குடியுரிமை திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறுமா? பிஜேடி, அதிமுக முடிவு என்ன? பாஜக நம்பிக்கை

By செய்திப்பிரிவு

மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மக்களவையில் பெரும்பான்மை இருப்பதால், குடியுரிமை திருத்த மசோதா எளிதாக நிறைவேறிவிடும்.

ஆனால், மாநிலங்களவையில் நிறைவேறுமா அல்லது கடந்த முறை போன்று நிறைவேற்ற முடியாமல் தடங்கள் ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த குடியுரிமை திருத்த மசோதாவில் ஒடிசாவின் பிஜு ஜனதா தளம், அதிமுக, டிஆர்எஸ், ஒய்எஸ்ஆர் கட்சிகள் எடுக்கும் முடிவைப் பொறுத்துத்தான் பாஜக அரசால் இந்த மசோதாவை நிறைவேற்ற முடியும்.

ஆனால், தங்களால் இந்த முறை நிறைவேற்றிட முடியும் என்று நம்பிக்கையுடன் மத்திய அரசு இருப்பதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பாஜக தலைமையில் கடந்த முறை ஆட்சியில் இருந்தபோது குடியுரிமை திருத்த மசோதா மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

ஆனால், மாநிலங்களவையில் இந்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டதாலும், எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்ததாலும் இதை நிறைவேற்ற முடியவில்லை.

மேலும், மாநிலங்களவையில் பாஜகவுக்குப் பெரும்பான்மை இல்லாததால் இந்த மசோதா நிறைவேறாமல் கிடப்பில் போடப்பட்டது. மக்களவை காலம் காலாவதியானது மசோதாவும் காலாவதியானது.

இந்நிலையில் குடியுரிமை திருத்த மசோதாவில் சில முக்கியத் திருத்தங்களைக் கொண்டுவந்துள்ளது மத்திய அரசு.
அதன்படி, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கக் குடியுரிமை மசோதாவில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பாக வந்துள்ளவர்கள் குடியுரிமை பெறத் தகுதியானவர்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த மசோதாவில் மதரீதியாக மக்களைப் பிரித்து குடியுரிமை வழங்க மத்திய அரசு முயல்கிறது என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.

245 உறுப்பினர்கள் கொண்ட மாநிலங்களவையில் தற்போது 238 எம்.பிக்கள் உள்ளனர். இதில் ஒரு மசோதாவை நிறைவேற்ற 120 எம்.பி.க்கள் ஆதரவு தேவை.

இதில் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணிக்கு 102 எம்.பி.க்கள ஆதரவு இருக்கிறது. இதில் பாஜகவுக்கு 81 எம்.பி.க்களும், ஐக்கிய ஜனதா தளம் 6, சிரோன்மணி அகாலிதளம் 3 உறுப்பினர்கள், இந்தியக் குடியரசுக் கட்சிக்கு ஒரு எம்.பி. நியமன எம்.பி.க்கள் என 102 பேர் ஆதரவு இருக்கிறது.

இன்னும் 18 எம்.பி.க்கள் ஆதரவு பாஜகவுக்கு தேவை. இந்த 18 எம்.பி.க்கள் ஆதரவைப் பெறுவதற்காக அதிமுக(11 எம்.பி.க்கள்), பிஜு ஜனதா தளம்(7 எம்.பிக்கள்) டிஆர்எஸ்(6 எம்.பி.க்கள்), ஒய்எஸ்ஆர் சிபி(2 எம்.பி.க்கள்) ஆகிய கட்சிகளுடன் பாஜக பேசி வருவதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பிஜு ஜனதா தளம் கட்சியின் ஆதரவைப் பெறுவதற்காக கடந்த வாரம் வியாழக்கிழமை புவனேஷ்வரில் உள்ள எம்ய்ம்ஸ் வாரியத்துக்கு உறுப்பினராக மாநிலங்களவையில் இருந்து நியமிக்கப்படும் ஒரு உறுப்பினருக்கான போட்டியில் பிஜு ஜனதா தளம் வேட்பாளருக்கு எதிராக பாஜக தனது வேட்பாளர் அஸ்வினி வைஷ்நவை வாபஸ் பெற்றுக்கொண்டது.

மேலும், மக்களவையில் தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து பாஜக போட்டியிட்டது. நாடாளுமன்றத்தில் இரு கட்சிகளின் உறுப்பினர்களும் ஒத்திசைவுடன் பணிபுரிந்து வருகிறார்கள். ஆதலால், அதிமுகவின் எம்.பிக்கள் ஆதரவை பெறும் நோக்கிலும் பாஜக சார்பில் பேச்சு நடத்தப்பட்டு வருகிறது.

மக்களவையில் குடியுரிமை திருத்த மசோதா நிறைவேறுவதில் எந்தவிதமான சிரமும் பாஜகவுக்கு இருக்கப்போவதில்லை. ஆனால் மாநிலங்களவையில் சிரமங்கள் இருந்தாலும், பிஜு ஜனதா தளம், அதிமுக ஆகிய இரு கட்சிகளும், டிஆர்எஸ் அல்லது ஒய்எஸ்ஆர் ஆதரவு அளித்தாலே ஏறக்குறைய எளிதாக நிறைவேற்றிவிடும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மக்களவையில் நாளை குடியுரிமை திருத்த மசோதாவை அறிமுகம் செய்யும் உள்துறை அமைச்சர் அமித் ஷா நாளை, பிற்பகலில் மாநிலங்களவையிலும் இந்த மசோதாவை அறிமுகம் செய்வார் எனத் தெரிகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

க்ரைம்

1 hour ago

உலகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

வேலை வாய்ப்பு

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

கல்வி

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

வாழ்வியல்

5 hours ago

மேலும்