மாநிலங்களவை விதிகளில் திருத்தம்: எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு

By செய்திப்பிரிவு

மாநிலங்களவை நடைமுறை விதிகளை திருத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மாநிலங்களவை கடந்த 1952-ல்நிறுவப்பட்டது. 1964-ல் வகுக்கப்பட்ட 303 விதிமுறைகள் இப்போதுநடைமுறையில் உள்ளன. அவையை சுமுகமாக நடத்துவதற்காக இப்போதைய விதிகளில் சில திருத்தங்களை மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து பரிந்துரை வழங்குவதற்காக, மாநிலங்களவை தலைவர் எம்.வெங்கய்ய நாயுடு கடந்த 2018-ம் ஆண்டு 2 நபர் குழுவை அமைத்தார்.

மாநிலங்களவை முன்னாள்செயலாளர் வி.கே.அக்னிஹோத்ரி மற்றும் மத்திய சட்ட அமைச்சகத்தின் முன்னாள் கூடுதல் செயலாளர் தினேஷ் பரத்வாஜ் ஆகியோர் அடங்கிய இக்குழு, 51 முறை கூடி ஆலோசனை நடத்தி தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. இதை மாநிலங்களவை பொதுக் குறிக்கோள் குழு (ஜிபிசி) ஆய்வு செய்து ஒப்புதல் வழங்கும்.

மாநிலங்களவை துணைத் தலைவரை இடைப்பட்ட காலத்தில் நீக்குவதற்கான அதிகாரம், அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் உறுப்பினர்களுக்கு கடும் தண்டனை வழங்குவது, முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினை குறித்து 267-வது விதியின்படி விவாதம் நடத்துவதற்கான நேரத்தைக் குறைப்பது உட்பட பல்வேறு திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என அந்த அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும் மக்களவை நடைமுறை விதிமுறைகளில் இருந்து சில பிரிவுகளை புதிதாக சேர்க்கலாம் என்றும் பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாநிலங்களவை தலைவர் வெங்கய்ய நாயுடு தலைமையில் ஜிபிசி கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. மாநிலங்களவையில் இடம்பெற்றுள்ள 23 கட்சிகளின் பிரதிநிதிகள் இதில் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில், அக்னிஹோத்ரி குழு சமர்ப்பித்த பரிந்துரைகள் பற்றி விவாதிக்கப்பட்டது. குறிப்பாக, இப்போதைய விதிமுறைகளில் 77 திருத்தங்களை மேற்கொள்வது மற்றும் 124 புதிய விதிகளை சேர்ப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

அப்போது, பல்வேறு திருத்தங்கள் மற்றும் புதிய விதிகளுக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. மாநில அரசுகளின் குரலாக இருக்கும் தங்களின் குரலை ஒடுக்கும் வகையில் புதியவிதிகள் உள்ளதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

ஏப்ரலில் அடுத்த கூட்டம்

எவ்வித முடிவும் எட்டப்படாமல் இந்தக் கூட்டம் முடிந்தது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது அமர்வு ஏப்ரல் 3-ம் தேதி முடிவடைகிறது. அதற்குப் பிறகு ஜிபிசி-யின் அடுத்த கூட்டம் நடைபெறும் என்றும் அப்போது புதிய விதிமுறைகள் குறித்து மீண்டும் ஆலோசிக்கப்படும் எனத்தெரிகிறது. இதனிடையே, மாநிலங்களவை விதிகளை திருத்த எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

10 mins ago

இந்தியா

28 mins ago

இந்தியா

51 mins ago

தமிழகம்

36 mins ago

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

ஆன்மிகம்

34 mins ago

கருத்துப் பேழை

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

உலகம்

1 hour ago

சினிமா

2 hours ago

மேலும்