எப்ஏஓ-வின் 75-வது ஆண்டு தினம்; ரூ.75 சிறப்பு நாணயத்தை பிரதமர் மோடி  வெளியிடுகிறார்

By செய்திப்பிரிவு

உணவு மற்றும் வேளாண் அமைப்பு எப்ஏஓ-வின் 75-வது ஆண்டு தினத்தைக் குறிக்கும் வகையில் ரூ.75 சிறப்பு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிடுகிறார். அண்மையில் உருவாக்கப்பட்ட உயிரி செறிவூட்டிய 8 பயிர்களின் 17 ரகங்களையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

உணவு மற்றும் வேளாண் அமைப்பான எப்ஏஓ-வின் 75-வது ஆண்டைக் குறிக்கும் வகையிலும், இந்தியாவுக்கும், இந்த அமைப்புக்கும் உள்ள நீண்டகால தொடர்பைக் குறிக்கும் வகையிலும், வரும் 16-ம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி, 75 ரூபாய் மதிப்பாலான சிறப்பு நினைவு நாணயத்தை வெளியிடுகிறார். அண்மையில் உருவாக்கப்பட்ட உயிரி செறிவூட்டிய 8 பயிர்களின் 17 ரகங்களையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்

இந்த நிகழ்ச்சி வேளாண்மை மற்றும் ஊட்டச்சத்து விஷயத்தில் அரசின் முன்னுரிமையைக் காட்டும் விதத்தில் அமையும். வறுமையை முற்றிலுமாக ஒழிப்பது, ஊட்டச்சத்து குறைபாட்டை அகற்றுவது ஆகிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் சாசனமாக, இது திகழும். நாடு முழுவதையும் சேர்ந்த அங்கன்வாடிகள், வேளாண் அறிவியல் மையங்கள், இயற்கை விவசாயம் மற்றும் தோட்டக்கலை இயக்கங்களைச் சார்ந்தவர்கள் இதன் பார்வையாளர்களாக இருப்பார்கள். மத்திய வேளாண் அமைச்சர், நிதி அமைச்சர், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள்.

இந்தியா மற்றும் எப்ஏஓ

பாதிப்புக்குள்ளாகும் வாய்ப்புள்ள மக்களை பொருளாதார ரீதியாகவும், ஊட்டச்சத்து மூலமாகவும் வலிமையானவர்களாக மாற்றும் எப்ஏஓ-வின் பயணம், ஈடு இணையற்றதாகும். இந்த அமைப்புடன் இந்தியாவுக்கு வரலாற்று தொடர்பு உள்ளது. இந்தியாவின் குடிமைப் பணி அதிகாரி டாக்டர் பினய் ரஞ்சன் சென், இந்த அமைப்பின் தலைமை இயக்குநராக 1956 முதல் 1967 வரை பணியாற்றினார். 2020-ம் ஆண்டின் நோபல் பரிசு வென்ற உலக உணவு திட்டம், அவரது காலத்தில்தான் உருவாக்கப்பட்டது. 2016-ம் ஆண்டை சர்வதேச பருப்பு வகை ஆண்டு எனவும், 2023-ம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாகவும் கடைப்பிடிக்க வேண்டும் என்ற இந்தியாவின் யோசனையை எப்ஏஓ ஏற்றுக் கொண்டது.

ஊட்டச்சத்து குறைபாட்டை சமாளித்தல்

10 கோடிக்கும் மேற்பட்டவர்களிடத்தில் உள்ள மயக்கம், தடுமாற்றம், ஊட்டச்சத்து பற்றாக்குறை, ரத்தசோகை, பிறக்கும் சிசுவின் எடை குறைவு ஆகிய குறைபாடுகளைக் களைவதை நோக்கமாகக் கொண்டு, லட்சிய திட்டமான போஷான் அபியான் இயக்கத்தை இந்தியா செயல்படுத்தி வருகிறது. ஊட்டச்சத்து குறைபாடு என்பது உலகளாவிய பிரச்சினையாக உள்ளது. உலகம் முழுவதும் இந்தக் குறைபாட்டால், சுமார் 200 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். குழந்தைகள் இறப்பில் சுமார் 45% சத்துக் குறைபாட்டால் ஏற்படுகிறது. ஐ.நா.வின் 17 நீடித்த வளர்ச்சி இலக்குகளில் இதுவும் ஒன்றாகும்.

சர்வதேச முன்னுரிமையுடன் இணைந்து, இரும்புச் சத்து, துத்தநாகச் சத்து, கால்சியம், முழுமையான புரதம், உயர் லிசின், டிரிப்டோபான் புரோ வைட்டமின் ஏ, ஒலியக் அமிலம் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகளைக் குறைக்கும் தன்மை கொண்ட தரமான புரதம் ஆகியவற்றை அதிகமாகக் கொண்ட ஊட்டச்சத்து மிக்க ரகங்களை உருவாக்குவதே அரசின் முன்னுரிமையாக உள்ளது. இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் தலைமையில் இயங்கும் தேசிய வேளாண் ஆராய்ச்சி முறை, கடந்த ஐந்து ஆண்டுகளில் இதுபோன்ற 53 ரகங்களை உருவாக்கியுள்ளது. 2014-ம் ஆண்டுக்கு முன்பு உயிரி செறிவூட்டிய ரகம் ஒன்றுதான் உருவாக்கப்பட்டது.

