விவசாயிகளைத் தவறாக வழிநடத்தும் அனைத்து கட்சிகளையும் மக்கள் நிராகரித்துள்ளனர்: பிரதமர் மோடி கடும் தாக்கு

By செய்திப்பிரிவு

அஸ்ஸாம், ராஜஸ்தான், ஜம்மு காஷ்மீர் ஆகிய இடங்களில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களில் பங்கேற்ற மக்கள், விவசாயிகளைத் தவறாக வழிநடத்தும் அனைத்து கட்சிகளையும் நிராகரித்துள்ளனர் என்று பிரதமர் மோடி கூறினார்.

பிரதமர் கிசான் சம்மான் நிதித்திட்டத்தின் கீழ் அடுத்த தவணைக்கான தொகையை காணொலி மாநாடு மூலமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று விடுவித்தார். இதில் அவர் பங்கேற்று பேசியதாவது:

இன்று ஒரே ஒரு பொத்தானை அழுத்தியதன் மூலம் நாட்டிலுள்ள ஒன்பது கோடிக்கும் அதிகமான விவசாயக் குடும்பங்களின் வங்கிக் கணக்குகளுக்கு 18,000 கோடி ரூபாய் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் தொடங்கப்பட்ட நாளிலிருந்து இதுவரை ஒரு லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 23 இலட்சம் விவசாயிகள் இந்த நிதி வசதி பெறுவதற்காக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்திருந்தார்கள். ஆனால் அந்த மாநில அரசு பரிசோதனை வழிமுறைகளுக்காக வெகுகாலம் நிறுத்தி வைத்துவிட்டது.

மேற்கு வங்கத்தில் உள்ள விவசாயிகளின் நலன்கள் குறித்துப் பேசாத கட்சிகள், தில்லிக்கு வந்து விவசாயிகள் குறித்துப் பேசுகின்றனர் என்று அவர் கூறினார். இந்தக் கட்சிகள் தற்போது வேளாண் விளைபொருள் விற்பனைக் குழு மண்டிகள் இல்லாதது குறித்துக் கவலைப்படுகிறார்கள். ஆனால் கேரள மாநிலத்தில் ஏ பி எம் சி மண்டிகள் இல்லை என்பதை அவர்கள் மறந்து விடுகிறார்கள். இவர்கள் கேரளாவில் எந்தவிதப் போராட்டமும் நடத்துவதில்லை.

விவசாயிகளின் இடுபொருள்களுக்கான செலவினத்தைக் குறைக்கும் நோக்குடன் அரசு பணியாற்றுவதாக அவர் கூறினார். விவசாயிகளின் இடுபொருள்களுக்கான செலவினங்களைக் குறைக்க உதவும் வகையில் மண்வள அட்டை, யூரியா மீது வேம்புப் பூச்சு, சூரியசக்திக் குழாய்கள் வழங்குதல் போன்ற விவசாயிகளை மையமாகக் கொண்ட பல்வேறு அரசுத் திட்டங்கள் செயல்படுத்தபடுகின்றன.

விவசாயிகளுக்கு மேலும் சிறந்த வகையிலான விவசாயக் காப்பீட்டு வசதி செய்து தரப்பட வேண்டும் என்பதை உறுதி செய்ய அரசு முயன்று வருகிறது. இன்று கோடிக்கணக்கான விவசாயிகள் பிரதமர் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் பயனடைந்து வருகிறார்கள்.

நாட்டில் உள்ள விவசாயிகளின் பயிர்களுக்கு நியாய விலை கிடைப்பதை உறுதி செய்ய அரசு முயன்றுள்ளது.

நீண்டகாலமாக நிலுவையிலிருந்த சாமிநாதன் குழு அறிக்கையின் பரிந்துரையின் பேரில் விவசாயிகளுக்கு உற்பத்திச் செலவில் ஒன்றரை மடங்கு தொகையை குறைந்தபட்ச ஆதரவு விலையாக அரசு நிர்ணயித்தது.

குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கப்பட்ட பயிர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
விவசாயிகள் தங்களது பயிர்களை விற்பனை செய்வதற்காக புதிய சந்தைகளைத் திறக்க அரசு திட்டமிட்டுள்ளது.

நாட்டிலுள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாய மண்டிகளை ஆன்லைன் மூலமாக அரசு இணைத்துள்ளது. இந்த மண்டிகளின் வாயிலாக ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான வர்த்தகம் நடைபெற்றுள்ளது.

