மனிதவள மேம்பாட்டு துறையில் இருந்து ஸ்மிருதி இரானியை நீக்கியது வரலாற்று நிகழ்வு?

By குர்சரண் தாஸ்

‘பிளஸ் 2 பொதுத் தேர்வை மாணவர்கள் திருப்தியாக ஏன் எழுதவில்லை. விளக்கம் கொடுங்கள்’ என்று கேட்டு, 240 பள்ளி முதல்வர்களுக்கு கேந்திரிய வித்யாலயா சங்காத்தன் உத்தரவிட்டுள்ளது. நமது பள்ளிகளின் செயல்பாடுகள், மாணவர்களின் கற்றல் திறன் குறித்து பிரதமர் மோடி கவலை கொண்டுள்ளார். ஒருமுறை பேசும்போது, ‘‘மாணவர்கள் என்ன எதிர்பார்க் கிறார்களோ அதை வகுப்பறைகள் பிரதிபலிக்க வேண்டும். பெற்றோர்களும் தங்கள் குழந்தை களுக்கு எங்கு உதவி வேண்டும் என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும்’’ என்று பேசினார்.

இந்த விஷயமே ஸ்மிருதி இரானியை மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கியதற்கு காரணமாக இருக்கலாம். இது இந்திய வரலாற்றில் மிக முக்கியமான நிகழ்வாக இருக்கும்.

பள்ளி அளவில் கல்வியின் தரம் குறித்து இந்திய அரசியல்வாதிகள் அக்கறை செலுத்துவது வழக்கத்துக்கு மாறானது. கல்வி என்பது மாநில அரசு சம்பந்தப்பட்டது என்றாலும், செயல்பாடுகளின் அடிப்படையில் மத்திய அமைச்சரை மாற்றியது, பல மாநிலங்களில் தூங்கிக் கொண்டிருக்கும் கல்வித் துறை அமைச்சகத்தை தட்டியெழுப்பி உள்ளது.

மிகப்பெரிய மாற்றம் என்பது ஸ்மிருதிக்குப் பதில் பிரகாஷ் ஜவடேகரை மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக நியமித்ததுதான். இந்தியாவை பொறுத்தவரை கல்வி அமைச்சகத்துக்கு திறமை யில்லாத அமைச்சர்கள் இருந்து வருவது துரதிருஷ்டவசமானது. அந்த வகையில் ஸ்மிருதியும் தவறான தேர்வுதான்.

தற்போது ஜவுளித் துறை அமைச்சராக ஸ்மிருதி நியமிக்கப்பட்டுள்ளார். மற்றவர்கள் நினைப்பது போல் இந்த மாற்றம் ஸ்மிருதிக்கு பதவி இறக்கம் அல்ல. இந்தியாவில் வேலைவாய்ப்பு களை அதிக எண்ணிக்கையில் உருவாக்க கூடிய மிகப்பெரிய வாய்ப்பு ஜவுளித் துறையில் உள்ளது. எனவே, புதிய கொள்கைகளை திறம்பட அமல்படுத்தினால், லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளை ஸ்மிருதி யால் உருவாக்க முடியும். அதன்மூலம் மனிதவள மேம்பாட்டுத் துறையில் இழந்த அல்லது அவர் செய்த தவறுகளில் இருந்து மீண்டு பெயர் எடுக்கலாம்.

மனிதவள மேம்பாட்டுத் துறை ஜூனியர் அமைச்சர் பதவியில் இருந்து ராம் சங்கர் கத்தாரியாவும் நீக்கப்பட்டுள்ளார். இதுவும் சரியான நடவடிக்கைததான். கல்வியை காவிமயமாக்கும் முனைப்புடன் அவர் செயல்பட்டார். அத்துடன் முஸ்லிம்களுக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்துகளை அவ்வப்போது வெளியிட்டு வந்தார்.

அமைச்சரவை மாற்றத்தில் மிகப்பெரிய இழப்பு, ஜெயந்த் சின்காவை நிதியமைச்சகத்தில் இருந்து சிவில் விமானப் போக்குவரத்துத் துறைக்கு மாற்றியதுதான். முதலீட்டாளர்களிடம் நம்பிக் கையை ஏற்படுத்தினார். ரிசர்வ் வங்கியில் இருந்து ரகுராம் ராஜன் விலகியதன் மூலம், நம்பிக்கைக் குரிய 2 பேரை இப்போது இந்தியா இழந்துவிட்டது.