இந்திய உணவை ஊட்டச்சத்து உணவாக மாற்றுதல்

அண்மையில் உருவாக்கப்பட்ட 8 பயிர் வகைகளின் 17 உயிரி செறிவூட்டிய ரகங்கள் பிரதமரால் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படவுள்ளன. இவை 3 மடங்கு ஊட்டச்சத்து கொண்டவை. சிஆர் தான் 315 அரிசி ரகம் அதிக துத்தநாகச் சத்து கொண்டது; எச்1 1633 ரக கோதுமையில், புரதம், இரும்பு, துத்தநாகச் சத்துக்கள் உள்ளன; எச்டி 3298 –ல் புரதம், இரும்புச் சத்து ஆகியவை அதிகம் உள்ளன; டிபிடபிள்யு 303, டிடிடபிள்யு 48 கோதுமைகள் புரதம் நிரம்பியவை; லதோவால் தர புரத மக்காச் சோளம் உயர் விளைச்சல் 1,2,3 ரகங்கள் லிசின், டிரிப்டோபான் ஆகியவற்றைக் கொண்டுள்ளன; சிஎப்எம்வி1,2 விரல் திணை, கால்சியம், இரும்பு, துத்தநாக சத்துக்கள் கொண்டவை; சிஎல்எம்வி1 சிறு திணை இரும்பு மற்றும் துத்தநாகச் சத்து நிரம்பியது; புசா கடுகு 32 ரகம் குறைவான இருசிக் அமிலத்தன்மை கொண்டது; கிர்னார் 4,5 வேர்க்கடலை, மேம்படுத்தப்பட்ட ஒலிசிக் அமிலம் கொண்டது; ஶ்ரீ நீலிமா, டிஏ340 ரக வள்ளிக்கிழங்கு மேம்படுத்தப்பட்ட துத்தநாகம், இரும்பு, அந்தோசியானின் அம்சங்களை உள்ளடக்கியது.

இந்த ரகங்கள் மற்ற உணவு வகைகளுடன் இந்திய உணவை ஊட்டச்சத்து மிக்க உணவாக மாற்றக்கூடியவை. உள்ளூர் நிலப்பரப்பு, வேளாண் ரகங்களிலிருந்து இந்த ரகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அசாமின் காரோ மலையில் சேகரிக்கப்பட்ட அரிசி வகையைக் கொண்டு, துத்தநாகச் சத்து மிக்க அரிசி உருவாக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலம் தங் மாவட்டத்தின் விரல் திணைகளும் செறிவூட்டப்பட்டுள்ளன.

ஊட்டச்சத்து உணர்வு வேளாண் ஆதாரங்கள் மற்றும் புத்தாக்கம் என்ஏஆர்ஐ திட்டத்தை ஐசிஏஆர் தொடங்கியுள்ளது. வேளாண்மையை ஊட்டச்சத்துடன் இணைக்கும் குடும்ப பண்ணை முறையை இத்திட்டம் ஊக்குவிக்கிறது. மேலும் ஊட்டச்சத்து பாதுகாப்பை மேம்படுத்தும் ஊட்டச்சத்து ஸ்மார்ட் கிராமங்கள், குறிப்பிட்ட இடம் சார்ந்த ஊட்டச்சத்து தோட்ட மாதிரிகளும் வேளாண் அறிவியல் மையங்களால் உருவாக்கப்பட்டு, மேம்படுத்தப்பட்டு வருகின்றன. உள்ளூரிலேயே, ஆரோக்கியமான, பலவகைப்பட்ட, போதிய சிறு, குறு ஊட்டமளிக்கும் உணவுகள் கிடைப்பதை உறுதி செய்வதே இதன் நோக்கமாகும்.

இந்த செறிவூட்டப்பட்ட பயிர் வகைகள் மேம்படுத்தப்பட்டு, அரசின் மதிய உணவு திட்டத்திலும், அங்கன்வாடிகளிலும் இணைக்கப்படும். இயற்கையாக செறிவூட்டப்பட்ட உணவு வகைகள் மூலம் இந்தியாவை ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத நாடாக மாற்றுவதே இதன் நோக்கமாகும். இது விவசாயிகளுக்கு அதிக வருமானம் கிடைக்க வழி ஏற்படுத்துவதுடன், தொழில் வளர்ச்சிக்கான புதிய வழிகளையும் உருவாக்கும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

5 hours ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

1 hour ago

மேலும்