தமிழகத்தில் கரோனா பாதிப்பில் உயிரிழிந்த முதியவர்கள் எத்தனை பேர்?- மத்திய அரசு தகவல்

By செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் பெருந்தொற்றுப் பரவலால் நடைமுறைப்படுத்தப்பட்ட நாடு தழுவிய ஊரடங்கு சமுதாயத்தின் பல தரப்பினரைப் பல விதங்களில் பாதித்துள்ளது. கண்ணுக்குத் தெரியாமலும் கவனத்தில் வராமலும் போன பாதிப்பு முதியோர்களுக்கு (மூத்த குடிமக்கள்) ஏற்பட்ட பாதிப்பே ஆகும். கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிப்புக்கு ஆளாகக் கூடியவர்கள் எனக் குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் முதியவர்கள் ஆகியோரை சுகாதாரத் துறை அறிவித்து இருந்தது. முதியவர்களுக்குத் தொற்று ஏற்பட்டால் அதன் விளைவாக அவர்களுக்கு மற்றவர்களைக் காட்டிலும் உடல்நலப் பாதிப்பு அதிகமாக ஏற்படும்.

அதிலும் முதியவர்களுக்கு ஏற்கனவே வேறு நோய்கள் இருந்து விட்டால் கொரோனா வைரஸ் தொற்று அவர்களுக்குப் பலமடங்கு உடல்நலப் பாதிப்புகளை ஏற்படுத்தி விடும். எனவே முதியவர்கள் தொற்றுக்கு ஆளாகாமல் இருக்க வேண்டியது அவசியம் என்று வலியுறுத்தப்பட்டது.

”கோவிட்-19 பெருந்தொற்று பரவலின் போது உலகில் எல்லோரையும் போலவே முதியவர்களுக்கும் வாழ்வதற்கும் ஆரோக்கியத்திற்குமான சம உரிமைகள் உள்ளன“ என்று ஐக்கிய நாடுகள் சபையின் தலைமை இயக்குனர் அன்டோனியே குட்டெரஸ் தெரிவித்து உள்ளார். முதியவர்கள் மீதான கவனம் இந்தச் சூழலில் முன்னுரிமையாக இருக்க வேண்டும் என்பதும் தொடர்ந்து சொல்லப்பட்டு வருகின்றது. ஆனால் உண்மையில் கரோனா வைரஸ் தொற்று முதியவர்களிடம் பயத்தையும் மன அழுத்தத்தையும் அதிகரித்து உள்ளது. எங்கே தங்களுக்கு தொற்று வந்து விடுமோ என்ற பயமும் வந்து விட்டால் மரணம்தானே என்ற மன அழுத்தமும் முதியவர்களை அலைக்கழித்துக் கொண்டு இருக்கிறது.

சுகாதார அமைச்சகம், உள்துறை அமைச்சகம், ஆயுஷ் அமைச்சம் போன்றவை ஊரடங்கு காலத்தில் பல்வேறு ஆலோசனைத் தொகுப்புகளை வெளியிட்டன. நம் நாட்டில் முதியவர்களுக்குப் பொறுப்பாக இருக்கின்ற சமூகநீதி மற்றும் அதிகாரம் அளித்தல் அமைச்சகம் முதியவர்களுக்கான
ஆலோசனைத் தொகுப்பை 13-4-2020 வெளியிட்டு இருந்தது. அதில் உள்ள விவரங்கள் வருமாறு:

சமூகநீதி மற்றும் அதிகாரம் அளித்தல் அமைச்சக தகவல்படி மக்கள்தொகை கணக்கெடுப்பு 2011ன் புள்ளிவிவரத்தை அடிப்படையாகக் கொண்டு முன்கணிப்பு முறை மூலம் தற்போது நம் நாட்டில் 60 வயதிற்கு மேற்பட்டோர் எண்ணிக்கை சுமார் 18 கோடி அளவிற்கு இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. 60-69வயதுப் பிரிவில் 8.8 கோடி முதியவர்களும் 70-79 வயதுப் பிரிவில் 6.4 கோடி முதியவர்களும் 80 வயதிற்கு மேற்பட்ட 3 கோடி முதியவர்களும் இருக்கலாம் என்று இந்த மதிப்பீடு கூறுகிறது. இந்த முதியவர்கள்தான் ஒரு சமுதாயத்தின் விலை மதிக்க முடியாத சொத்து. இவர்களின் அறிவு பல ஆண்டு அனுபவத்தால் ஞானம் என்ற நிலையை அடைந்திருக்கும். இவர்களை இன்றைய சமுதாயம் சரியாகப் பயன்படுத்திக் கொள்வதில்லை. தலைமுறை இடைவெளி என்று நாம் இவர்களை எளிதாகப் புறக்கணித்து விடுகிறோம்.

