கேரள உள்ளாட்சித் தேர்தலில் இடதுசாரிகள் வெற்றி; கேரளத்தை அழிக்க முயன்ற காங், பாஜகவுக்கு மக்கள் பதிலடி: பினராயி விஜயன் பேச்சு

By ஏஎன்ஐ

கேரள உள்ளாட்சித் தேர்தலில் இடதுசாரி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அபாரமான வெற்றியைப் பெற்றுள்ளது. கேரளத்தையும், இடதுசாரி அரசின் சாதனையையும் அழிக்க முயன்ற காங்கிரஸ், பாஜகவுக்கு மக்கள் பதிலடி கொடுத்துள்ளார்கள் என முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் உள்ளாட்சித் தேர்தல் 3 கட்டங்களாக நடந்தது. முதல் கட்டத் தேர்தல் டிசம்பர் 8-ம் தேதியும், 2-ம் கட்டத் தேர்தல் 10-ம் தேதியும், 3-ம் கட்டத் தேர்தல் 14-ம் தேதியும் நடந்தது. இன்று வாக்கு எண்ணிக்கை நடந்தது.

941 கிராமப் பஞ்சாயத்துகள், 152 மண்டலப் பஞ்சாயத்துகள், 14 மாவட்டப் பஞ்சாயத்துகள், 86 நகராட்சிகள், 6 மாநகராட்சிகளுக்குப் பிரதிநிதிகளை 2.76 கோடிக்கும் மேலான வாக்காளர்கள் தேர்ந்தெடுத்தனர்.

இந்தத் தேர்தலில் சமீபத்திய முடிவுகளின்படி, ஆளும் மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி 941 கிராமப் பஞ்சாயத்துகளில் 516-ல் முன்னணியில் இருந்து வருகிறது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 375 இடங்களில் முன்னணியில் இருக்கிறது. பாஜக 23 இடங்களில் முன்னணியில் இருக்கிறது.

மண்டலப் பஞ்சாயத்துகளில் மொத்தமுள்ள 152 இடங்களில் ஆளும் மார்க்சிஸ்ட் கூட்டணி 108 இடங்களிலும், காங்கிரஸ் 44 இடங்களிலும் முன்னணியில் இருக்கின்றன. 14 மாவட்டப் பஞ்சாயத்துகளில் 10 இடங்களில் மார்க்சிஸ்ட் கூட்டணியும், 4 இடங்களில் காங்கிரஸ் கூட்டணியும் உள்ளன.

85 நகராட்சிகளில் 35 இடங்களில் இடதுசாரி முன்னணியும், 45 இடங்களில் காங்கிரஸ் கூட்டணியும், பாஜக 2 இடங்களிலும் முன்னணியில் இருக்கின்றன. 6 மாநகராட்சிகளில் இடதுசாரி, காங்கிரஸ் தலா 3 இடங்களில் முன்னணியில் இருக்கின்றன.

மாநிலத்தில் ஆளும் இடதுசாரிக் கூட்டணி அரசு மிகப்பெரிய வெற்றியை எதிர்நோக்கிச் செல்லும் நிலையில், முதல்வர் பினராயி விஜயன் இன்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

''இந்த வெற்றி கேரள மக்களுடையது. கேரளத்தையும், அரசின் சாதனைகளையும் அழிக்க முயன்றவர்களுக்கு மக்கள் பதிலடி கொடுத்துள்ளார்கள். மத்திய விசாரணை அமைப்புகள் மூலம் ஆளும் அரசைச் சிதைக்க முயன்றவர்களின் முயற்சி தோற்கடிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கும், அதன் சந்தர்ப்பவாத அரசியலுக்கும் கேரளத்தில் இடமில்லை என்பதை முடிவுகள் தெரிவித்துவிட்டன. பாஜகவுடன் சேர்ந்துகொண்டு காங்கிரஸ் கட்சி தவறான பிரச்சாரங்களை முன்னெடுத்து, இடதுசாரி அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்த முயன்றது. அது தோல்வி அடைந்தது.

கிராமப் பஞ்சாயத்துகளில் இடதுசாரி ஜனநாயக முன்னணி சிறப்பாகச் செயல்பட்டுள்ளது. மக்கள் மிகப்பெரிய அளவில் இடதுசாரிகளுக்கு ஆதரவாக இருக்கிறார்கள். காங்கிரஸ் கூட்டணிக்கு நல்ல மதிப்பு இருந்தும், இடதுசாரிதான் வென்றுள்ளது. மக்கள் காங்கிரஸ் கூட்டணி மீது நம்பிக்கை இழந்துவிட்டார்கள்.

கேரள மக்கள் எப்போதும் மதச்சார்பற்ற தன்மைக்குத்தான் ஆதரவு அளிப்பார்கள். குறிப்பிட்ட ஊடகங்கள் மூலம் செய்யப்படும் தவறான பிரச்சாரம் எடுபடவில்லை. கேரள மக்களின் இதயங்களில் மதச்சார்பற்ற தன்மைக்கு இடமுள்ளது. இதற்குக் காரணம் இடசதுசாரிகளை நம்புகிறார்கள்.

இடதுசாரி அரசு தொடர வேண்டும் என்பதை மக்கள் விரும்புகிறார்கள். அதைத்தான் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துகின்றன. இடதுசாரிக் கூட்டணி அரசு கடந்த 4 ஆண்டுகளாகச் செய்த வளர்ச்சிப் பணிகளை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.

தவறான பிரச்சாரத்துக்குப் பின்னால் இருந்தவர்கள், மக்களின் தீர்ப்பு இடதுசாரி அரசுக்கு எதிராக இருக்கும் என நினைத்தார்கள். தவறான பிரச்சாரத்தை நம்பாமல், ஆட்படாமல் இடதுசாரி அரசுக்கு ஆதரவு அளித்த மக்களுக்கும், வாக்காளர்களுக்கும் நன்றி தெரிவிக்கிறேன்.

பாஜகவும், காங்கிரஸ் கூட்டணியும் சேர்ந்து மாநிலத்தின் வளர்ச்சிக்கு விரோதமான பிரச்சாரத்தை முன்னெடுத்தன. இனிமேல் அதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட வளர்ச்சிப் பணிகளை இடதுசாரி அரசு செய்துள்ளது. அனைத்துத் தரப்பு மக்களையும் வளர்ச்சிப் பணிகள் சென்று சேர்ந்துள்ளன.

ஆட்சியில் இருந்த எந்த மாநில அரசும் நாங்கள் சந்தித்தது போன்ற இயற்கைப் பேரிடர்களைச் சந்தித்திருக்க முடியாது. ஒக்கி புயல், வெள்ளம், நிபா வைரஸ், கரோனா எனப் பல சவால்களைச் சந்தித்தோம். கேரள அரசு செய்த பணிகள், முயற்சிகளை மக்கள் புரிந்துகொண்டு தேர்தலில் வாக்களித்துள்ளனர்''.

இவ்வாறு பினராயி விஜயன் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

19 mins ago

வர்த்தக உலகம்

23 mins ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

உலகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

9 hours ago

சினிமா

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்