மோடியின் இரண்டு முகங்கள்

By கரண் தாப்பர்

வரலாற்றுக்கு முந்தைய புராண காலங்களிலேயே இந்தியா மரபணு விஞ்ஞானத்திலும், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையிலும் சிறந்து விளங்கியது என்று பிரதமர் மோடி பேசியிருப்பது அறிவுக்கு புறம்பானது.

நாம் நமது பிரதமரிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறோம்? இது வியந்தோதும் அலங்கார, ஆச்சரியக் கேள்வியல்ல. ஏன் என்று நாம் விரைவில் காண்போம். நேர்மை, அர்ப்பணிப்பு, கடமை தவறாமை, நிர்வாகத் திறமை, ஓரளவுக்கு அறிவுகூர்மை ஆகியவற்றை ஒரு பிரதமரிடமிருந்து எதிர்பார்க்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். ஆனால் இவை மட்டும்தானா எல்லாம்?

மற்ற அனைத்து குணங்களுக்கு ஈடாக முக்கியத்துவம் வாய்ந்தது பகுத்தறிவு. இதையும் ஒரு பிரதமரிட நாம் எதிர்பார்க்கிறோம்.

நம் பிரதமர் சொல்வது, அல்லது செய்ய நினைப்பது பற்றி நாம் எப்போதும் ஒப்புக் கொள்ளப் போவதில்லை. ஆனாலும் அவரின் சிந்தனைகள், செயல்கள் அறிவுபூர்வமானதாகவும், நன்கு பரிசீலிக்கப்பட்டதாகவும், நம்பகத் தன்மை வாய்ந்ததாகவும் நாம் அனுமானித்துக்கொள்கிறோம். அவர்களது முடிவு தவறாகப் போகும் போது கூட (பெரும்பாலும் அப்படித்தான்), பொது அறிவுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் அவர்கள் எதுவும் செய்து விட மாட்டார்கள் என்றே நாம் நம்புகிறோம்.

இந்த இடத்தில்தான் நரேந்திர மோடியிடம் சில கேள்விகள் எனக்கு உள்ளது. சர் எச்.என்.ரிலையன்ஸ் அறக்கட்டளை மருத்துவமனை மற்றும் ஆய்வு மையம் ஒன்றை கடந்த சனிக்கிழமை அவர் திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:

"மகாபாரதத்தில் கர்ணன் தாயின் கருவறையிலிருந்து பிறந்தவரல்ல என்று கூறப்பட்டுள்ளது. அதாவது இதிகாசம் எழுதப்பட்ட அந்தக் காலக்கட்டத்தில் மரபணு விஞ்ஞானம் இருந்து வந்துள்ளதை இது அறிவுறுத்துகிறது. நாம் விநாயகரை வணங்குகிறோம். அவரது மனித உடலில் யானையின் தலையைப் பொருத்திய பிளாஸ்டிக் சர்ஜன்கள் அப்போது இருந்திருக்க வேண்டும்” என்று பேசியுள்ளார்.

மோடியின் இந்த நம்பிக்கையை பல இந்துக்களும் நிச்சயம் பகிர்ந்து கொள்வர் என்பதில் சந்தேகமேயில்லை. ஒவ்வொருவரும் எதை நம்புவது என்பது அவரவர்களின் தனிப்பட்ட சுதந்திரத் தெரிவு. ஆனால் ஒரு பிரதமர் புராணக் காலத்தில் மரபணு விஞ்ஞானம் இருந்ததற்கு கர்ணனின் பிறப்பையும், விநாயகர் உருவத்திற்கு பிளாஸ்டிக் சர்ஜன்கள் அக்காலத்தில் இருந்தனர் என்றும் நம்பிக்கையை உண்மையாகக் கூறுவதில், அதுவும் ஒரு மருத்துவமனையின் தொடக்க விழாவில், இவ்வாறு கூறுவது - முற்றிலும் வேறு விஷயம்.

ஏன்? விஞ்ஞானச் சாதனைகளுக்கு புராணங்களை இப்படிப் பயன்படுத்துவது அறிவுக்குப் புறம்பானது. முதலில், புராணம் உண்மை என்பதன் மீதான நமது நம்பிக்கையைத் தவிர இதற்கு வேறு நிரூபணங்கள் இல்லை. இரண்டாவதாக, நீங்கள் உயர்த்திப் பிடிக்கும் இத்தகைய விஞ்ஞான அறிவு, மற்றும் சாதனைகள் இருந்து பிறகு தொலைந்தது என்பதற்கோ, அல்லது நீண்டகாலத்திற்கு முன்பே இது மறக்கப்பட்டு விட்டது என்பதற்கோ இவை எப்போதாவது நடந்திருக்க வாய்ப்பிருக்கிறது என்பதற்கான ஆதாரபூர்வ பதிவுகளின் சுவடுகள் கூட இல்லை எனும்போது அதற்கு எப்படி நியாயம் கற்பிக்கப் போகிறீர்கள்?

அனைத்தையும் விட மோசமானது, மோடியின் இத்தகைய பார்வைகள் தினாநாத் பத்ரா என்பவரின் பார்வைகளை எதிரொலிப்பதே. இவரது புத்தகங்கள் தற்போது குஜராத் மாநிலத்தில் 42,000 பள்ளிகளில் பாடத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்தப் பாடத்திட்ட நூல்களில் குந்தி மற்றும் கவுரவர்கள் காலத்திலேயே ஸ்டெம் செல் ஆராய்ச்சி இருந்தது என்றும், மகாபாரதக் காலக்கட்டத்திலேயே தொலைக்காட்சி கண்டுபிடிக்கப்பட்டது என்றும், வேத காலத்திலேயே மோட்டார் வாகனம் இருந்தது என்றும் கூறப்பட்டுள்ளது. வெகுசிலரே இது அறிவுகெட்டத்தனமானது என்று மறுப்பார்கள்.