நமது சமுதாயத்தின் இந்தப் புறக்கணிப்பு முதியவர்களை மனரீதியான பிரச்சனைகளுக்கு ஆட்படுத்துகின்றது. இந்த ஊரடங்கில் நாம் முதியவர்களை மேலும் தனிமைப்படுத்தியது பிரச்சனையை அதிகமாக்கி உள்ளது. இன்றைய காலகட்டத்தில் முதியவர்களுக்கு மனநல ஆலோசனை அதிக அளவில் தேவைப்படுகிறது. தனிமை தண்டனையாகி விட்டதாக அவர்கள் உணர்ந்தால் அல்லது அவ்வாறு உணர வைக்கப்பட்டு இருந்தால் அதற்கு நாம்தான் பொறுப்பு.

கரோனாவால் முதியவர்களின் இறப்பு விகிதம் அதிகரித்து வருவதாக மே 2020ல் ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள “கொள்கைச் சுருக்கம்: முதியவர்கள் மீதான கோவிட்-19ன் தாக்கம்” என்ற அறிக்கை தெரவிக்கின்றது. தமிழ்நாட்டில் நேற்றுவரை (31-5-2020) கரோனா தொற்றால் 173 பேர் மரணம் அடைந்து உள்ளனர். இதில் 60 வயதிற்கும் மேற்பட்டவர்களின் எண்ணிக்கை 94 ஆகும். அதாவது மொத்த மரணங்களில் 54 சதவிகித மரணம் முதியவர்கள் உடையது ஆகும். அதே போன்று நேற்று வரை தமிழ்நாட்டில் 22,333 பேர் தொற்று உள்ளவர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர். இதில் 60+வயதுள்ளவர்களின் எண்ணிக்கை 2,052 ஆகும். தொற்றுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கையோடு ஒப்பிட தொற்று ஏற்பட்ட முதியவர்களின் சதவிகிதம் 9.19 ஆகும். இந்தச் சதவிகிதம் மே 10ஆம் தேதி 7.16ஆக இருந்தது. தமிழ்நாட்டில் பொதுவான இறப்பு விகிதம் 0.77 சதவிகிதமாக இருக்கும் போது முதியவர்களின் (60+) இறப்பு விகிதம் 4.58 சதவிகிதமாக உள்ளது (அதாவது நோய் தொற்றிய 2,052 முதியவர்களில் 94 பேர் இறந்து உள்ளனர்). இந்தப் போக்கு அதிகரித்து வருவதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்து உள்ளனர்.

எல்லோரும் ஊரடங்கில் வீட்டிலேயே இருந்ததால் முதியவர்களுக்குத் தொற்று ஏற்படும் வாய்ப்பு குறைவாக இருந்தது. இப்போது குடும்பத்தில் உள்ளவர்கள் பல காரணங்களால் அடிக்கடி வெளியில் சென்று வீட்டுக்குத் திரும்புவதால் முதியவர்களுக்குத் தொற்று ஏற்படும் வாய்ப்பு அதிகரித்து வருகிறது. குடும்பத்தோடு வசிக்கும் முதியவர்கள், தனித்து வாழும் முதியவர்கள் மற்றும் முதியோர் இல்லத்தில் இருக்கும் முதியவர்கள் என அனைத்து முதியவர்களின் நலனிலும் இந்தச் சூழலில் நாம் அதிக அளவில் அக்கறை காட்டியாக வேண்டும். எப்பாடுபட்டாவது முதியவர்களை நாம் பாதுகாக்க வேண்டும் என்பதுதான் இந்தப் புள்ளிவிவரங்களால் நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய உறுதி மொழி.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

41 mins ago

விளையாட்டு

1 hour ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

க்ரைம்

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

5 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

சுற்றுலா

5 hours ago

மேலும்