உத்தராகண்ட் முதல்வராக புஷ்கர் சிங் தாமி மீண்டும் பதவியேற்பு: விழாவில் பிரதமர் மோடி உள்ளிட்டோர் பங்கேற்பு

By செய்திப்பிரிவு

டேராடூன்: உத்தராகண்ட் முதல்வராக புஷ்கர் சிங் தாமி மீண்டும் இன்று பதவியேற்று கொண்டார். பிரதமர் மோடி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

உத்தராகண்ட் சட்டப் பேரவைக்கு நடந்த தேர்தலில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் பாஜக 47 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது. எனினும், கதிமா தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்ட முதல்வர் புஷ்கர் சிங் தாமி, காங்கிரஸ் வேட்பாளர் புவன் சந்திர கப்ரியிடம் 6,579 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

அவர் தோல்வியை தழுவியபோதிலும் பாஜக பெற்ற அமோக வெற்றிக்கு புஷ்கர் சிங் தாமியின் பங்களிப்பு முக்கிய காரணம் என்றும் மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்த அவர் மீண்டும் முதல்வராக வேண்டும் என்றும் பாஜக தலைவர்கள் விரும்பினர்.

இந்நிலையில், பாஜக எம்எல்ஏ.க்கள் கூட்டம் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இதில் கட்சியின் மேலிட பார்வையாளர்களாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ் நாத் சிங், மீனாட்சி லேகி, தேர்தல் பொறுப்பாளர் பிரஹலாத் ஜோஷி கலந்து கொண்டனர்.

இதில் முதல்வர் பதவிக்கு புஷ்கர் சிங் தாமி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். புஷ்கர் சிங் தாமி தலைமையில் உத்தராகண்ட் மாநிலம் விரைவான வளர்ச்சி பெறும் என்றும் ராஜ்நாத் சிங் கூறினார். இதையடுத்து, உத்தராகண்ட் முதல்வராக புஷ்கர் சிங் தாமி மீண்டும் இன்று பதவியேற்று கொண்டார்.

டேராடூனின் பரேட் மைதானத்தில் நடைபெற்ற விழாவில் 46 வயதான புஷ்கர் சிங் தாமிக்கு உத்தரகாண்ட் ஆளுநர் லெப்டினன்ட் ஜெனரல் குர்மித் சிங் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். தாமியுடன் எட்டு கேபினட் அமைச்சர்கள் பதவியேற்றனர். அவர்களில் சத்பால் மகராஜ், சுபோத் உனியால், தன் சிங் ராவத், ரேகா ஆர்யா மற்றும் கணேஷ் ஜோஷி முந்தைய அமைச்சரவையில் அங்கம் வகித்தனர்.

சந்தன் ராம் தாஸ், சௌரப் பகுகுணா மற்றும் பிரேம்சந்த் அகர்வால் ஆகிய மூன்று புதிய முகங்கள் ஆவர். பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தலைவர் ஜே.பி. நட்டா, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டார் உள்ளிட்ட பாஜக தலைவர்களும் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

38 mins ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

சினிமா

4 hours ago

இந்தியா

5 hours ago

வணிகம்

13 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

சுற்றுலா

6 hours ago

மேலும்