பழங்குடியின நலம், புலம்பெயர் தொழிலாளர்கள், தாழ்த்தப்பட்டோர் நலன்; எழுத்துபூர்வ உறுதியளித்தால் வாக்கு: பிடிபி கட்சி எம்எல்ஏக்கள் போர்க்கொடியால் குஜராத்தில் பாஜக-காங். திரிசங்கு நிலை

By பிடிஐ

குஜராத்தில் 4 இடங்களுக்கு நடைபெற்று வரும் மாநிலங்களவைத் தேர்தலில் கடைசி நேரத்தில் பாரதிய பழங்குடியின (பிடிபி) கட்சியின் இரு எம்எல்ஏக்கள் எந்தக் கட்சிக்கும் வாக்களிக்க முடியாது எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

தங்களின் கோரிக்கையான பழங்குடியின நலம், புலம்பெயர் தொழிலாளர்கள், தாழ்த்தப்பட்டோர் நலன் ஆகியவை குறித்து எழுத்துபூர்வமாக வாக்குறுதி அளித்தால் மட்டும் தேர்தலில் வாக்களிப்போம் என இரு எம்எல்ஏக்களும் கூறியதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

இந்த இரு எம்எல்ஏக்கள் வாக்குதான் பாஜக நிறுத்தியுள்ள 2-வது வேட்பாளர் வெற்றியை உறுதி செய்ய முடியும் என்பதால் குழப்பம் நீடித்து வருகிறது.

குஜராத் மாநிலத்தில் 4 இடங்களுக்கான மாநிலங்களவைத் தேர்தல் நடக்கிறது. இதில் 3 இடங்களைக் கைப்பற்ற பாஜக போட்டியிடுகிறது. ஆனால், பாஜகவின் எம்எல்ஏக்கள் அடிப்படையில் 2 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்றாலும் 3 வேட்பாளர்களைக் களத்தில் இறக்கியுள்ளது. பாஜக சார்பில் அபய் பரத்வாஜ், ரமிலா பாரா, நர்ஹாரி அமின் ஆகியோர் போட்டியிடுகின்றனர்

காங்கிரஸ் கட்சிக்கு இரு இடங்கள் கிடைக்கும், அந்தக் கட்சி சார்பில் சக்திசிங் கோகில், பரத்சிங் சோலங்கி ஆகியோர் போட்டியிடுகின்றனர். காங்கிரஸ் கட்சிக்கு இருக்கும் எம்எல்ஏக்கள் அடிப்படையில் ஒருவர் வெற்றி பெற வாய்ப்பு உண்டு,

இரு கட்சிகளுமே தாங்கள் களமிறக்கிய வேட்பாளர்கள் வெல்வார்கள் என்று நம்பிக்கையோடு இருப்பதால், 4 இடங்களுக்கு 5 பேர் போட்டி சுவாரஸ்யத்தை அதிகமாக ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தில் தற்போது 172 எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள், 10 இடங்கள் காலியாக இருக்கின்றன. (8 பேர் ராஜினாமா, இருவர் வழக்கால் வாக்களிக்க முடியாது) ஒரு எம்.பி. பதவிக்கு 35 எம்எல்ஏக்கள் வாக்கு தேவை. காங்கிரஸ் கட்சிக்கு 65 எம்எல்ஏக்கள், ஒரு சுயேச்சை எம்எல்ஏ உள்ளனர். இன்னும் 4 எம்எல்ஏக்கள் இருந்தால்தான் இரு வேட்பாளர்களும் வெல்ல முடியும்.

பாஜகவுக்கு 103 எம்எல்ஏக்கள் தற்போது அவையில் இருக்கிறார்கள். 105 எம்எல்ஏக்கள் இருந்தால்தான் 3 வேட்பாளர்களும் வெல்ல முடியும். இன்னும் இரு எம்எல்ஏக்கள் வாக்கு தேவை. இதில் 4-வது இடத்தை முடிவு செய்ய பாரதிய பழங்குடி கட்சி எம்எல்ஏ, என்சிபி எம்எல்ஏக்கள் கையில்தான் இருக்கிறது

இந்த சூழலில் பிடிபி கட்சியின் தலைவர் சோட்டு வாசவா, அவரின் மகன் மகேஷ் வாசவா இருவரும் தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை வாக்களிக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்கள். இருவரின் வாக்கும் காங்கிரஸ், பாஜக வெற்றிக்கு முக்கியம் என்பது குறிப்பிடத்தக்கது.

எம்எல்ஏ மகேஷ் வாசவா நிருபர்களிடம் கூறுகையில், “ எங்கள் கோரிக்கை நிறைவேறும்வரை நாங்கள் மாநிலங்களவைத் தேர்தலில் வாக்களிக்கப் போவதில்லை. நாங்கள் தனிக் கட்சி யாருடனும் கூட்டணி இல்லை. பாஜக, காங்கிரஸ் இருவருடனும் விலகியே இருக்கிறோம்.

எங்களின் கோரிக்கையான அரசியலமைப்பில் 5-வது பிரிவை நடைமுறைப்படுத்துதல், பஞ்சாயத்து (பிஇஎஸ்ஏ) சட்டத்தை நடைமுறைப்படுத்துல் போன்றவற்றுக்கு ஆளும் பாஜக, அல்லது காங்கிரஸ் யாரேனும்ஒரு கட்சி எழுத்துபூர்வமாக உறுதி அளிக்க வேண்டும். எங்களின் வாக்கு இரு கட்சிகளுக்கும் அவசியம். எழுத்துபூர்வ உறுதி கிடைக்காதவரை நானும், எனது தந்தையும் வாக்களிக்கமாட்டோம்.

எம்எல்ஏ மகேஷ் வாசவா

பழங்குடியினர், ப ட்டியலினத்தார், சிறுபான்மையினர், புலம்பெயர் தொழிலாளர்கள் ஆகியோருக்கு இரு கட்சிகளும் எந்த நலப் பணிகளும் செய்யவில்லை. எங்களுக்கு உறுதிமொழி கிடைத்தபின் வாக்களிப்பது குறித்து யோசிக்கிறோம்” எனத் தெரிவித்தார்.

இதுகுறித்து முதல்வர் விஜய் ரூபானி நிருபர்களிடம் கூறுகையில், “பாஜகவும், பாஜக அரசும் பழங்குடியின நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை வகுத்துச் செயல்படுத்தி வருகின்றன. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சியில் பழங்குடியின நலனுக்காக தனியாக அமைச்சர் உருவாக்கப்பட்டார்.

நரேந்திர மோடி முதல்வராக இருந்தபோது, பழங்குடியின நலனுக்காக கோடிக்கணக்கான ரூபாய் செலவிடப்பட்டது. என்னுடைய ஆட்சியில் பஞ்சாயத்து விரிவுபடுத்தும் சட்டம் நடைமுறைக்கு வந்தது. ஆதலால், பிடிபி எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என நம்புகிறேன்” எனத் தெரிவித்தார்.

குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர் அமித் சவ்டா கூறுகையில், “பிடிபி எம்எல்ஏக்கள் இருவரும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இரு கட்சிகளின் வெற்றியைத் தீர்மானிக்கும் வாக்கு பிடிபி எம்எல்ஏக்களிடம் இருப்பதால் பாஜக, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் திரிசங்கு நிலையில் இருக்கின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

45 mins ago

விளையாட்டு

2 hours ago

க்ரைம்

3 hours ago

உலகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

வேலை வாய்ப்பு

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

கல்வி

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்