தேசிய குடியுரிமைப் பதிவேடு நாடு முழுவதும் அறிமுகம் செய்யப்படும்: அமித் ஷா உறுதி

By செய்திப்பிரிவு

ராஞ்சி

தேசிய குடியுரிமைப் பதிவேடு (என்ஆர்சி) நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்படும். இதன் மூலம் நாட்டில் சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்கள், நாட்டை விட்டு அனுப்பப்படுவார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக தேசியத் தலைவருமான அமித் ஷா தெரிவித்தார்.

ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் இந்தி நாளேடு சார்பில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா பங்கேற்றார்.

அப்போது அவர் பேசியதாவது:

''மக்களவைத் தேர்தலின்போது மக்களிடம் அளித்த வாக்குறுதியில் தேசிய குடியுரிமைப் பதிவேடு அசாம் மாநிலத்தில் மட்டுமல்லாது, நாடு முழுவதும் கொண்டுவருவோம் என்று கூறியிருந்தோம். நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் இதில் பதிவு செய்யப்படுவார். சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்கள் மீது சட்டப்படி தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இந்த வாக்குறுதிக்குத்தான் மக்கள் எங்களுக்கு ஒப்புதல் வழங்கி வெற்றி பெற வைத்திருக்கிறார்கள். ஆதலால், அடுத்து நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடு கொண்டுவரப்படும். என்ஆர்சி என்பது தேசிய அசாம் பதிவேடு அல்ல, தேசிய குடிமக்கள் பதிவேடு (National Register of Citizens).

இதை நாடு முழுவதும் அமல்படுத்தும்போது, தேசத்தின் குடிமக்கள் குறித்த பட்டியல் கிடைக்கும் என்று நம்புகிறேன். அசாம் குடிமக்கள் பதிவேட்டில் தங்கள் பெயர்களைச் சேர்க்க முடியாதவர்கள் வெளிநாட்டினருக்கான தீர்ப்பாயத்தை அணுகி முறையிடலாம். அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அசாம் அரசு செய்துள்ளது. வழக்கிற்காக அலைய முடியாதவர்களுக்காக வழக்கறிஞர்களையும் அரசு ஏற்பாடு செய்துள்ளது.

எந்த நாட்டிலும் யாரும் எளிதாகச் சென்று தங்கி, குடியேறிவிட முடியாது என்று நம்புகிறேன். நான் கேட்கிறேன், அமெரிக்காவில் சென்று உங்களால் எளிதாகக் குடியேறிவிடமுடியுமா? இல்லை. நிச்சயமாக குடியேற முடியாது. அப்படி இருக்கும்போது வெளிநாட்டவர்கள் இந்தியாவில் மட்டும் எப்படி குடியேற முடியும். இதை எளிதாகப் புரிந்துகொள்ள முடியும்தானே.

நீங்கள் இங்கிலாந்து, நெதர்லாந்து, ரஷ்யா ஆகிய நாடுகளில் உங்களால் குடியேற விரும்பினால் அந்நாட்டு அரசு அனுமதிக்குமா? பின் எப்படி இந்தியாவில் மட்டும் வெளிநாட்டவர் ஒருவர் வந்து, குடியேற அனுமதிக்க முடியும். இதுபோன்றெல்லாம் நாடுகள் செயல்பட முடியாது. இந்த நாட்டின் குடிமக்களுக்கு தேசிய பதிவேடு என்பது இந்த நேரத்தில் அவசியமான ஒன்று''.

இவ்வாறு அமித் ஷா தெரிவித்தார்

அசாம் மாநிலத்தில் கடந்த மாதம் 31-ம் தேதி வெளியிட்ட தேசிய குடியுரிமை இறுதிக்கட்டப் பதிவேட்டில் 19 லட்சம் பேரின் பெயர்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

7 mins ago

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

6 hours ago

விளையாட்டு

8 hours ago

சினிமா

8 hours ago

சுற்றுச்சூழல்

8 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

12 hours ago

வலைஞர் பக்கம்

12 hours ago

மேலும்