பெங்களூரில் பள்ளி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: உடற்கல்வி ஆசிரியர் மீது தாக்குதல்; போலீஸார் - பொதுமக்கள் மோதல்

By செய்திப்பிரிவு

பெங்களூருவில் 7 வயது பள்ளி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த உடற்கல்வி ஆசிரியரை பொதுமக்கள் அடித்து உதைத்துள்ளனர். பள்ளி, வாகனங்கள், போலீஸார் மீதும் தாக்குதல் நடத்தியதால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.

பெங்களூருவில் உள்ள ஹொசகுட்ட ஹள்ளி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் கிருஷ்ணா(32) என்பவர் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிகிறார். இங்கு 2-ம் வகுப்பு படிக்கும் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட மாணவி இது தொடர்பாக அவரது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து மாணவியின் பெற்றோர், உறவினர்கள் புதன்கிழமை காலை ப‌ள்ளியை முற்றுகையிட்டு,போராட்டம் நடத்தினர். அப்போது, மேலும் சில மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகி இருப்பது தெரியவந்தது. இதனால் 500-க்கும் மேற்பட்ட பெற்றோர்களும்,பொதுமக்களும் அங்கு குவிந்தனர்.

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், கிருஷ்ணாவை கைது செய்து வாகனத்தில் ஏற்ற முயன்றனர். அப்போது கூட்டத்தில் இருந்த சிலர் கிருஷ்ணாவை சரமாரியாக தாக்கினர். இதில் அவருடைய மண்டை உடைந்தது. நிலைமையைக் கட்டுப்படுத்த போலீஸார் தடியடி நடத்தினர்.

இதனால் ஆத்திரம் அடைந்த பொது மக்கள் கல் வீசி தாக்குதல் நடத்தினர். பள்ளி வாகனங்களையும், போலீஸாரின் வாகனங்களையும் அடித்து நொறுக்கினர். 2 வாகனங்களை தீயிட்டு கொளுத்தினர். பள்ளி அடித்து நொறுக்கப்பட்டது.இந்த மோதலில் நூற்றுக்கும் மேற்பட்ட பொது மக்களும் போலீஸாரும் படுகாயம் அடைந்தனர்.

ஊரடங்கு உத்தரவு

பெங்களூரு மாநகர காவல் ஆணையர் எம்.என்.ரெட்டி பள்ளி நிர்வாகத்திடமும், பொதுமக்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார். அவர் கூறும்போது, ''வழக்கு பதிவு செய்து, கிருஷ்ணாவை கைது செய்துள்ளோம். மக்கள் வன்முறையில் ஈடுபடக்கூடாது. அனைவரும் அமைதி காக்க வேண்டும். இந்த சம்பவத்தின் காரணமாக ஏற்பட்டிருக்கும் பதற்றத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பெங்களூருவின் அமைதியை சீர்க் குலைக்க முயல்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்''என்றார்.

பெங்களூரு- மைசூரு சாலையில் சில இடங்களிலும், பேட்டராயனப்புரா, ஹொசாகுட்டஹள்ளி உள்ளிட்ட சில இடங்களிலும் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

50 mins ago

க்ரைம்

1 hour ago

உலகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

வேலை வாய்ப்பு

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

கல்வி

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

வாழ்வியல்

4 hours ago

மேலும்