மக்கள் வருமானமில்லாமல் தவிக்கும்போது லாபம் ஈட்டுவதா? பெட்ரோல் விலை உயர்வைத் திரும்பப் பெறுங்கள்: பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி கடிதம்

By பிடிஐ

கரோனா வைரஸ் பாதிப்பு, லாக்டவுன் விளைவால் மக்கள் வருமானமில்லாமல், கையில் பணமில்லாமல் தவிக்கும்போது அவர்களிடம் இருந்து லாபமீட்டும் நோக்கில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தும் மத்திய அரசின் செயல் முழுமையான உணர்வற்றது, தவறான ஆலோசனை. விலை உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் எனக் கோரி பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

சர்வதேசச் சந்தையில் பெட்ரோலியக் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதைக் காரணம் காட்டி கடந்த 10 நாட்களாக எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருகின்றன. கடந்த 10 நாட்களில் தொடர்ந்து விலை அதிகரிப்பால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5.47 பைசாவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.5.80 பைசாவும் அதிகரித்துள்ளது. சென்னையில் பெட்ரோல் விலை லிட்டர் 80 ரூபாயை எட்டியுள்ளது.

இந்நிலையில் பெட்ரோல் விலையைத் திரும்பப் பெறக்கோரி காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மோடிக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

''கரோனா வைரஸுக்கு எதிராக இந்த தேசம் எப்போதும் இல்லாத வகையில் சமூக, பொருளாதார, சுகதாாரச் சவால்களை எதிர்கொண்டு வருகிறது. மார்ச் மாதத்திலிருந்து இந்தக் கடினமான சூழல் இன்னும் நீடித்து வருவதை நினைத்து நான் மிகவும் மனம் வருந்திக் கொண்டிருக்கிறேன். ஆனால், மத்திய அரசு எந்த முழுமையான உணர்வும் இல்லாமல், 10 முறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியுள்ளது.

நாடு முழுவதும் மக்கள் அச்சமும், நிச்சயமற்ற தன்மையையும் சந்தித்து, கற்பனை செய்துபார்க்க முடியாத கடினமான சூழலை எதிர்நோக்கி வரும்போது, பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரி உயர்வை உயர்த்தும் இந்த தவறான ஆலோசனை மூலம் கூடுதலாக ரூ.2,60 லட்சம் கோடி வருவாயை ஈட்ட மத்திய அரசு நினைக்கிறது.

ஏற்கெனவே பல்வேறு கடினமான சூழலைச் சந்தித்து வரும் மக்களுக்கு இந்த விலை உயர்வு மேலும் சுமையை அதிகரிக்கும். இந்த விலை உயர்வு முறையானதும் அல்ல, நியாயமானதும் அல்ல. இந்த நேரத்தில் மக்களின் சுமைகளை, துன்பங்களைப் போக்க வேண்டியது அரசின் கடமை, பொறுப்பாகும். அதை விடுத்து மக்களை மேலும் கடினமான சூழலில் தள்ளக்கூடாது.

கரோனா வைரஸால் லட்சக்கணக்கான மக்கள் வேலையிழந்து, வாழ்வாதாரத்தை இழந்து பொருளாதாரப் பாதிப்பைச் சந்திக்கும் நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய அரசு கருத்தில் கொண்டதில் எந்தவிதமான நியாயமும் இல்லை.

சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த வாரத்தில் தோராயமாக 9 சதவீதம் வீழ்ச்சி அடைந்தது. அப்போது மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை. ஆனால், கரோனா லாக்டவுனால் மக்கள் வருமானமில்லாமல், பணமில்லாமல் தவிக்கும்போது பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி அவர்களிடம் இருந்து லாபமீட்டுவதா?

உங்கள் அரசு ஆட்சிக்கு வந்த 6 ஆண்டுகளில் கச்சா எண்ணெய் விலை வரலாற்றில் இல்லாத அளவுக்குக் குறைந்தது. இந்தக் காலகட்டத்தில் உங்கள் அரசு பெட்ரோல், டீசல் உற்பத்தி வரியை 12 முறை உயர்த்தி மிகப்பெரிய வருவாயை ஈட்டியது.

பெட்ரோல் மீது லிட்டருக்கு ரூ.23.78 பைசாவும், டீசல் மீது லிட்டருக்கு ரூ.28.37 பைசாவும் உற்பத்தி வரியை உயர்த்தியது அரசு. கடந்த 6 ஆண்டுகளில் பெட்ரோல் மீது உற்பத்தி வரி 258 சதவீதமும், டீசல் மீது 820 சதவீதமும் உயர்த்தப்பட்டு, அதன் மூலம் ரூ.18 லட்சம் கோடி வருவாய் ஈட்டியுள்ளது.

பெட்ரோல், டீசல் விலையை உடனடியாகத் திரும்பப் பெற்று, கச்சா எண்ணெய் விலை குறைவின் பலனை மக்களுக்கு வழங்க நான் வலியுறுத்துகிறேன். மக்கள் ‘தன்னம்பிக்கை உடையவர்களாக’ இருக்க வேண்டுமென நீங்கள் விரும்பினால், முன்னோக்கிச் செல்லும் திறனுக்கு பணரீதியான தடைகளை வைக்க வேண்டாம்.

நான் ஏற்கெனவே உங்களிடம் கேட்டுக்கொண்டதைத்தான். இப்போதும் கூறுகிேறன். அரசின் வளங்களைப் பயன்படுத்தி, கடினமான சூழலில் இருக்கும் மக்களுக்கு நேரடியாகப் பணத்தை வழங்கிடுங்கள்''.

இவ்வாறு சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

சினிமா

4 hours ago

விளையாட்டு

5 hours ago

வணிகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

க்ரைம்

7 hours ago

சுற்றுச்சூழல்

7 hours ago

க்ரைம்

8 hours ago

இந்தியா

7 hours ago

சினிமா

9 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

மேலும்