ரூ.3,300 கோடியில் திருப்பதி தேவஸ்தான பட்ஜெட் - அறங்காவலர் குழு கூட்டத்தில் ஒப்புதல்

By செய்திப்பிரிவு

திருமலை திருப்பதி தேவஸ்தானம் 2020-21-ம் நிதியாண்டுக்கு ரூ.3,300 கோடியில் பட்ஜெட் தாக்கல் செய்தது. இதற்கு அறங்காவலர் குழு கூட்டத்தில் ஒருமனதாக ஒப்புதல் வழங்கப்பட்டது.

மத்திய, மாநில அரசுகளை போல, திருமலை திருப்பதி தேவஸ்தானமும் ஆண்டுதோறும் பட்ஜெட் தாக்கல் செய்து வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. பட்ஜெட் தொகை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.

அந்த வகையில், நேற்று நடைபெற்ற அறங்காவலர் குழு கூட்டத்தில், வரும் 2020-21-ம் நிதியாண்டுக்காக ரூ.3,309.89 கோடியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இது கடந்த ஆண்டைவிட ரூ.60 கோடி அதிகமாகும். இதற்கு அறங்காவலர் குழு ஒருமனதாக ஒப்புதல் வழங்கியது.

இந்த பட்ஜெட்டின்படி, வரும் நிதியாண்டில், உண்டியல் மூலம் ரூ.1,351 கோடி, பல்வேறு வங்கிகளில் டெபாசிட் செய்துள்ள வட்டிகள் மூலம் ரூ.706 கோடி, லட்டு பிரசாத விற்பனை மூலம் ரூ.400 கோடி வருமானம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி. சுப்பாரெட்டி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பூந்தி தயாரிக்கும் கிடங்கில் அடிக்கடி ஏற்படும் தீ விபத்தை முற்றிலும் தடுக்க பட்ஜெட்டில் ரூ.3.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திருப்பதி உயிரியல் பூங்கா அருகே ரூ.14 கோடியில் ஆகம பயிற்சி மையம் அமைக்கப்பட உள்ளது. ரூ.16 கோடி செலவில் அலிபிரி-செர்லோ பள்ளி இடையே சாலையை அகலப்படுத்தி அழகுபடுத்தும் பணிகள் தொடங்கப்படும்.

தேவஸ்தான பாதுகாப்புத் துறையில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தவும், பாதுகாப்பை பலப்படுத்தவும் தேவஸ்தானம் தீர்மானித்துள்ளது. அதன்படி, புதிதாக கண்காணிப்பு ஊழியர்கள் நியமனம் மற்றும் கூடுதலாக தேவஸ்தான கோயில்களில் 1,300 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

சென்னையில் ரூ.3.92 கோடி செலவில் பத்மாவதி தாயார் கோயில் கட்டப்படும். அலிபிரி வாகன சோதனை சாவடியில் கட்டணத்தை அதிகரிக்கப்படும். மேலும், மும்பையில் ஏழுமலையான் கோயில் கட்ட விரைவில் அடிக்கல் நாட்டப்படும். இதேபோல ஹைதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் கட்டப்பட்டு வரும் ஏழுமலையான் கோயிலுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தமிழ் ஊடகங்கள் புறக்கணிப்பு

ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சிக்கு வந்ததும், திருமலை திருப்பதி தேவஸ்தானத்திலும் பல அதிகாரிகள் இட மாற்றம் செய்யப்பட்டனர். மேலும், அறங்காவலர் குழுவும் மாற்றி அமைக்கப்பட்டது. புதிய அதிகாரிகள் வந்ததும், திருமலையில் ஊடகத்தினரின் எண்ணிக்கையை குறைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, முக்கிய தெலுங்கு பத்திரிகைகள், மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள், ஆங்கில பத்திரிகைகளுக்கு மட்டும் அனுமதி வழங்குவது என தீர்மானிக்கப் பட்டது. தமிழ் ஊடகத்தினரோ அல்லது பத்திரிகைகளோ இவர்களது பட்டியலில் இடம்பெற வில்லை. வெறும் 26 தெலுங்கு, ஆங்கில ஊடகத்தினர் மட்டுமே தேவஸ்தான பட்டியலில் இடம்பெற்றனர்.

இந்நிலையில், நேற்று தேவஸ்தான பட்ஜெட் கூட்டம் திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் நடந்தது. இதுகுறித்து ஒட்டுமொத்த தமிழ் ஊடகத்தினருக்கும் தேவஸ்தானம் தகவல் கொடுக்க வில்லை. இதுகுறித்து மக்கள் தொடர்பு அதிகாரி ரவியிடம் கேட்டதற்கு, தெலுங்கு மற்றும் ஆங்கில ஊடகத்தினருக்கு மட்டுமே அழைப்பு விடுத்துள்ளோம் என தெரிவித்தார்.

திருமலைக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான தமிழக பக்தர்கள் சுவாமி தரிசனத்துக்கு வந்து செல்கின்றனர். இவர்களுக்கு தேவையான தகவல்களை பரிமாற இங்குள்ள தமிழ் ஊடக, பத்திரிகைகள் மட்டுமே உள்ளன. தமிழ் பக்தர்களுக்கும், தேவஸ்தானத்துக்கும் தமிழ் ஊடகங்கள் பாலமாக விளங்கி வருகின்றன். அவர்களை அவமானப்படுத்தினால் ஒவ்வொரு தமிழக பக்தரையும் அவமானப்படுத்துவதற்கு சமம் என தேவஸ்தானத்துக்கு எடுத்துரைத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. என். மகேஷ்குமார்


VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

51 secs ago

தமிழகம்

3 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

2 hours ago

வணிகம்

9 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

சுற்றுலா

2 hours ago

கல்வி

2 hours ago

தமிழகம்

3 hours ago

சுற்றுலா

3 hours ago

மேலும்