ஜூலை மாதத்தில் மட்டும் நாட்டில் 11 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கரோனாவில் பாதிப்பு: ஆந்திராவில் 9 மடங்கு தொற்று அதிகரிப்பு

By செய்திப்பிரிவு

இந்தியாவில் கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் கரோனா வைரஸால் 11 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜூன் மாதத்தில் இருந்த பாதிப்பை விட கடந்த மாதம் இரு மடங்கு அதிகம் என்று மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவருகிறது.

கடந்த ஜூன் மாதத்தில் ஏறக்குறைய 5 லட்சம் பேர் மட்டுமே பாதிக்கப்பட்ட நிலையில் அதைவிட இரு மடங்கு பாதிப்பு கடந்த மாதம் ஏற்பட்டுள்ளது. அதாவது சராசரியாக நாள்தோறும் 35 ஆயிரம் பேர் கரோனாவால் புதிதாக நோய்த்தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

இதில் நாட்டிலேயே மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருப்பது மகாராஷ்டிர மாநிலம் என்பது பொதுவாகச் சொல்லப்பட்டாலும் கடந்த மாதத்தைப் பொறுத்தவரை ஆந்திரப் பிரதேசம் தீவிரமான பாதிப்பைச் சந்தித்துள்ளது.

ஏனென்றால், கடந்த ஜூன் மாதம் 30-ம் தேதி நிலவரப்படி ஆந்திராவில் கரோனா தொற்றால் 14 ஆயிரத்து 596 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். ஆனால், கடந்த 30 நாட்களில் அந்த மாநிலத்தில் கரோனாவால் ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 337 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 3 நாட்களில் மட்டும் 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டனர்.

கடந்த 30 நாட்களில் 865 சதவீதம் அல்லது 9 மடங்கு பாதிப்பு ஆந்திராவில் அதிகரித்துள்ளது எனப் புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவருகிறது. ஒட்டுமொத்தமாக ஆந்திராவில் கரோனாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இன்றைய அறிக்கையின்படி 1.40 லட்சத்தை எட்டியுள்ளது, 1,349 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆந்திராவில் உள்ள கிழக்கு கோதாவரி மாவட்டத்தில்தான் கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. கடந்த ஒருமாதத்தில் கரோனா பாதிப்பு ஆந்திராவில் அதிகரித்து, நாட்டிலேயே மோசமாகப் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் டெல்லியைப் பின்னுக்குத் தள்ளி 3-வது இடத்தைப் பிடித்துள்ளது.

ஒட்டுமொத்தமாகக் கணக்கிடும்போது இந்தியாவில் கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் 11 லட்சம் பேர் புதிதாக கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். சராசரியாக நாள்தோறும் 35 ஆயிரம் பேர் நோய்த்தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். அதிலும் ஜூலை மாதத்தின் கடைசி 3 நாட்களில் கரோனா பாதிப்பு நாள்தோறும் 50 ஆயிரத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கர்நாடக மாநிலத்தில் ஜூன் மாதத்தோடு ஒப்பிடுகையில், கடந்த ஜூலை மாதத்தில் கரோனா பாதிப்பு 7 மடங்கு அதிகரித்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் தற்போது 1.24 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1.08 லட்சம் பேர் ஜூலை மாதத்தில்தான் பாதிக்கப்பட்டனர். அதாவது 88 சதவீதப் பாதிப்பு கடந்த மாதம் ஏற்பட்டது.

தமிழகத்தில் தற்போது 2.45 லட்சம் பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த மாதம் மட்டும் 1.55 லட்சம் பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டனர். அதாவது 63 சதவீதம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் கடந்த மாதம் மட்டும் 2.47 லட்சம் பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டனர். இதன் மூலம் ஒட்டுமொத்தப் பாதிப்பு 4.22 லட்சமாக அதிகரித்துள்ளது. கடந்த மாதத்தில் 58 சதவீதம் அதிகரித்துள்ளது.

மேலும் பிஹார் (80 சதவீதம்), உத்தரப் பிரதேசம் (72 சதவீதம்), மேற்கு வங்கம் (73 சதவீதம்), தெலங்கானா (73.94) ஆகிய மாநிலங்களில் கடந்த மாதம்தான் பெருமளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதத்தைவிட ஜூலை மாதத்தில் கரோனா தொற்று அதிகரிக்க லாக்டவுன் தளர்வுகள் அதிகரித்து இருப்பது முக்கியக் காரணமாகும். இதுதவிர கரோனா பரிசோதனை செய்யும் அளவை ஐசிஎம்ஆர் தொடர்ந்து அதிகப்படுத்தி வருவதும் பாதிப்பு அதிகரிக்கக் காரணமாகும்.

ஜூன் மாத இறுதியில் நாட்டில் ஏறக்குறைய 88 லட்சத்துக்கும் அதிகமான கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டதாக ஐசிஎம்ஆர் தெரிவித்திருந்தது. ஆனால், ஜூலை மாதத்தில் மட்டும் 1.05 கோடி கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

நாள்தோறும் செய்யப்படும் கரோனா பரிசோதனை அளவு 2 லட்சத்திலிருந்து தற்போது 5 லட்சமாக அதிகரித்துள்ளது. கடந்த வியாழக்கிழமை மட்டும் 6.42 லட்சம் பரிசோதனை செய்யப்பட்டதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. விரைவில் நாள்தோறும் 10 லட்சம் பரிசோதனை எனும் அளவை எட்டுவோம் என நம்பிக்கை தெரிவித்துள்ளது.

அதிகமான பரிசோதனையின் மூலம் பாதிக்கப்பட்டோர் அளவும் அதிகரித்துவருவதால், கரோனா நோய்த்தொற்று இன்னும் குறையத் தொடங்கவில்லை என்பதைக் காட்டுகிறது. நோய்த்தொற்று ஏற்பட்டவர்களில் பெரும்பாலானவர்களுக்கு எந்தவிதமான அறிகுறியும் இல்லாதவர்களாக, பலரைக் கண்டுபிடிக்க முடியாமலும் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

22 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

க்ரைம்

1 hour ago

சுற்றுச்சூழல்

2 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

3 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

சுற்றுலா

3 hours ago

சினிமா

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்