ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு இன்று விசாரணை இல்லை: செக் வைத்த சிபிஐ, அமலாக்கப்பிரிவு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி,

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்ஜாமீன் கோரி காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் சார்பில் தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காகக் கருதி இன்று விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

ஐஎன்எக்ஸ் மீடியாவுக்கு சட்டவிரோதமாக முதலீடு பெற அனுமதித்த வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கு எதிராக சிபிஐ, அமலாக்கப்பிரிவு வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றன.

இந்த வழக்கில் ப.சிதம்பரத்துக்கான முன் ஜாமீன் மனுவையும் டெல்லி உயர் நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. இதையடுத்து, அவரைக் கைதுசெய்ய சிபிஐ தீவிரம் காட்டி வருகிறது. முன்ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு இன்று காலை மூத்த நீதிபதி என்.வி.ரமணா தலைமையில் நீதிபதிகள் சந்தானகவுடர், அஜய்ரஸ்தோகி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ப.சிதம்பரம் சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகி, இந்த மனுவை அவசர வழக்ககாகக் கருதி விசாரிக்க வேண்டும் என நீதிபதியிடம் கோரிக்கை விடுத்தார். இதற்கு சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி வாதிட்டு ஜாமீன் வழங்க எதிர்ப்புத் தெரிவித்தார்.

அப்போது நீதிபதி ரமணா கூறுகையில், முன்ஜாமீன் மனு மீது எந்தவிதமான முடிவும் எடுக்க முடியாது, அதை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வுக்கு அனுப்பி வைப்பதாகத் தெரிவித்தார். ஆனால், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையிலான அமர்வு அயோத்தி விவகாரம் தொடர்பான வழக்கை நாள்தோறும் விசாரித்து வருகிறது என்பதால், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க மறுத்துவிட்டனர்.


அதன்பின் மதிய உணவுக்குப்பின் மீண்டும் நீதிபதி என்வி.ரமணா தலைமையிலான அமர்வு கூடியது. அப்போது மூத்த வழக்கறிஞர் கபில்சிபல் ஆஜராகி, முன்ஜாமீன் மனுவை விசாரணைக்கு ஏற்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
ஆனால், சொலிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, வாய்மொழியாக கேட்கும் கோரிக்கைக்கு நீதிபதிகள் உடன்படக்கூடாது என்று தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார். முறைப்படி எந்தவிதமான ஆவணங்களும் இல்லை என்றார்.

அப்போது கபில் சிபல் வாதிடுகையில், " ப.சிதம்பரம் வெளிநாடு தப்பிச் சென்றுவிடுவார் என்றுகூறி, விசாரணை அமைப்புகள் சிபிஐ, அமலாக்கப்பிரிவு ஆகியவை லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளன. ஆதலால், அவசரம் கருதி விசாரணைக்கு ஏற்க வேண்டும் " என்று கோரினார்.

அப்போது நீதிபதி ரமணா கபில் சிபிலிடம், உங்கள் மனுவில் சிறு பிழை இருப்பதாக கூறப்பட்டது அதை சரி செய்து தாக்கல் செய்யுங்கள் என்றார். அதற்கு கபில் சிபில், அந்த பிழை சரி செய்யப்பட்டுவிட்டது என்று பதில் அளித்தார்.
உடனடியாக, பதிவாளர் சூர்யபிரதாப்பை அழைத்த நீதிபதி ரமணா மனுவில் உள்ள குறைகள் களையப்பட்டதா எனக் கேட்டார். அதற்கு பதிவாளர் பிழைகள் நீக்கப்பட்டு தற்போதுதான் மீண்டும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

அப்போது கபில் சிபல், எங்களின் மனு இன்று விசாரணைப் பட்டியலில் இல்லை. தற்போது தலைமை நீதிபதி அரசியல்சாசன அமர்வில் இருக்கிறார், மாலை 4 மணிக்குள் பட்டியலில் இடம் பெற வாய்ப்பு இல்லை என்றார். இருப்பினும், இந்த மனுவை இன்று விசாரணைக்கு எடுக்க வேண்டும், ஏற்கனவே இந்த மனு குறித்து தலைமை நீதிபதியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதாக கபில் சிபில் முறையிட்டார்.

ஆனால், நீதிபதி ரமணா பட்டியலில் இல்லாத மனுக்களை விசாரிக்க முடியாது என்று மறுத்தார். அப்போது அவர் கூறுகையில், " வழக்கமாக மனுக்கள் அனைத்தும் தலைமை நீதிபதிக்கு சென்று அவரின் பார்வைக்குப்பின்புதான் பட்டியலிடப்படும். காலையில் நாங்கள் அனுப்பிவிட்டோம். ஆனால் மனுவில் குறையிருந்தது. மாலைக்குள் பட்டியலிட்டால் மட்டுமே எங்களால் விசாரிக்க முடியும் இல்லாவிட்டால் விசாரிக்க இயலாது. இது எங்களின் கைகளில் இல்லை " எனத் தெரிவித்தார்.

இதனால் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாது என்று தெளிவாகிறது.
இதற்கிடையே ப.சிதம்பரம் தாக்கல் செய்துள்ள முன்ஜாமீன் மனுவில் சிபிஐ, மற்றும் அமலாக்கப்பிரிவு கேவியட் மனுத் தாக்கல் செய்துள்ளன. அதாவது ப.சிதம்பரத்தின் ஜாமீன் குறித்து எந்தவிதமான உத்தரவு பிறக்கும் முன் தங்களின் கருத்தை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்க கூடாது என்று தெரிவித்துள்ளன.

இதனால், ப.சிதம்பரம் முன்ஜாமீன் பெறுவதில் மீண்டும் சிபிஐ, அமலாக்கப்பிரிவு செக் வைத்து சிக்கலை ஏற்படுத்தியுள்ளன.

பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

44 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

51 mins ago

இந்தியா

1 hour ago

உலகம்

1 hour ago

வணிகம்

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

வாழ்வியல்

5 hours ago

மேலும்