அயோத்தி வந்தும் ஸ்ரீராமஜென்ம பூமிக்கு வராத 3 பிரதமர்கள்

By ஆர்.ஷபிமுன்னா

அயோத்திக்கு வந்த இந்தியாவின் 3 பிரதமர்கள், நிலப்பிரச்சனையால் ஸ்ரீராமஜென்ம பூமிக்கு வராமல் விலகி இருந்துள்ளனர். இதில், இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோருடன் பாஜகவின் அட்டல் பிஹாரி வாய்பாய் பெயரும் இடம் பெற்றுள்ளது.

அயோத்தியில் நிலப்பிரச்சனை முடிவிற்கு வந்தமையால் அங்கு இன்று ராமர் கோயில் கட்ட பூமி பூஜை நடைபெறுகிறது. இதில், பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்கிறார்.

இவர், அயோத்தியின் ராமர் கோயிலுக்கு வரும் முதல் பிரதமராக வரலாற்றில் இடம் பெற உள்ளார். ஏனெனில், இதற்கு முன் அயோத்தி வந்திருந்தும் 3 பிரதமர்கள் ஸ்ரீராமஜென்ம பூமி பகுதிக்கு வரவில்லை.

இதன் பின்னணியில் இந்து மற்றும் முஸ்லிம்கள் இடையே நடைபெற்ற நிலப்பிரச்சனை வழக்கு காரணமாக இருந்துள்ளது. இங்கு செல்வதன் மூலம் அவ்விரு மதத்தினரின் வாக்குகளையும் தேர்தலில் பணயம் வைக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

இந்த 3 பிரதமர்கள் பட்டியலில் காங்கிரஸின் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் பாஜகவின் அட்டல் பிஹாரி வாஜ்பாய் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். எனவே, தற்போதைய பிரதமர் மோடியின் வருகை முதல்முறை எனக் கருதப்படுகிறது.

கடந்த 1966 இல் பிரதமராக இருந்த இந்திரா காந்தி அயோத்தியில் சரயு நதியின் பாலத்தை திறந்துவைக்க வந்திருந்தார். பிறகு 1979 இல் அங்குள்ள ஆச்சார்யா நரேந்திர தேவ் பல்கலைகழகத்தின் விழாவிற்கும் அப்போதைய பிரதமர் இந்திரா வந்திருந்தார்.

எனினும், அங்கிருந்து சில கி.மீ தொலைவில் இருந்த ராமஜென்ம பூமி வளாகத்திற்கு இந்திரா வரவில்லை.

இவருக்கு பின் பிரதமரான அவரது மகன் ராஜீவ் காந்தி மூன்று முறை வந்திருந்தார்.

தன் தாயை போலவே அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தியும் ஸ்ரீராமஜென்ம பூமி வளாகம் செல்லவில்லை. கடந்த 1984 இல் நடைபெற்ற அயோத்தி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ராஜீவ் காந்தி கலந்து கொண்டார்.

அடுத்து மீண்டும் ராஜீவ் அயோத்தியை ஒட்டியுள்ள பைஸாபாத் நகரில் 1989 இன் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தை துவங்கி வைத்தார். இதன்மூலம், அத்தேர்தலில் அயோத்தி அரசியலின் லாபம் பெற ராஜீவ் முயன்றார்.

ஏனெனில், அவர் பிரதமராக இருந்த போது 1986 இல் பூட்டியிருந்த பாபர் மசூதியை திறந்து உள்ளிருந்த ராமர் சிலைக்கு பூஜை செய்ய அனுமதி அளித்தார். பிறகு அதன் வளாகத்தில் பாபர் மசூதி அருகில் கோயில் கட்ட 1989 இல் அடிக்கல் நாட்டவும் அனுமதித்திருந்தார்.

இருப்பினும் காங்கிரஸுக்கு ராஜிவ் காந்தி எடுத்த நடவடிக்கைகளால் தேர்தலில் தோல்வியே ஏற்பட்டது. மூன்றாவது முறையாக ராஜீவ், 1990 இல் கரசேவை தீவிரமான போது ‘சத்பாவனா யாத்திரை’ நடத்த வந்திருந்தார்.

இந்த மூன்று முறைகளிலும் ராஜீவ் ராமஜென்ம பூமி வளாகத்திற்கு வரவில்லை. மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணி ஆட்சியில் பிரதமரான வாஜ்பாய் இரண்டு முறை அயோத்திக்கு வந்திருந்தார்.

அவரும் ஸ்ரீராமஜென்ம பூமிக்கு வராமல் அப்போது காலமான ஸ்ரீராமச்சந்திர பரமஹன்ஸ் தாஸின் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டார். பிறகு வந்த நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தை வாஜ்பாய் 2004 இல் அயோத்தியில் இருந்து துவக்கினார்.

இவரும் வழக்கில் சிக்கியிருந்த ஸ்ரீராமஜென்ம பூமிக்கு வருகை தரவில்லை. எனவே, நாடு சுதந்திரம் அடைந்த பின் அயோத்தியின் ராமர் கோயிலுக்கு வரும் முதல் பிரதமராக மோடி வரலாறு படைக்கிறார்.

இதற்கு முன் அவர் பாஜக மூத்த தலைவரான முரளி மனோகர் ஜோஷியுடன் அயோத்தி வந்திருந்தார் மோடி.

அப்போது அவர், அடுத்து தான் ராமர் கோயில் கட்டப்படும் போது மீண்டும் வருவதாகக் கூறிச் சென்றார்.

அன்று அவர் கூறியது போலவே இன்று நாட்டின் பிரதமராக ராமர் கோயில் பூமி பூஜையில் கலந்துகொள்ள மோடி வருகிறார். இவரால் இன்றைய பூமி பூஜை விழா மேலும் சிறப்பு பெற்று விட்டதாகக் கருதப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

55 mins ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

க்ரைம்

2 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

4 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

சுற்றுலா

4 hours ago

சினிமா

4 hours ago

மேலும்