கல்புர்கி படுகொலையை தொடர்ந்து கன்னட எழுத்தாளர் பகவானுக்கு தொடரும் கொலை மிரட்டல்: வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு

By இரா.வினோத்

கர்நாடகாவில் எழுத்தாளர் எம்.எம்.கல்புர்கி சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து, மற்றொரு கன்னட எழுத்தாளர் கே.எஸ்.பகவானுக்கு இந்துத்துவா அமைப்புகள் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வருகின்றன. இதனால் மைசூருவில் உள்ள அவரது வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மூத்த கன்னட‌ எழுத்தாளரும் முற்போக்கு சிந்தனையாளருமான எம்.எம்.கல்புர்கி (77) கடந்த 30-ம் தேதி மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் கர்நாடகா மட்டுமில்லாமல் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கல்புர்கியை கொலை செய்தவர்களை கைது செய்யக் கோரி பல்வேறு இடங் களில் மனித உரிமை அமைப்பு களும் இலக்கிய அமைப்புகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வரு கின்றன.

இந்நிலையில் மைசூருவை சேர்ந்த எழுத்தாளரும் முற்போக்கு சிந்தனையாளருமான கே.எஸ்.பகவானுக்கு இந்துத்துவா அமைப் பினர் கொலை மிரட்டல் விடுத் துள்ளனர்.

மங்களூருவை சேர்ந்த பஜ்ரங் தளம் அமைப்பின் இணை செய லாளர் புவித் ஷெட்டி என்பவர், ‘யு.ஆர்.அனந்தமூர்த்தி, எம்.எம். கல்புர்கியை தொடர்ந்து அடுத்த இலக்கு கே.எஸ்.பகவான்தான் ' என பகிரங்கமாகவே ட்விட்டரில் கொலை மிரட்டல் விடுத்தார். இதுதொடர்பாக பெங்களூரு சைபர் கிரைம் போலீஸார் புவித் ஷெட்டி மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிந்து, கைது செய்தனர்.

இதையடுத்து கடந்த 10-ம் தேதி மைசூரில் உள்ள கே.எஸ்.பகவானின் வீட்டுக்கு மர்ம கடிதம் ஒன்று வந்தது. பெயர், முகவரி எழுதப்படாத அந்த கடிதத்தில், “எத்தனை போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டாலும், உன்னை (கே.எஸ்.பகவானை) கொலை செய்தே தீருவோம்'' என மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மைசூருவில் உள்ள அவரது வீட்டில் 2 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நேற்று பிற்பகல் 12.30 மணியளவில் கே.எஸ்.பகவானுக்கு மீண்டும் ஒரு கடிதம் வந்தது. ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யப்பட்டிருந்த அந்த கடிதத்தில் பெயரும் முகவரியும் குறிப்பிடப்படவில்லை. அதில், ‘உன்னை (கே.எஸ்.பகவான்) கொல்வது உறுதி' என குறிப்பிடப் பட்டிருந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கே.எஸ்.பகவான் குவெம்பு நகர் போலீஸாருக்கு தகவல் அளித்தார்.

கொலை மிரட்டல் கடிதத்தை பெற்றுக்கொண்ட போலீஸார், இந்திய தண்டனை சட்டம் 506-ம் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த னர். இது தொடர்பாக மைசூரு மாநகர காவல் ஆணையர் தயானந் தாவிடம் கேட்டபோது,'' மர்ம கடிதம் தொடர்பாக விசாரித்து வருகிறோம். தற்போது கே.எஸ். பகவான் வீட்டுக்கு துப்பாக்கி ஏந்திய போலீ ஸார் 24 மணி நேரமும் பாதுகாப்பு அளித்து வருகின்றனர். மேலும் பகவான் வீட்டின் அருகே போராட்டம் நடத்தவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது''என்றார்.

எதற்கும் பயப்பட மாட்டேன்

இது தொடர்பாக எழுத்தாளர் கே.எஸ்.பகவான், ‘தி இந்து'விடம் கூறியதாவது:

கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக மூடநம்பிக்கைக்கு எதிராக வும் மடாதிபதிகளுக்கு எதிராகவும் பேசி வருகிறேன். சங்கராச்சாரி யாரை விமர்சித்து நூல் எழுதிய போது அடிப்படைவாதிகளால் தாக்கப்பட்டேன்.

முற்போக்கு கருத்துகளை பேசிய எம்.எம்.கல்புர்கியை அடிப்படைவாதிகள் சுட்டுக்கொன்ற தைப் போல என்னையும் கொல்ல திட்டமிட்டுள்ளனர். இதனை வெளிப்படுத்தும் விதமாக பகிரங்க கொலை மிரட்டல்கள் வருகின்றன. ஆனால் க‌ர்நாடக அரசு இதுவரை யாரையும் கைது செய்து தண்டிக்கவில்லை.

ட்விட்டரில் கொலை மிரட்டல் விடுத்த பஜ்ரங்தளம் அமைப்பை சேர்ந்தவருக்கு ஜாமீன் வழங் கப்பட்டிருக்கிறது. ஃபேஸ்புக், மின்னஞ்சல், மர்ம தொலைபேசி அழைப்புகள் மூலம் இந்துத்துவா அமைப்பினர் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். மூடநம்பிக்கைக்கு எதிராகவும் இந்துத்துவா அமைப்பின் செயல் பாடுகளுக்கு எதிராகவும் பேசியதை, நான் ஒருபோதும் திரும்ப பெற மாட்டேன். அதே போல சக மனிதரை கொல்லத்துடிக்கும் மிருகங்களின் மிரட்டலுக்கு நான் எப்போதும் பயப்படவும் மாட்டேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

உலகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

7 hours ago

சினிமா

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்