வலிப்பு நோயை முன்கூட்டியே எச்சரிக்கும் தலைக்கவசம்: கேரள பேராசிரியர்கள், ஆய்வு மாணவர் இணைந்து கண்டுபிடிப்பு

By செய்திப்பிரிவு

வலிப்பு நோய் குறித்து முன்கூட்டியேஎச்சரிக்கை விடுக்கும் தலைக்கவசத்தைகேரளாவைச் சேர்ந்த பேராசிரியர்களும்ஆய்வு மாணவரும் இணைந்து கண்டுபிடித்துள்ளனர்.

கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள மத்தியப் பல்கலைக்கழகத்தின் கணினி அறிவியல் துறைத் தலைவர் ராஜேஷ், பேராசிரியை தஸ்லீம்மா, ஆய்வு மாணவரான பாசில் ஆகியோர் இணைந்து தலைக்கவசத்தை வடிவமைத்துள்ளனர். இதுகுறித்து கணினி அறிவியல் துறைத் தலைவர் ராஜேஷ் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியதாவது:

நான் கடந்த 2016-ம் ஆண்டு பிஹார்மத்தியப் பல்கலைக்கழகத்தில் பணிசெய்து கொண்டிருந்தேன். அங்கிருந்துகேரளாவுக்கு ரயிலில் வந்து கொண்டிருந்தபோது எதிர் படுக்கையில் இருந்த ஒருவருக்கு திடீரென வலிப்பு நோய் வந்தது. பக்கத்து இருக்கையில் இருந்த எங்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. திடீரென வலிப்பு வந்ததால் கீழே விழுந்த அவருக்கு பெரிய அளவில் காயமும் ஏற்பட்டது. அப்போது இருந்தே வலிப்பு நோயாளிகளுக்கு உதவும் வகையில் ஏதாவது கண்டுபிடிக்க வேண்டும் என ஆராய்ச்சியில் ஈடுபடத் தொடங்கினேன். பணி மாறுதல் பெற்று கேரளா வந்ததும் ஆய்வு மாணவர் பாசில், பேராசிரியை தஸ்லீம்மா ஆகியோரும் கைகோர்த்து இந்த முயற்சியில் ஈடுபட்டனர்.

எவ்வித முன் அறிகுறியும் இன்றி திடீரென்றுதான் வலிப்பு வரும். அதிலும் நீச்சல், பயணம், இயந்திரங்களில் பணி செய்யும் தருணம் போன்ற சூழல்களிலும் வாகனங்களை இயக்கும்போதும் வலிப்புநோய் வந்துவிட்டால் பாதிப்பு பெரிய அளவில் ஏற்பட்டுவிடுகிறது. அப்படியான தருணங்களில் இந்த தலைக்கவசம் மிகச்சிறந்த பலனைத்தரும். இந்த தலைக்கவசம் மூன்று முதல் பத்து நிமிடங்களுக்கு முன்பே வலிப்பு வரப்போவதை உணர்த்திவிடும். இருந்தாலும், கடைசி 3 நிமிடங்களில் மிகத் துல்லியமாக காட்டுவதையும் சோதனையில் நிரூபித்திருக்கிறோம். இதன் மூலம் வலிப்பு நோய் உள்ளவர் பயணத்தை தவிர்க்கவோ, அருகில் இருப்பவரிடம் உதவி கேட்கவோ முடியும்.

இப்போதைய நிலையில் இதன்வடிவத்துக்கு காப்புரிமை வாங்கிவிட்டோம். அடுத்ததாக தயாரிக்கப்பட்ட பொருளுக்கு காப்புரிமை வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். சாதாரண ஹெல்மெட் போலவே இதுவும் இருக்கும். அதனால் தலையில் கூடுதல் எடையை சுமப்பதாக இருக்காது. இதே ஹெல்மெட்டில் அருகாமையில் இருக்கும் மருத்துவமனைக்கு தன்னிச்சையாக செல்போன் மெசேஜ் மூலம் தகவல் செல்லும் வசதியையும் ஏற்படுத்த இருக்கிறோம். மூளை நரம்பியல் தொடர்பாக பலகட்ட ஆராய்ச்சிக்குப் பின்பே இதை வடிவமைத்துள்ளோம்.

இதயத்தின் செயல்பாட்டை பரிசோதிக்க இசிஜி எடுப்பது போல, வலிப்புநோய் உள்ளவர்களுக்கு மூளையின் மின்செயல்பாட்டை விளக்க இஜிஜி எடுப்பார்கள். இதற்கு சிறிய அளவிலான கருவிகள்இல்லை. இதனால் மருத்துவமனைகளை சார்ந்தே இருக்க வேண்டி உள்ளது. அந்தக் கருவியின் சிறிய வடிவமாக உலோக வட்டு, மின்முனைகள் இந்த ஹெல்மெட்டில் உச்சந்தலையில் தொடுவது போல் இருக்கும். இவைதான் நமக்கு வலிப்பு வரப்போவதை உணர்ந்து கடத்தும். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுலா

2 mins ago

சினிமா

7 mins ago

இந்தியா

28 mins ago

தமிழகம்

43 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்