தனித்து விடப்படுகிறதா சிவசேனா? சோனியா, சரத்பவார் கைகழுவுகிறார்களா? பாஜக பக்கம் இழுக்க ராம்தாஸ் அத்வாலே புதிய யோசனை

By க.போத்திராஜ்

மகாராஷ்டிராவில் சிவசேனாவுடன் இணைந்து ஆட்சி அமைக்க முதலில் ஆர்வம் காட்டிய தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் தற்போது தயக்கம் காட்டி வருகின்றன. இதனால், சிவசேனாவுடன் கூட்டணி சேரும் முடிவை சோனியாவும், சரத் பவாரும் கைகழுவிவிடத் துணிந்துவிட்டார்கள் என்று மகாராஷ்டிரா அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மகாராஷ்டிராவில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக - சிவசேனா கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. ஆனால், ஆட்சி அதிகாரத்தை சமபங்காகப் பிரிப்பதில் இரு கட்சிகளுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது.

முதல்வர் பதவிக்காக பாஜகவும் சிவசேனாவும் மல்லுக்கட்டியதால், மாநிலத்தில் பாஜக, சிவசேனா கூட்டணி ஆட்சி அமைவதில் இழுபறி ஏற்பட்டது. இதனால் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாததால் அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.

அதேசமயம், முதல்வர் பதவி மீது தீராத ஆசையுடன் இருக்கும் சிவசேனா கட்சி, காங்கிரஸ் -தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் ஆதரவுடன் மாநிலத்தில் ஆட்சி அமைக்கப் பேச்சு நடத்தி வருகிறது. இதற்காக மத்திய அமைச்சரவையில் இருந்து வெளியேறி, பாஜகவையும் பகைத்துக் கொண்டது.

ஆட்சி அமைக்கும் எண்ணத்துடன் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் சிவசேனா பேச்சு நடத்தி வருகிறது. இதற்காக 3 கட்சிகளும் சேர்ந்து குறைந்தபட்ச செயல் திட்டம் வகுத்து வருகின்றன. இந்நிலையில், நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் பங்கேற்க சரத் பவார் நேற்று வந்தார். அவரிடம் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து சிவசேனா ஆட்சி அமைக்கப்போவதாகக் கூறி வருகிறது பற்றி நிருபர்கள் கேட்டனர்.

அதற்கு சரத் பவார் " அப்படியா, ஆட்சி அமைக்கப் போகிறோமா, தேசியவாத காங்கிரஸ், காங்கிஸ், சிவசேனா இணைந்து ஆட்சி அமைத்தால் என்ன நடக்கும் என்பது தெரியுமா? சிவசேனா-பாஜக இணைந்து தேர்தலைச் சந்தித்தார்கள். என்சிபி-காங்கிரஸ் இணைந்து தேர்தலைச் சந்தித்தோம். அவர்கள் அவர்களின் வழியில் அரசியல் செய்யட்டும். நாங்கள் எங்கள் வழியில் அரசியல் செய்கிறோம்" எனத் தெரிவித்தார்.

அதன்பின் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சரத் பவார் மாலையில் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பு முடிந்த பின் சரத் பவார் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், “ நானும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் இரு கட்சிகளைப் பற்றியும் மகாராஷ்டிர அரசியல் குறித்தும் பேசினோம். இன்னும் தீவிரமாக ஆலோசிக்க வேண்டியுள்ளது.

சிவசேனாவும் இணைந்து ஆட்சி அமைப்பது குறித்துப் பேசவில்லை. மகாராஷ்டிர அரசியல் நிலவரம் குறித்து சோனியாவிடம் விளக்கம் அளித்தேன். 170 எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதாகக் கூறியவர்களிடம் விளக்கம் கேளுங்கள். எனக்கு 170 எம்எல்ஏக்கள் குறித்து ஏதும் தெரியாது” எனத் தெரிவித்தார்.

இதனால் சிவசேனா கட்சியுடன் கூட்டணி அமைப்பதில் இருந்து காங்கிரஸ் கட்சியும் விலகத் தொடங்கியுள்ளதாகத் தெரிகிறது. இதற்கிடையே நேற்று நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரைப் பற்றி பிரதமர் மோடி ஏகத்துக்கும் புகழ்ந்து பேசினார். எம்.பி.க்கள் என்சிபி கட்சியிடம் இருந்து பாடம் கற்க வேண்டும் என்று பேசினார். பிரதமர் மோடியின் இந்தப் பேச்சு, சிவசேனா பக்கம் என்சிபியை நெருங்கவிடாமல் தடுக்கும் என்றே அரசியல் நோக்கர்கள் கணிக்கின்றனர்.

