இந்தியாவில் வெளிநாட்டு பல்கலை தொடங்கும் திட்டத்தை கைவிட முடிவு: வெளிநாட்டு ஆசிரியர், மாணவர்களை கவர திட்டம்

By ஆர்.ஷபிமுன்னா

இந்தியாவில் வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் தொடங்கும் திட்டத்தை கைவிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு பதிலாக, வெளிநாட்டு ஆசிரியர் மற்றும் மாணவர்கள் நம் நாட்டின் கல்வி நிறுவனங்களில் இணைவதை கவர மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.

வெளிநாட்டு பல்கலைக்கழகங்களை இந்தியாவில் அனுமதிக்க கடந்த 1995 முதல் காங்கிரஸ் அரசு முயன்று வந்தது. இவற்றை அனுமதிப்பதற்கான மசோதா முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது. இம்மசோதாவை பாரதிய ஜனதா, சமாஜ்வாதி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் கடுமையாக எதிர்த்ததால் நிலுவையில் வைக்கப்பட்டது. புதிதாக பதவியேற்ற பிரதமர் நரேந்திர மோடி இந்த மசோதாவை நிதி ஆயோக்கிற்கு அனுப்பி கருத்து கேட்டிருந்தார். இதற்கு ஆதரவு அளித்த நிதி ஆயோக், பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) சட்டத்தில் திருத்தம் செய்து அவற்றை நிகர்நிலை பல்கலைக்கழகங்களாக அனுமதிக்கலாம் என பரிந்துரை செய்தது. இதை அமல்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்த மத்திய அரசு தற்போது தனது முடிவை மாற்றிக் கொண்டுள்ளது.

விருப்பம் காட்டவில்லை

இதுகுறித்து ‘தி இந்து’விடம் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை வட்டாரம் கூறும்போது, “இந்திய கல்வி நிறுவனங்களுடன் இணைந்து அவற்றின் வளாகங்களில் செயல்படவும் அல்லது நிகர்நிலை பல்கலைக்கழகங்களாக செயல்படவும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி அளிக்க திட்டமிட்டிருந்தோம். இதற்காக யுஜிசி சட்டத்தில் திருத்தம் செய்யவிருந்தோம். ஆனால் இந்திய அரசின் அறிவிப்புக்கு வெளிநாடுகளில் இருந்து இதுவரை ஒரு கல்வி நிறுவனம்கூட விருப்பம் காட்டவில்லை. எனவே இதற்கு பதிலாக இந்தியாவின் சிறந்த 20 கல்வி நிறுவனங்களில் வெளிநாட்டு பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைவதை கவரும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது” என்று தெரிவித்தனர்.

மத்திய அரசின் புதிய முடிவின் நிபந்தனைகளின்படி, வெளிநாட்டவரை இந்தியாவில் அனுமதிக்கவும், கண்காணிக்கவும் ஒரு நிபுணர் குழு அமைக்கப்பட உள்ளது. வெளிநாட்டவரை சேர்க்க இக்குழுவிடம் இந்திய கல்வி நிறுவனங்கள் (சிறந்த 20 நிறுவனங்கள்) அனுமதி பெற வேண்டும். இதற்கான விண்ணப்பத்தில் அடுத்த 15 ஆண்டுகளுக்கான தங்கள் வளர்ச்சித் திட்டத்தை இக்கல்வி நிறுவனங்கள் முன்வைக்க வேண்டும். இவற்றில் குறைந்தது 3 ஆண்டுகளுக்கு பணியாற்ற வெளிநாட்டு ஆசிரியர்கள் நிர்பந்திக்கப்பட உள்ளனர். இதுபோன்ற நிபந்தனைகளால், அரசு எதிர்பார்க்கும் வரவேற்பு புதிய திட்டத்துக்கும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

பேராசிரியர்கள் நிம்மதி

இதற்கிடையே இந்தியக் கல்வி நிறுவனங்களுடன் இணைந்து வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் தொடங்குவதற்கு நம் நாட்டு ஆசிரியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவி வந்தது. இதனால் இந்தியாவின் கல்வித்தரம் குறைந்து விடும் எனக் கருதப்படுவதே இதற்கான காரணம் ஆகும். இதற்காக கல்லூரி மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர் சங்கங்கள் தேசிய அளவில் தொடர்ந்து போராடி வருகின்றன.

அந்த திட்டத்தை தற்போது மத்திய அரசு கைவிட்டு விட்டமையால் இந்திய கல்வி நிறுவனங்களின் பேராசிரியர்கள் நிம்மதிப் பெருமூச்சு விடும் நிலை உருவாகியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

21 mins ago

தமிழகம்

30 mins ago

தமிழகம்

51 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

மேலும்