அதிக மாத்திரை உட்கொண்டு தற்கொலை முயற்சி: இந்திராணி கவலைக்கிடம்; டாக்டர்கள் 48 மணி நேரம் கெடு

By பிடிஐ

இளம்பெண் ஷீனா போரா கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அவரது தாய் இந்திராணி அதிக மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

மும்பை மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. 48 மணி நேரம் அவரை தீவிர கண் காணிப்பில் வைத்திருக்க டாக்டர்கள் முடிவு செய்துள்ளனர்.

ஸ்டார் இந்தியா முன்னாள் தலைமை செயல் அதிகாரி பீட்டர் முகர்ஜி யின் 2-வது மனைவி இந்திராணி. அசாம் மாநிலத்தை சேர்ந்த அவர், தனக்கு ஏற்கெனவே 2 திருமணங்கள் நடந்ததை மறைத்து 3-வதாக பீட்டர் முகர்ஜியை திருமணம் செய்தார். முதல் கணவருக்குப் பிறந்த மகள் ஷீனா போராவை (24) தங்கை என்று கூறி தன்னுடன் தங்க வைத்தார். பின்னர் கருத்து வேறுபாடு எழுந்ததால், ஷீனாவை இந்திராணி கொலை செய்ததாக புகார் எழுந்தது. இதற்கு 2-வது கணவர் சஞ்சீவ் கன்னா மற்றும் கார் டிரைவர் ஷியாம் ராய் ஆகியோரும் உதவியுள்ளனர். இதையடுத்து 3 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கை தற்போது சிபிஐ விசாரித்து வருகிறது.

மும்பையின் பைகுலா சிறையில் அடைக்கப்பட்டிருந்த இந்திராணி நேற்று முன்தினம் அதிக மாத்திரைகளை உட்கொண்டதால் மயங்கி விழுந்தார். உடனடியாக அவர் மும்பை ஜே.ஜே. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அளவுக்கு அதிகமாக உட்கொண்ட மாத்திரைகளை இந்திராணியின் வயிற்றில் இருந்து டாக்டர்கள் வெளியேற்றி வருகின்றனர். அவர் தற்கொலைக்கு முயன்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

தீவிர சிகிச்சைக்கு பிறகு மருத்து வர்கள் கேட்ட கேள்விகளுக்கு அரை மயக்கத்தில் பதில் அளித்துள்ளார். எனினும், அவரது உடல்நிலை கவலைக் கிடமாக உள்ளதாக கூறுகின்றனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து ஜே.ஜே. மருத்துவமனை டீன் டி.பி.லஹானே கூறும்போது, ‘‘இந்திராணி மூச்சுவிட சிரமப்படுகிறார். அதனால் தொடர்ந்து வென்டிலேட்டர் வைக்கப்பட்டுள்ளது. அரை மயக்கத்தில் இருந்தபடியே பேசுகிறார். ஆபத்து கட்டத்தை தாண்டிவிட்டார் என்று சொல்ல முடியாது. 48 மணி நேரம் கழிந்த பிறகே எதுவும் சொல்ல முடியும். அதுவரை அவர் தீவிர கண்காணிப்பில் வைக்கப்படுவார். அவர் உட்கொண்ட மாத்திரையின் வீரியம் குறைய 72 மணி நேரம் ஆகும். சிறுநீர் மற்றும் ரத்த பரிசோதனை முடிவுகள் கிடைத்த பிறகு அதற்கேற்ப சிகிச்சை தொடரும்’’ என்றார்.

இந்திராணியின் தாய் துர்கா ராணி போரா (82), அசாம் மாநிலம் குவா ஹாட்டியில் கடந்த செவ்வாய்க்கிழமை காலமானார். அந்த தகவல் கேட்டதில் இருந்தே இந்திராணி மிகுந்த மன அழுத்தத்தில் இருந்துள்ளார். அதற்காக அவருக்கு மருந்துகள் கொடுக்கப்பட்டுள்ளன. மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட இந்திராணியைப் பார்க்க அவருடைய குடும்பத்தில் இருந்து யாரும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திராணியை சந்திக்க மனு

ஜே.ஜே. மருத்துவமனையில் சிகிச்சை பெறும் இந்திராணியை சந்திக்க அவரது வழக்கறிஞர் குஞ்சன் மங்கலா, மும்பை பாந்த்ரா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு மாஜிஸ்திரேட் ஆர்.வி.அடோனி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ தரப்பு முன்வைத்த வாதத்தில், சில நாட்களுக்கு முன்புதான் வழக்கு எங்களிடம் மாற்றப்பட்டது, இப்போதைக்கு எந்த கருத்தையும் கூறமுடியாது என்று தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து இந்திராணியின் உடல் நிலை குறித்த மருத்துவ அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்ட மாஜிஸ்திரேட், விசா ரணையை ஒரு வாரத்துக்கு தள்ளி வைத்தார்.

சிறையில் மாத்திரைகள் கிடைத்தது எப்படி?

கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட இந்தி ராணிக்கு அதிக அளவு தூக்க மாத்திரைகள் கிடைத்தது எப்படி என்பது குறித்து விசாரணை நடத்த மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உத்தரவிட்டுள்ளார்.

இந்திராணி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது குறித்து சிறைத்துறை ஐ.ஜி. பிபின் குமார் சிங் கூறியதாவது: மன அழுத்தம் மற்றும் வலிப்பு நோய் தடுப்புக்காக இந்திராணிக்கு மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. ஜே.ஜே. மருத்துவமனை மருத்துவர்களின் பரிந்துரைப்படி தினமும் காலை, மாலை வேளைகளில் தலா 2 மாத்திரைகள் கொடுக்கப்படும். கடந்த செப்டம்பர் 11-ம் தேதியில் இருந்து அவர் மாத்திரைகள் உட்கொண்டு வருகிறார். செப்டம்பர் 26-ம் தேதி வரை அவர் சாப்பிட்டிருக்க வேண்டும்.

ஆனால், அளவுக்கு அதிகமாக மாத்திரைகள் அவருக்கு எப்படி கிடைத்தது என்பது தெரியவில்லை. தினமும் கொடுக்கும் மாத்திரைகளை சேர்த்து வைத்து அவர் மொத்தமாக சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றாரா என்பது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு பிபின் குமார் சிங் கூறினார்.

இதுகுறித்து மகாராஷ்டிர உள்துறை அதிகாரி சத்வீர் சிங் கூறும்போது, ‘‘வலிப்பு நோய்க்காக காலை, மாலை வேளைகளில் தினமும் 2 மாத்திரைகளை இந்திராணிக்கு சிறை அதிகாரிகள் முன்னிலையில் கொடுக்க வேண்டும். அந்த மாத்திரைகளை மொத்தமாக எப்படி சாப்பிட்டார் என்பது குறித்து விசாரணை நடத்தப்படும்’’ என்றார்.

சிறையில் அதிக அளவு மாத்திரைகள் இந்திராணிக்கு எப்படி கிடைத்தது என்பது குறித்து விசாரணை நடத்த மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உத்தரவிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

22 mins ago

தமிழகம்

36 mins ago

தமிழகம்

49 mins ago

தமிழகம்

59 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

தமிழகம்

1 hour ago

மேலும்