நிர்பயா வழக்கு: குற்றவாளி பவன் குப்தாவின் மனுவைத் தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

By பிடிஐ

நிர்பயா கூட்டுப் பலாத்கார வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் 4 பேரில் ஒருவர் பவன் குமார் குப்தா. சம்பவம் நடந்தபோது தான் பதின் பருவத்தைச் சேர்ந்தவர் என்பதால், தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று மனுத்தாக்கல் செய்தார். இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் மனுவைத் தள்ளுபடி செய்தது.

இதனால் டெல்லி விசாரணை நீதிமன்றம் நிர்ணயித்தபடி பிப்ரவரி 1-ம் தேதி காலை 6 மணிக்குள் குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2012-ம் ஆண்டு டெல்லியில் 23 வயதான மருத்துவ மாணவி ஓடும் பேருந்தில் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டு கீழே வீசப்பட்டார். பாதிக்கப்பட்ட மாணவிக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டபோதிலும், சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார்.

இந்தச் சம்பவத்தில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா மற்றும் அக்சய் குமார் ஆகியோருக்கு மரண தண்டனை விதித்து டெல்லி விசாரணை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரித் தாக்கல் செய்த மறு ஆய்வு மனு, சீராய்வு மனு ஆகியவற்றை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங் தாக்கல் செய்த கருணை மனுவையும் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் நிராகரித்தார். இதைத் தொடர்ந்து குற்றவாளிகள் 4 பேருக்கும் பிப்ரவரி 1-ம் தேதி காலை 6 மணிக்குத் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.


இந்நிலையில் குற்றவாளிகளில் ஒருவரான பவன் குமார் குப்தா, பாலியல் பலாத்கார சம்பவம் நடந்தபோது தான் பதின்பருவத்தைச் சேர்ந்தவராக இருந்தேன். ஆனால், அதைக் கருத்தில் கொள்ளாமல் தனக்குத் தூக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

ஆனால், அந்த மனுவை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், மனுதாரரின் கோரிக்கைக்கு எந்தவிதமான முகாந்திரமும் இல்லை எனக் கூறி அந்த மனுவைத் தள்ளுபடி செய்தது.

இதையடுத்து, பவன் குப்தா உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார்.

இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.பானுமதி, அசோக் பூஷன், ஏ.எஸ். போபண்ணா ஆகியோர் கொண்ட அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

டெல்லி போலீஸார் தரப்பில் சொலிசிட்டர் துஷார் மேத்தா ஆஜரானார். குற்றச் சம்பவம் நடந்தபோது பவன் குமார் குப்தாவுக்கு 19 வயதாகி இருந்தது என்பதற்கான சான்றிதழை நீதிமன்றத்தில் துஷார்மேத்தா தாக்கல் செய்தார். மேலும், போலீஸார் விசாரணையில் பவன் குமார் குப்தாவுக்கு 18 வயது முடிந்திருந்தது என்பதை அவர்களின் பெற்றோர்களே தெரிவித்துள்ளார்கள் என்பதையும் துஷார் மேத்தா தெரிவித்தார்.

ஆனால், குற்றவாளி பவன் குமார் குப்தா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஏ.பி.சிங், குற்றச் சம்பவம் நடந்தபோது பவன் குமார் குப்தா மைனர் என்பதற்கான பள்ளிச் சான்றிதழ் இருந்தது. அதை அப்போது நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை என வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், "இந்த மனுவை விசாரிப்பதற்கான எந்தவிதமான முகாந்திரங்களும் இல்லை. குற்றவாளி பதின்பருவத்தினர் என்ற வாதத்தை நீதிமன்றம் நிராகரித்த பின் மீண்டும் அதே கோரிக்கை எழுகிறது. எத்தனை முறை இதே விஷயத்தை திரும்பத் திரும்பக் கேட்க முடியும். ஏற்கெனவே இதேபோன்ற கோரிக்கையை எழுப்பிவிட்டார்கள். இந்த மனுவை விசாரிக்க முகாந்திரம் இல்லை என்பதால், தள்ளுபடி செய்கிறோம்" எனத் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 mins ago

சுற்றுலா

36 mins ago

சினிமா

41 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

வணிகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்