ஹரியாணாவில் பாஜக ஆட்சிக்கு சிக்கல்: விவசாயிகளுக்கு மத்திய அரசு எம்எஸ்பி அளிக்காவிட்டால் பதவியை ராஜினாமா செய்வதாக துணை முதல்வர் துஷ்யந்த் மிரட்டல்

By ஆர்.ஷபிமுன்னா

விவசாயிகளுக்கு மத்திய அரசு குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்எஸ்பி) அளிக்காவிட்டால், பதவியை ராஜினாமா செய்வதாக துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலா மிரட்டியுள்ளார். இதனால், ஹரியாணாவில் ஆளும் பாஜக அரசிற்கு சிக்கல் உருவாகி உள்ளது.

கடந்த வருடம் அக்டோபரில் நடைபெற்ற ஹரியாணாவின் சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவால் ஆட்சியை தொடர முடியவில்லை. அதிக தொகுதிகள் கிடைத்தாலும் அதற்கு ஆட்சி அமைக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை.

இதனால், உருவான தொங்கு சபையில் இரண்டாம் இடத்தை பெற்ற காங்கிரஸ் சிறிய கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் உதவியுடன் ஆட்சி அமைக்க முயன்றது. இதை தடுத்த பாஜக, ஜனநாயக் ஜனதா கட்சி (ஜேஜேபி) தலைவர் துஷ்யந்த் சவுதாலாவின் 10 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் ஆட்சி அமைத்திருந்தது.

இதன் முதல்வராக மனோகர் லால் கட்டார் மீண்டும் பதவி அமர்ந்தார். துணை முதல்வராக இளைஞரான துஷ்யந்த் சவுதாலா அமர்த்தப்பட்டார்.

இச்சூழலில், டெல்லியில் தொடங்கிய விவசாயிகள் போராட்டத்தில் ஹரியாணாவின் ஜாட் சமூகத்தினரும் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். இவர்களது முக்கிய கோரிக்கையாக எம்எஸ்பி நிர்ணயம் அமைந்துள்ளது.

இதனால், துணை முதல்வரான துஷ்யந்த் சவுதாலா ஹரியாணா விவசாயிகளுக்கு ஆதரவாகத் திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது. இதற்காக, அதன் நிர்வாகிகள் மத்திய அரசின் முக்கியத்துறைகளின் அமைச்சர்களையும் நேரில் சந்தித்தனர்.

ஜாட் சமூகத்தினரின் ஆதரவு பெற்ற கட்சியாக ஜேஜேபி இருப்பதால், விவசாயிகள் கோரும் எம்எஸ்பியை மத்திய அரசு நிர்ணயிக்கா விட்டால் தம் பதவியை ராஜினாமா செய்வதாக துஷ்யந்த் மிரட்டியுள்ளார்.

இதுகுறித்து துஷ்யந்த் சவுதலா கூறும்போது, ‘எங்களது வலியுறுத்தலால் விவசாயிகளுக்கு எம்எஸ்பி அளிக்கப்படுவதாக மத்திய அரசு எங்களிடம் உறுதி கூறியுள்ளது.

இதை அளிக்காவிட்டால் பதவியை ராஜினாமா செய்யும் முதல் நபராக நான் இருப்பேன். மற்ற கோரிக்கைகளையும் மத்திய அரசு விரைவில் நிறைவேற்றும் என நம்புகிறேன்.’ எனத் தெரிவித்தார்.

முன்னாள் துணை பிரதமரான தேவிலாலின் மகனான ஓம் பிரகாஷ் சவுதாலா, ஹரியாணாவின் இந்திய தேசிய லோக் தளம் கட்சியின் தலைவர் ஆவார். ஹரியானாவின் முன்னாள் முதல்வருமான ஓம் பிரகாஷ் சவுதாலாவின் ஆட்சியில் ஆசிரியர் தேர்வாணையத்தின் பல கோடி ஊழல் நடைபெற்றது.

இந்த வழக்கில் தனது மூத்த மகன் அஜய்சிங் சவுதாலாவுடன் சிக்கி ஓம் பிரகாஷ் சிறையில் உள்ளார். இந்நிலையால் தன் தந்தையுடன் அஜய்சிங்கிற்கு மனக்கசப்பு உருவானது.

இதனால் தன் மகன் துஷ்யந்தை வைத்து ஜேஜேபி எனும் பெயரில் ஒரு புதிய கட்சியை டிசம்பர் 8, 2018 இல் அஜய்சிங் துவக்கினார். இதற்கு ஹரியாணா தேர்தலில் கிடைத்த 10 எம்எல்ஏக்களால் துஷயந்த் சவுதாலா அம்மாநிலத்தின் ‘கிங் மேக்கர்’ என உருவெடுத்தார்.

ஜேஜேபிக்கு பாஜகவின் இடையே மோதல் ஏற்படும் வேளைக்காக காங்கிரஸும் காத்திருக்கிறது. தனது பதவியை துஷ்யந்த் ராஜினாமா செய்தால் அவரை தன் பக்கம் இழுத்து சுயேச்சைகள் ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சி அமைக்கத் தயாராகவும் உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

56 mins ago

விளையாட்டு

1 hour ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

க்ரைம்

3 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

க்ரைம்

4 hours ago

இந்தியா

4 hours ago

சினிமா

5 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

சுற்றுலா

5 hours ago

மேலும்