விவசாயிகள் தங்கள் பகுதிகளில் கூட்டு சக்தியாக செயலாற்றும் வகையில் சிறு விவசாயிகள் கொண்ட குழுக்களை அமைக்கும் பணியை அரசு மேற்கொண்டு வருகிறது.

இன்று நாட்டில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் உற்பத்தி அமைப்புகள் (எஃப் பி ஓ) ஏற்படுத்துவதற்கான இயக்கம் நடந்து வருகிறது. இந்த அமைப்புகளுக்கு நிதியுதவி அளிக்கப்பட்டு வருகிறது.

இன்று விவசாயிகளுக்கு நல்ல வீடு, கழிவறை, குழாய் மூலம் வழங்கப்படும் சுத்தமான குடிநீர் ஆகியவை கிடைக்கின்றன. இலவச மின் இணைப்பு, இலவச சமையல் எரிவாயு இணைப்பு ஆகியவற்றின் மூலம் அவர்கள் பெருமளவு பயனடைந்திருக்கிறார்கள்.

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ஐந்து இலட்ச ரூபாய் வரையிலான மருத்துவ சிகிச்சை இலவசமாக அளிக்கப்பட்டு வருவதால் விவசாயிகளுக்கு அவர்களின் வாழ்க்கை பற்றிய மிகப் பெரும் கவலை வெகுவாகக் குறைந்துள்ளது.

விவசாய சீர்திருத்தங்கள் மூலமாக விவசாயிகளுக்கு, முந்தைய நிலையில் இருந்ததை விட பல்வேறு வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகது. இந்தச் சட்டங்களின் காரணமாக விவசாயிகள் தாங்கள் விரும்பும் யாருக்கு வேண்டுமானாலும் தங்களின் விளைபொருள்களை விற்கலாம். எங்கு அவர்களுக்கு சரியான விலை கிடைக்கிறதோ அங்கு தங்கள் பொருள்களை அவர்கள் விற்றுக் கொள்ளலாம். இந்தப் புதிய சட்டங்கள் காரணமாக விவசாயிகள் தங்கள் விளைபொருள்களை குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு விற்கலாம் அல்லது சந்தையில் விற்கலாம் அல்லது ஏற்றுமதி செய்யலாம் அல்லது ஒரு வியாபாரியிடம் விற்கலாம் அல்லது மற்றொரு மாநிலத்தில் விற்கலாம் அல்லது எஃப் பி ஓ மூலமாக விற்கலாம் அல்லது பிஸ்கட்டுகள், சிப்ஸ், ஜாம் மற்றும் இதர நுகர்வோருக்கான மதிப்புக் கூட்டப்பட்ட பண்டங்களின் ஒரு பகுதியாக அங்கம் வகிக்கலாம்.

மற்ற துறைகளில் முதலீடும், புதுமைகளும் அதிகரித்துள்ளன; அந்தந்தத் துறைகளில் இந்தியாவின் தனித்தன்மை நிலைபெற்றுவிட்டது; வருமானம் அதிகரித்துள்ளது. இதே அளவு மரியாதையுடன் பெருமிதத்துடன் உலகின் விவசாயச் சந்தைகளில் இந்தியாவிற்கான தனியிடத்தை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது.

விவசாய சீர்திருத்தங்களுக்கு முழு ஆதரவளித்து அவற்றுக்கு வரவேற்பளித்துள்ள நாட்டின் பல்வேறு இடங்களிலும் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் நன்றி தெரிவித்த அவர், விவசாயிகள் ஒரு போதும் கைவிடப்பட மாட்டார்கள்.

மக்கள், குறிப்பாக, கிராமப்புறப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள், சமீபத்தில் அஸ்ஸாம், ராஜஸ்தான், ஜம்மு காஷ்மீர் ஆகிய இடங்களில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களில் பங்கேற்றனர் என்றும் விவசாயிகளைத் தவறாக வழிநடத்தும் அனைத்து கட்சிகளையும் ஒருவிதத்தில் அவர்கள் நிராகரித்துள்ளனர்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

2 hours ago

இந்தியா

4 mins ago

சுற்றுச்சூழல்

32 mins ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

3 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

8 hours ago

விளையாட்டு

9 hours ago

சினிமா

10 hours ago

மேலும்