முடிவுக்கு வரும் கர்நாடக பாஜக மூத்த தலைவர்களின் அரசியல் வாழ்க்கை; எடியூரப்பாவை தொடர்ந்து ஈஸ்வரப்பா: 2023 தேர்தலுக்கு தயாராகும் புதிய படை

By இரா.வினோத்

தென்னிந்தியாவில் முதல்முறையாக கர்நாடகாவில் பாஜகவை அரியணையில் ஏற்றிய மூத்த தலைவர்கள் எடியூரப்பா, ஜெகதீஷ் ஷெட்டர், சதானந்தகவுடா ஆகியோரை தொடர்ந்து ஈஸ்வரப்பாவின் அரசியல் வாழ்க்கையும் முடிவுக்கு வந்துள்ளது.

முப்பெரும் தலைவர்கள்

கர்நாடக மாநிலத்தில் 1990-கள் வரை காங்கிரஸ், ஜனதா தளம் ஆகிய இரு கட்சிகள் மட்டுமே மாறி மாறி ஆட்சியை பிடித்தன. ஆர்எஸ்எஸ் பின்னணியில் இருந்து வந்த எடியூரப்பா (79), சங்கர் மூர்த்தி (82), ஈஸ்வரப்பா (73) ஆகிய 3 பேரும் 1970-களில் பாஜகவின் முந்தைய அமைப்பான பாரதிய ஜன சங்கத்தை வளர்க்கும் வேலையில் ஈடுபட்டனர்.

ஷிமோகா மாவட்டத்தை சேர்ந்தஇந்த 3 பேரும் கர்நாடகா முழுவதும் பயணித்து கடும் சிரமங்களுக்கு மத்தியில் பாஜகவை வளர்த்தெடுத்தனர். முப்பெரும் தலைவர்களாக அறியப்பட்ட எடியூரப்பா,சங்கர் மூர்த்தி, ஈஸ்வரப்பா ஆகிய மூவரும் முதலில் தங்கள்சாதியினர் மத்தியில் கட்சியை கொண்டு சேர்த்தனர்.

எடியூரப்பாவும், சங்கர் மூர்த்தியும் மென்மையான முறையில்கட்சியை வளர்த்த நிலையில், ஈஸ்வரப்பா அதிரடியான இந்துத்துவ கருத்துக்களின் வாயிலாக கட்சியை வளர்த்தார்.

ஷிமோகா பாஜகவின் கோட்டையாக மாறியதால் 1983-ல் எடியூரப்பாமுதல் முறையாக எம்எல்ஏ ஆனார். அவரைத் தொடர்ந்து 1988-ல் டி.ஹெச்.சங்கர் மூர்த்தியும், 1989-ல் கே.எஸ்.ஈஸ்வரப்பாவும் சட்டப்பேரவைக்குள் நுழைந்தனர்.

1990-களுக்கு பின் பாஜக வேகமாக வளர தொடங்கியதும் மூன்றுதலைவர்களுக்கும் இடையே அதிகாரப் போட்டி எழுந்தது. 1999-ல்மேலவைக்கு தேர்வு செய்யப்பட்ட எடியூரப்பா கட்சியில் சங்கர்மூர்த்தியை ஓரங்கட்ட தொடங்கினார். இதனால் இருவருக்கும்போட்டி ஏற்பட்டது. அதிலும் பாஜகமாநிலத் தலைவர் பதவியை கைப்பற்றுவதில் இருவரும் நேரடியா கவே மோதி கொண்டனர்.

கடந்த 2006-ல் எடியூரப்பாதுணை முதல்வரான போது ஈஸ்வரப்பாவும் அமைச்சர் ஆனார்.2008-ல் எடியூரப்பா முதல்வரான போது இவர் துணை முதல்வரானார். அப்போது எடியூரப்பா ஊழல் வழக்கில் சிக்கிய போது முதல்வர் பதவியை கைப்பற்ற ஈஸ்வரப்பா பெரிதும் முயன்றார். ஆனால் எடியூரப்பா தன் லிங்காயத்து வாக்கு வங்கியின் பலத்தைக் காட்டி சதானந்த கவுடா, ஜெகதீஷ் ஷெட்டருக்கு முதல்வர் பதவியை வழங்கினார். அப்போது கே.எஸ்.ஈஸ்வரப்பா தன்குருபா வாக்கு வங்கியை வைத்துஅந்த ஆட்சியிலும் துணை முதல்வர் பதவியை கைப்பற்றினார்.