ஆனால் இதே போன்ற வாதத்தை புராணக் காலத்தில் மரபணு விஞ்ஞானம் இருந்தது என்றும் பிளாஸ்டிக் சர்ஜரி இருந்தது என்றும் ஏன் வைக்க வேண்டும்? அப்படி வைக்கும் போது இதனையும் அறிவுகெட்டத் தனமானது என்று ஏன் கூறக்கூடாது?

இதற்கு மேலும் என்னிடம் கூறுவதற்கு 2 விஷயங்கள் உள்ளன. பிரதமர் மோடி ஸ்மார்ட் சிட்டிகளை உருவாக்க வேண்டும் என்கிறார், கல்விக்கான தேவையை வலியுறுத்துகிறார். செவ்வாய் கிரக சாதனை கண்டு பெருமை கொள்கிறார். டிஜிட்டல் இந்தியா மேல் அவருக்கு நம்பிக்கை இருக்கிறது, புல்லட் ரயில்களை இறக்குமதி செய்யவேண்டும் என்கிறார். அதி தொழில்நுட்ப ஆயுதங்களை இந்தியாவிலேயே தயாரிக்க வேண்டும் என்கிறார். இவையெல்லாம் 21ஆம் நூற்றாண்டு லட்சியங்கள். இவையெல்லாம் அவர் விதந்தோதும், விஞ்ஞானபூர்வமாக சரி பார்க்க முடியாத, புராணக் கதைகளுடன் எப்படி ஒத்துப் போகும்? இது முரண்பாடல்லவா?

இரண்டாவதாக, கிரேக்க புராணங்களில் மனித-குதிரை வடிவ புராண உயிரிகளும், மனித உடலில் எருதின் தலை உள்ள புராண உயிரிகளும், பெர்சியர்களிடத்தில் உடல், வால், பின்கால்கள் ஆகியவை சிங்கத்துடையதாகவும், தலையும், இறகுகளும் பருந்தினுடையதாகவும் உள்ள கற்பனை உருவம் உள்ளது. பிரித்தானியர்களிடத்தில் யுனிகார்ன் உள்ளது. மேலும் தேவதைக் கதைகளில் கடற்கன்னி, மனித உருவத்திலிருந்து ஓநாய் உருவத்திற்கும் பின்பு மனித உருவத்திற்கும் மாறும் உயிரிகள் இருக்கின்றன. மோடியின் நம்பிக்கை அளவுகோல்களின் படி பார்த்தால் மேற்கூறியவையும் உண்மையில் இருந்தனவென்றே ஆகும். ஆனால் யாராவது ஒருவர் இதனை நம்ப முடியுமா? அல்லது நம் கனவுகளில் இருக்கிறதோ? அல்லது நாம் குழந்தைகளாக இருக்கும் போது இந்த நம்பிக்கை இருக்குமோ என்னவோ?

பிரதமர் மோடியின் இத்தகைய கருத்திற்கு என்னுடைய எதிர்வினை மேலும் ஒரு புள்ளி நகர்கிறது. இதுதான் நான் அவர் கருத்தின் மீது வைக்கும் மிக முக்கியமான விமர்சனம் ஆகும். அரசியல் சாசனச் சட்டம் 51 A (h) பிரிவின் படி, ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை கடமை விஞ்ஞான அறிவை வளர்ப்பதாகும். ஆனால் ஒரு பிரதமரே விஞ்ஞானத்திற்கு புறம்பான விஷயங்களை எப்படி ஒரு கருத்தாக முன் வைக்க முடிகிறது.

எனவே பிரதமரின் மருத்துவமனை திறப்பு விழாப் பேச்சு தெளிவாக, மறுப்பதற்கிடமின்றி அரசியல் சாசனத் தேவைகளுடன் முரண்படுகிறது. உண்மையில், மோடி இதனை ஏற்க மறுக்கமாட்டார் என்று நான் நம்புகிறேன்.

இவையெல்லாம் தொந்தரவு செய்யு சந்தேகங்கள், இதற்குக் காரணமாக ஒரு பிரதமரே இருப்பது மேலும் கவலையளிப்பதாகும். இறுதியாக, பிரதமரின் இந்தப் பேச்சு ஊடக கவனம் பெறவில்லை என்பது எனக்கு சோர்வளிக்கிறது. அதைவிட எந்த ஒரு விஞ்ஞானியும் மோடியின் இத்தகைய கருத்துகளை மறுக்கவில்லை என்பது. இவர்களது மவுனம் எனக்கு புரியாத புதிராகவே உள்ளது. ஊடகங்களில் மவுனம் என்னை ஆழமாகத் தொந்தரவு செய்கிறது. வேண்டுமென்றே இந்த விவகாரம் ஒன்றுமில்லாமல் செய்யப்பட்டதோ என்று கூட எனக்குத் தோன்றுகிறது.

(கரண் தாப்பர் தொலைக்காட்சி வர்ணனையாளர், டு தி பாயிண்ட் என்ற ஹெட்லைன்ஸ் டுடே நிகழ்ச்சியின் தொகுப்பாளரும் ஆவார்).



தமிழில்: முத்துக்குமார். [’தி இந்து’ (ஆங்கிலம்) நாளிதழில் வெளிவந்த கட்டுரை]

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

43 mins ago

க்ரைம்

1 hour ago

உலகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

வேலை வாய்ப்பு

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

கல்வி

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

வாழ்வியல்

4 hours ago

மேலும்