மும்பை கர்நாடகா 'கிட்டூர் கர்நாடகா' எனப் பெயர் மாற்றம்: பசவராஜ் பொம்மையின் முடிவுக்கு மராட்டிய அமைப்புகள் எதிர்ப்பு

By இரா.வினோத்

'மும்பை-கர்நாடகா' பிராந்தியத்தின் பெயரை 'கிட்டூர் கர்நாடகா' என மாற்றியதற்கு மராட்டிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

1956-ல் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது தமிழ்நாடு, ஆந்திரா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து பல பகுதிகளைப் பிரித்து கர்நாடக மாநிலம் உருவாக்கப்பட்டது. அவ்வாறு இணைக்கப்பட்ட எல்லையோர மாவட்டங்கள் ஹைதராபாத் ‍- கர்நாடகா, மும்பை - கர்நாடகா என அழைக்கப்பட்டன.

இந்நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு முதல்வராக இருந்த எடியூரப்பா "ஹைதராபாத் கர்நாடகா'வின் பெயரை 'கல்யாண் கர்நாடகா' என மாற்றினார். இதையடுத்து 'மும்பை கர்நாடகா'வின் பெயரை 'கிட்டூர் கர்நாடகா' என மாற்ற வேண்டும் என கன்னட அமைப்புகள் கோரிக்கை விடுத்தன.

இதைத் தொடர்ந்து முதல்வர் பசவராஜ் பொம்மை வடகன்னடா, பெலகாவி, தார்வாட், விஜயபுரா, பாகல்கோட்டை, கதக், ஹாவேரி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய மும்பை கர்நாடகாவின் பெயரை மாற்றுவது குறித்து அந்தப் பகுதியைச் சேர்ந்த‌ அமைச்சர்கள், அதிகாரிகளுடன் கடந்த வாரம் ஆலோசனை நடத்தினார். இதற்கு அனைவரும் ஒப்புதல் வழங்கியதை தொடர்ந்து, அமைச்சரவையில் விவாதித்து தீர்மானமும் நிறைவேற்றினார்.

இதையடுத்து முதல்வர் பசவராஜ் பொம்மை, ''மும்பை-கர்நாடகா பிராந்தியம் இனி 'கிட்டூர் கர்நாடகா' என அழைக்கப்படும். மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோதே இந்தப் பெயரைச் சூட்டியிருக்க வேண்டும். கர்நாடகாவுடன் சேர்ந்த பிறகு இன்னும் மும்பையுடன் சேர்த்து அழைப்பதற்கு எந்த அர்த்தமும் இல்லை. எனவே வீரமங்கை ராணி சென்னம்மாவின் நினைவாக பெலகாவி மாவட்டத்தில் அவர் பிறந்த கிட்டூரின் பெயரில் அந்தப் பகுதி அழைக்கப்படும்'' என அறிவித்தார்.

முதல்வரின் அறிவிப்பை வரவேற்றுள்ள கன்னட அமைப்புகள் இனிப்பு வழங்கி கொண்டாடின. அதே வேளையில் பெலகாவியில் உள்ள மராட்டிய அமைப்பினரும், சிவசேனா கட்சியினரும் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தங்களின் எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் எல்லையோரப் பகுதிகளில் கறுப்புக் கொடியை ஏற்றியுள்ளனர். பெலகாவியை மகாராஷ்டிராவுடன் இணைக்க வலியுறுத்தி போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

ஏகி கிரண் விடுத்துள்ள அறிக்கையில், ''பெலகாவியைச் சுற்றியுள்ள பகுதிகளைக் கர்நாடகாவுடன் இணைத்ததில் இருந்து மராத்திய அடையாளங்கள் தொடர்ந்து அழிக்கப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாகவே தற்போது இந்தப் பெயரைச் சூட்டி இருக்கிறார்கள். கன்னட அடையாளங்களைச் சூட்டுவதைக் காட்டிலும் இந்தப் பகுதி மக்களின் முன்னேற்றத்துக்கான திட்டங்களை அரசு தீட்ட வேண்டும்'' என வலியுறுத்தியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

உலகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

7 hours ago

சினிமா

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்