‘‘மீண்டும் கூறுகிறேன்; குறைந்தபட்ச ஆதார விலை; அரசு கொள்முதல் தொடரும்’’- பிரதமர் மோடி திட்டவட்டம்

By செய்திப்பிரிவு

ஏற்கெனவே கூறியதை மீண்டும் ஒருமுறை கூறுகிறேன், விவசாயப் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை முறை தொடரும், அதுபோலவே அரசு கொள்முதலும் தொடரும் என பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் துறை தொடர்பான வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களும் நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டன.

இந்த வேளாண் மசோதாக்களுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள சிரோன்மணி அகாலிதளம் கட்சியும் வேளாண் மசோதாக்களுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து மக்களவையில் நடந்த வாக்கெடுப்பிலும் எதிராக வாக்களித்தது.

அதுமட்டுமல்லாமல் இந்த மசோதாக்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தனது மத்திய அமைச்சர் பதவியை அகாலிதளம் கட்சி எம்.பி. ஹர்சிம்ரத் கவுர் ராஜினாமா செய்துள்ளார்.

இந்நிலையில் விவசாயிகள் நலனுக்காக எதிராக இருப்பதாகக் கூறப்படும் இந்த மசோதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் தொடரந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நாடாளுமன்ற மாநிலங்களவையில் இந்த மசோதாக்கள் இன்று தாக்கல் செய்யப்பட்டது. மத்திய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் மசோதாக்களை தாக்கல் செய்து உரையாற்றினார். அப்போது விவசாயிகளின் நலனுக்காகவே இந்த மசோதா கொண்டு வரப்பட்டதாக கூறினார்.இதனைத் தொடர்ந்து ஓய்எஸ்ஆர் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சி எம்.பி.க்கள் பேசினர். பின்னர் பெரும் எதிர்ப்புக்கிடையே மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

‘‘ஏற்கெனவே கூறியதை மீண்டும் ஒருமுறை கூறுகிறேன்.

குறைந்தபட்ச ஆதார விலை முறை தொடரும். அதுபோலவே அரசு கொள்முதலும் தொடரும்

விவசாயிகளுக்கு சேவை செய்வதற்காகவே நாங்கள் இருக்கிறோம். எங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும் அவர்களுக்கு செய்வோம். இதன் மூலம் அவர்களுக்கும் அவரது தலைமுறையினருக்கும் சிறந்த வாழ்க்கை அமைவதை நாங்கள் உறுதி செய்வோம்.

நமது விவசாயத்துறைக்கு நவீன தொழில்நுட்பங்கள் தேவையாக உள்ளன. இதன் மூலம் கடுமையாக உழைக்கும் நமது விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும். இதற்கு புதிய மசோதா வழி ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் நமது விவசாயிகள் தொழில்நுட்பத்தை எளிமையாக பெற்று உற்பத்தியை அதிகரிக்க முடியும். இதன் மூலம் அவர்களும், அவர்களது தலைமுறையினரும் சிறந்த பயன் பெற முடியும். இது வரவேற்க தக்க முடிவு.

பல ஆண்டுகளாக இந்திய விவசாயிகள் இடைத் தரகர்கள் உருவாக்கிய பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் கொடுமைக்கு ஆளாகி வந்தார்கள். நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த மசோதாக்கள் விவசாயிகளை துன்பங்களில் இருந்து விடுவித்துள்ளது. விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகவும், அவர்கள் வாழ்க்கையில் பெரிய அளவில் செழிப்பு ஏற்படவும் இந்த மசோதாக்கள் உத்வேகம் அளிக்கும்.’’ எனக் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

தொழில்நுட்பம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

சினிமா

9 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

12 hours ago

இந்தியா

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

மேலும்