வெள்ளத்தில் தவிக்கும் அசாம்: இதுவரை 73 பேர் உயிரிழப்பு; 43 லட்சம் பேர் பாதிப்பு

By செய்திப்பிரிவு

கவுகாத்தி: அசாம் மாநிலத்தில் மொத்தம் உள்ள 35 மாவட்டங்களில் 33 மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன. திங்கள்கிழமை நிலவரப்படி சுமார் 43 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அந்த மாநிலத்தின் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா ஷர்மா, பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான உணவு மற்றும் நிவாரண பொருட்களை வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளார். வெள்ள நீர் அதிகம் சூழ்ந்துள்ள பகுதிகளில் சிக்கியுள்ள மக்களுக்கு தேவையான உணவு மற்றும் நிவாரணத்தை ஆகாய மார்க்கமாக வழங்குமாறு அவர் தெரிவித்துள்ளார்.

மாநில அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் இணைய வழியில் நடந்த ஆலோசனை கூட்டத்திற்குப் பிறகு அவர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு துரிதமாக உதவிடுமாறு அவர் தெரிவித்துள்ளதாக தகவல்.

மழை - வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக தற்போது வரை அந்த மாநிலத்தில் சுமார் 73 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் இரண்டு காவலர்களும் அடக்கம். அவர்கள் இருவரும் வெள்ள நீரில் சிக்கி தவித்த மக்களுக்கு உதவ முயற்சி செய்தபோது வெள்ள நீரால் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்களது உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

நடைமுறை விதிகளை கவனத்தில் கொள்ளாமல் அதிகாரிகள் தங்களது பணியை மேற்கொள்ளுமாறு முதல்வர் ஹிமந்தா பிஸ்வா ஷர்மா உத்தரவு பிறப்பித்துள்ளார். சுகாதார குழுவினரை தயார் நிலையில் இருக்குமாறும், மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள முகாம்களுக்கு மருத்துவர்கள் அன்றாடம் செல்ல வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதோடு மருத்துவமனைகளில் இரவு நேர பணியில் மருத்துவ பணியாளர்கள் ஈடுபடுமாறும் தெரிவித்துள்ளார். மேலும், வெள்ள நீர் வடிந்த வேகத்தில் அது சார்ந்த பாதிப்புகளை விரைந்து கணக்கிடுமாறு அதிகாரிகளிடம் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த ஒரு வார காலமாக அசாம் மாநிலத்தில் உள்ள 33 மாவட்டத்தின் 127 வருவாய் வட்டத்தில் உள்ள 5137 கிராமங்கள் மழை - வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இதனை அம்மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் உறுதி செய்துள்ளது. 744 முகாம்களில் சுமார் 1.90 லட்சம் மக்கள் பாதுகாப்பாக தஞ்சம் அடைந்துள்ளனர். இதுவரை ராணுவம், தேசிய மற்றும் மாநில மீட்பு படையினரால் சுமார் 30,000 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

கோபிலி ஆறு, பிரம்மபுத்திரா, சுபன்சிரி, புத்திமாரி, பக்லாடியா, மனாஸ், பெக்கி பராக் மற்றும் குஷியாரா போன்ற ஆறுகளில் அபாய கட்டத்தை கடந்து நீர் பாய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு நகரப்பகுதிகளும் வெள்ள நீரால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காசிரங்கா தேசிய பூங்காவில் எட்டு விலங்குகள் வெள்ளம் மற்றும் வாகன மோதல் காரணமாக உயிரிழந்துள்ளன. பத்து விலங்குகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

18 mins ago

இந்தியா

5 mins ago

இந்தியா

28 mins ago

விளையாட்டு

20 mins ago

இந்தியா

28 mins ago

தமிழகம்

53 mins ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

7 hours ago

மேலும்