனைவரும் முன்வர வேண்டும். தண்ணீர் சேமிப்பை ஒரு இயக்கமாகவே நடத்த முன்வர வேண்டும்.

தண்ணீர் என்பது விவசாயிகளின் பிரச்சினை என்று அலட்சியப்படுத்தாமல் நம் ஒவ்வொருவருடைய பிரச்சினையாகக் கருத வேண்டும். மேலும் தண்ணீரை சேமிக்க வேண்டியது அரசுகள் அல்லது அரசியல்வாதிகளின் பணி என்று நினைக்கக் கூடாது. தண்ணீரை சேமிப்பதில் பொதுமக்களுக்கும் பொறுப்பு உள்ளது.

இதுவரை மாநிலங்களில் நிலவும் பிரச்சினைகள் குறித்து அனைத்து முதல்வர்களையும் கூட்டி விவாதிப்பது வழக்கமாக இருந்தது. ஆனால் அந்த முறையை மாற்றி ஒவ்வொரு மாநில முதல்வரையும் தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறேன். குறிப்பாக, வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள பல மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தி உள்ளேன்.

எந்தக் கட்சி ஆட்சி செய்யும் மாநிலமாக இருந்தாலும் தண்ணீர் பிரச்சினைக்கு நீண்டகால அடிப்படையில் தீர்வு காண வேண்டும் என்பது குறித்து வலியுறுத்தப்பட்டுள்ளது. இதில் பல அனுபவங்கள் கிடைத்தன. இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண்பது குறித்து ஆலோசனை வழங்குமாறு நிதி ஆயோக் அமைப்பை கேட்டுக் கொண்டுள்ளேன்.

ஆந்திரா, குஜராத் உள்ளிட்ட சில மாநிலங்களில் தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க நவீன தொழில்நுட்ப முறைகள் கையாளப்படுவதை அறிந்தேன். குறிப்பாக, சொட்டு நீர்ப் பாசனம், சிறு நீர்ப்பாசனம், நிலத்தடி நீர் வளத்தை அதிகரிப்பது மற்றும் தடுப்பணைகள் என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இதை அனைத்து மாநிலங்களும் செய்ல்படுத்த வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

உலகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

8 hours ago

சினிமா

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

மேலும்