இந்நிலையில் 2019-ல் எடியூரப்பா மீண்டும் முதல்வரான போதுஈஸ்வரப்பாவுக்கு அமைச்சரவையில் இடமளிக்க மறுத்துவிட்டார். அப்போது ஈஸ்வரப்பா சங்கொலி ராயண்ணா பிரிகேடியர் (குருபா சாதி அமைப்பு) மூலம் நெருக்கடிக் கொடுத்து அமைச்சர் பதவியை கைப்பற்றினார். இந்நிலையில் பாஜக மேலிடம் 2023 தேர்தலை மனதில் வைத்து 70 வயதுக்கும் மேற்பட்டவர்களை ஓரங்கட்ட முடிவெடுத்தது. அதன் அடிப்படையில் வயோதிகம் காரணமாக‌ எடியூரப்பா முதல்வர் பதவியில் இருந்து விலக்கப்பட்டார்.

அப்போதும் ஈஸ்வரப்பா முதல்வர் பதவியை கைப்பற்ற முயற்சித்த நிலையில் மீண்டும் லிங்காயத்து வாக்கு வங்கியே வென்று,பசவராஜ் பொம்மை முதல்வராக்கப்பட்டார். இதனால் ஈஸ்வரப்பா வருத்தம் அடைந்தாலும், தன் போட்டியாளர் எடியூரப்பாவை முதல்வர் பதவியில் இருந்து நீக்கியதால் மகிழ்ச்சி அடைந்தார்.

முடிவுக்கு வரும் மூத்தோர் காலம்

எடியூரப்பா, சங்கர் மூர்த்தி, ஜெகதீஷ் ஷெட்டர், சதானந்த கவுடா ஆகிய பாஜக மூத்த தலைவர்களுக்கு பதவி வழங்கப்படாத நிலையில், ஈஸ்வரப்பா மேலிடத்திடம் வாதிட்டு அமைச்சர் பதவியை கைப்பற்றினார். முன்னாள் முதல்வர்களாக இருந்த எடியூரப்பா, ஜெகதீஷ் ஷெட்டர், சதானந்த கவுடா ஆகிய மூவ‌ருக்கும் கட்சியில் அறிவிக்கப்படாத ஓய்வு அளிக்கப்பட்டதால், ஈஸ்வரப்பா அதிகார தோரணையில் உற்சாகமாக வலம் வந்தார். இந்த வேளையில் ஹிஜாப், ஹலால், லவ் ஜிகாத் ஆகிய விவகாரங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக பேசிதொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கினார். இதனால் ஈஸ்வரப்பா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் அரசு பணிகளை மேற்கொண்டதற்கு நிதி ஒதுக்க ஒப்பந்ததாரர் சந்தோஷ் பாட்டீலிடம் 40 சதவீத கமிஷன் கேட்டதாக ஈஸ்வரப்பா மீது ஊழல் புகார் எழுந்தது. இதனால் பாஜக மேலிடம் அதிருப்தி அடைந்த நிலையில், சந்தோஷ் பாட்டீல் தற்கொலை செய்து கொண்டதால் ஈஸ்வரப்பா கடும் நெருக்கடிக்கு ஆளானார். 2023-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் வேளையில் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுவதை தவிர்க்கும் பொருட்டு அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யுமாறு மேலிடம் ஈஸ்வரப்பாவுக்கு உத்தரவிட்டது. இதனால் வேறு வழியின்றி ராஜினாமா கடிதத்தை அளித்திருக்கிறார்.

இதன் மூலம் எடியூரப்பா, சங்கர்மூர்த்தி, ஜெகதீஷ் ஷெட்டர், சதானந்த கவுடா ஆகிய மூத்த தலைவர்களின் அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வந்ததுபோல கே.எஸ்.ஈஸ்வரப்பாவின் அரசியல் வாழ்க்கையும் முடிவுக்கு வந்திருக்கிறது. அதேவேளையில் பாஜக மேலிடம், 70 வயதுக்கு மேற்பட்டவர்களை அதிகாரத்தில் இருந்து விலக்கும் தன் கொள்கையை இதன் மூலம் நிறைவேற்றியுள்ளது.

வாரிசுகளை களமிறக்க முடிவு

எடியூரப்பா, ஈஸ்வரப்பா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் இல்லாமல் 2023ல் கர்நாடகாவில் நடக்கும் சட்டப்பேரவைத் தேர்தலை பாஜக சந்திக்கப் போகிறது. பசவராஜ் பொம்மை, அஷ்வத் நாராயண், அசோகா ஆகிய அடுத்த தலைமுறை தலைவர்களின் தலைமையில் தேர்தலை சந்திக்க முடிவெடுத்துள்ளது.

இதில் தங்களது அதிகாரத்தை தக்க வைப்பதற்காக எடியூரப்பா, ஈஸ்வரப்பா உள்ளிட்ட மூத்ததலைவர்கள் தங்களது வாரிசுகளை களமிறக்க திட்டமிட்டுள்ளன‌ர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

25 mins ago

சினிமா

35 mins ago

உலகம்

44 mins ago

சினிமா

50 mins ago

தமிழகம்

18 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

54 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

கல்வி

1 hour ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

மேலும்