தொடங்கியது காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டம்: தலைவரைத் தேர்வு செய்ய புதிய நடைமுறை; தாமதமாகும்?

By செய்திப்பிரிவு

புதுடெல்லி

காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டம் டெல்லியில் தொடங்கியுள்ளது. இதில் புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்காக வித்தியாசமான முறையைப் பின்பற்ற ராகுல் காந்தி அறிவுறுத்தியுள்ளார்.

தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ராகுல் காந்தி திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டார். ராகுல் காந்தியின் ராஜினாமாவைத் தொடர்ந்து ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள் பல்வேறு மாநிலங்களில் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். ராகுல் காந்தியை சமாதானம் செய்யும் முயற்சிகள் தோல்வியில் முடிந்துவிட்டன. புதிய தலைவர் தேர்வில் அவர் உறுதியாக உள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் தலைமை இல்லாத சூழலில் தொண்டர்கள், நிர்வாகிகள் இடையே குழப்பமான சூழல் நிலவுகிறது.

ராகுல் காந்தியைப் போன்று இளம் தலைவர் ஒருவர்தான் காங்கிரஸ் கட்சிக்குத் தலைவராக வர வேண்டும் என்று மூத்த தலைவர்கள் சிலர் குரல் எழுப்பியுள்ளனர். பிரியங்கா காந்தியைத் தலைவராக நியமிக்க வேண்டும் என பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங் உள்ளிட்டோர் வலியுறுத்தியுள்ளனர். ஆனால் தலைவர் பதவிக்கு, தன்னைப் பரிசீலிக்க வேண்டாம் என பிரியங்கா கூறியுள்ளார்.

இந்த சூழலில் காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டம் இன்று காலை தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் அடுத்த தலைவர் யார் என்பது குறித்த விவாதிக்கப்பட்டு வருகிறது. தலைவர் தேர்வில் புதிய நடைமுறையைப் பின்பற்ற ராகுல் காந்தி அறிவுறுத்தியுள்ளார்.

புதிய நடைமுறை

காரியக் கமிட்டி உறுப்பினர்கள் மட்டும் கூடித் தலைவரை தேர்வு செய்யாமல் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் மற்ற அமைப்பு நிர்வாகிகள், மாநில காங்கிரஸ் தலைவர்கள் ஆகியோருடன் ஆலோசிக்க வேண்டும் எனவும் ராகுல் காந்தி அறிவுறுத்தியுள்ளார். இதனால் அடுத்த தலைவர் யார் என்பதை உடனடியாக அறிவிக்க வாய்ப்பு சற்று குறைவு எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, காரியக் கமிட்டி உறுப்பினர்கள் மட்டுமின்றி காங்கிரஸ் கட்சியின் பல்வேறு அமைப்பு நிர்வாகிகள், மாநில காங்கிரஸ் தலைவர்கள் என அனைத்துத் தரப்பினரிடமும் கருத்துகள் கேட்கப்படுகின்றன. காரியக் கமிட்டிக் கூட்டம் தொடங்கிய உடனேயே அவர்கள் 5 குழுவாகப் பிரிந்து தனித்தனியாக விவாதிக்கின்றனர். பின்னர் அந்தந்த பகுதி சார்ந்த தலைவர்களுடன் விவாதிக்கவுள்ளனர்.

ஒவ்வொரு மாநில காங்கிரஸ் தலைவர்களுடன் அந்தக் குழுவினர் விவாதித்து புதிய தலைவர் யாராக இருக்க வேண்டும் என்ற கருத்தைக் கேட்கின்றனர். பின்னர் அவர்கள் அனைவரும் ஒன்றாகக் கூடி பரிந்துரைப் பட்டியலைத் தயாரிக்கின்றனர்.

இந்தப் பட்டியல் பின்னர் காரியக் கமிட்டி உறுப்பினர்கள் மொத்தமாக அமர்ந்து ஆலோசனை செய்து அதில் இருந்து ஒருவர் தலைவராக தேர்வு செய்யப்பட வேண்டும். இந்த மொத்த நடைமுறையும் முடிந்து புதிய தலைவர் தேர்வு செய்ய 4 நாட்கள் வரை ஆகலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர்கள் முன் வைக்கும் கருத்துக்கு ஏற்ப தலைவர் தேர்வு அமையும் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் காரியக் கமிட்டிக் கூட்டத்தில் தலைவர் யார் என்பது குறித்த ஆலோசனைகள் முடிந்தாலும் உடனடியாக அறிவிப்பு வெளியாகாது, சற்று தாமதமாகலாம் எனத் தெரிகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

15 mins ago

தமிழகம்

30 mins ago

தமிழகம்

56 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்