இதற்கிடையே தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருக்கும் இந்திய குடியரசுக் கட்சியின் தலைவரும், மத்திய அமைச்சருமான ராம்தாஸ் அத்வாலே நேற்று நிருபர்களிடம் கூறுகையில், "நான் சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத்திடம் சமாதானம் பேசினேன். மகாராஷ்டிராவில் சிவசேனா-பாஜக இணைந்து ஆட்சி அமைக்க வேண்டும். பாஜக 3 ஆண்டுகளும், 2 ஆண்டுகள் சிவசேனாவும் ஆட்சியைப் பகிர்ந்து கொள்ளலாமே என்று தெரிவித்தேன். பாஜக ஏற்றுக் கொண்டால் சிவசேனா இதுகுறித்து சிந்திக்கும். இதுகுறித்து நான் பாஜகவிடமும் பேச இருக்கிறேன்" எனத் தெரிவித்தார்.

சிவசேனாவைப் பொறுத்தவரை பாஜக பக்கம் போவதற்கு வாய்ப்பில்லை என்று தெரிவித்தாலும், சூழ்நிலை அந்தக் கட்சியை பாஜக பக்கம் தள்ளவே முயல்கிறது. ஏற்கெனவே காங்கிரஸ், என்சிபி கட்சிகள் சிவசேனாவிடம் இருந்து விலகத் தொடங்கியுள்ள நிலையில், சிவசேனா தற்போது தனித்துவிடப்பட்டுள்ளது.

மேலும், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவும், சிவசேனாவை முழுமையாக ஒதுக்கிவிடவில்லை. ராம்தாஸ் அத்வாலேயிடம், விரைவில் மகாராஷ்டிராவில் சிவசேனா-பாஜக ஆட்சி அமையும் எனத் தெரிவித்துள்ளார். ஆதலால், காங்கிரஸ், என்சிபி கட்சிகள் சிவசேனாவை ஒதுக்கும் பட்சத்தில் சிவசேனா, பாஜகவிடம் சேர்வதைத் தவிர வேறு வழியில்லை.

அதுமட்டுமல்லாமல் சிவசேனா தீவிரமான இந்துத்துவா கொள்கைகள், சித்தாந்தங்களைப் பின்பற்றி அரசியல் செய்துவரும் கட்சி. ஆனால் காங்கிரஸ், என்சிபி கட்சிகள் மதச்சார்பின்மையைத் தீவிரமாக கடைப்பிடிக்கும் கட்சிகள். அதைக் கூறியே தேர்தலில் வாக்குகளைப் பெற்றுள்ளன. இருவேறு துருவங்களில் அரசியலில் பயணிக்கும் கட்சிகள் ஒன்றாக இணைந்து பயணித்தால், நிச்சயம் இரு தரப்பினருக்கும் அழிவு ஏற்படும். தொடர்ந்து அரசியல் செய்ய முடியாது என்பதால் காங்கிரஸ், என்சிபி கட்சிகள் தயக்கம் காட்டுகின்றன.

தொடக்கத்தில் மகாராஷ்டிராவில் இடைத்தேர்தல் வராது, 5 ஆண்டுகள் ஆட்சியில் அமர்வோம் என்றெல்லாம் சரத்பவார் பேசினார். ஆனால், தனது சகோதரர் அஜித் பவார், பிரபுல் படேல் ஆகியோர் அமலாக்கப் பிரிவு வழக்கை எதிர்கொண்டுள்ள சூழலில் பாஜகவுக்கு விரோதமாக சிவசேனாவுடன் நெருக்கம் காட்டுவது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று உணர்ந்ததால் என்னவோ, சரத் பவார் தற்போது சிவசேனாவிடம் இருந்து பின்வாங்குகிறார் என்று மகாராஷ்டிர அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கிறார்கள். இதனால், சிவசேனாவை கைகழுவும் முடிவுக்கு சரத் பவார், சோனியா வந்துள்ளார்களா என்ற சந்தேகம் அரசியல் நோக்கர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

17 mins ago

தமிழகம்

13 mins ago

இந்தியா

37 mins ago

இந்தியா

24 mins ago

இந்தியா

47 mins ago

விளையாட்டு

39 mins ago

இந்தியா

47 mins ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

மேலும்