எனினும், அதிர்ஷ்டவசமாக உள்கட்டமைப்பு விஷயத்தில் செயல்திறன்மிக்க 3 பேரை மோடி வைத்திருக்கிறார். சாலை, நெடுஞ்சாலை, துறைமுகத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, நிலக்கரி, எரிசக்தி, சுரங்கத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் ரயில்வேயில் சுரேஷ் பிரபு ஆகிய 3 பேர் இருக்கின்றனர்.

சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்க அதிபர் ஒபாமா தொலைக்காட்சியில் பேசும்போது, ‘‘சிறந்த ஆசிரியர்களுக்கும் சிறப்பில்லாத ஆசிரியர்களுக் கும் வேறுபாடு உள்ளது’’ என்றார். அமெரிக்காவில் மாணவர்கள் கற்றல் குறைபாட்டுடன் இருப்பதற்கு ஆசிரியர்கள்தான் காரணம் என்றார். அதுபோல் நாமும் சிறந்த ஆசிரியர்களை அங்கீகரிக்கவும், சிறப்பில்லாத ஆசிரியர்களை தண்டிக்கவும் வழிவகை காண வேண்டும்.

பள்ளிக் கல்வியில் உள்ள சிக்கல்களை பிரகாஷ் ஜவடேகர் கண்டறிந்துள்ளார். சர்வதேச மாணவர் மதிப்பீடு திட்டத்தின் கீழ் (பிஐஎஸ்ஏ) கடந்த 2011-ம் ஆண்டு வாசித்தல், அறிவியல் மற்றும் கணிதத்தில் நடத்தப்பட்ட தேர்வில் 74 பேரில் இந்திய குழந்தைகள் 73-வது இடத்தையே பிடித்துள்ளனர். இந்த அவல நிலையை கல்வி நிலையின் ஆண்டு அறிக்கை (ஏஎஸ்இஆர்) தொடர்ந்து உறுதிப்படுத்தி வருகிறது.

ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் பாதிக்கும் குறைவானோர்தான் 2-ம் வகுப்பு புத்தகத்தில் இருந்து வாசிக்கும் திறனுடன் உள்ளனர் அல்லது சாதாரண சிறிய கணக்கை செய்கின்றனர் என்று அந்த அறிக்கை தெரிவித்துள்ளது. மேலும், இந்திய ஆசிரியர்களில் வெறும் 4 சதவீதம் பேர்தான் ஆசிரியர் தகுதி தேர்வில் (டெட்) வெற்றி பெற்றுள்ளனர் என்கிறது. உ.பி., பிஹார் போன்ற மாநிலங்களில் உள்ள ஆசிரியர்களில் 4-ல் 3 பேரால் 5-ம் வகுப்பு சதவீதத்தை கணக்கிடக் கூட செய்ய முடிவதில்லை.

இந்நிலையில், ஆசிரியர் குடும்பத்தில் இருந்து வந்துள்ளார் ஜவடேகர். இந்திய பெற்றோர் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்காமல் தனியார் பள்ளிகளில் ஏன் சேர்க்கின்றனர் என்பதை ஜவடேகர் நன்கு புரிந்து வைத்துள்ளார்.

பள்ளிகளில் இலவச கல்வி கிடைத்தும், தாங்கள் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை தனியார் பள்ளிகளுக்கு பெற்றோர் வழங்கும் நிலை ஏன்? இதற்கு நேர்மையாக பதில் அளிக்க வேண்டு மானால், 4 அரசு பள்ளி ஆசிரியர்களில் ஒருவர் சட்டவிரோதமாக, பள்ளிக்கு வருவதில்லை. பள்ளிக்கு வரும் இருவரில் ஒருவர் பாடம் நடத்து வதில்லை. அரசு பள்ளிகளை கைவிடுவதற்கு நீங்கள் பெற்றோர்களை குறை சொல்ல முடியுமா? தனியார் பள்ளிகள் பெரும்பாலானவை சிறப்பானதாகவும் இல்லை. ஆனால், குறைந்தப்பட்சம் ஆசிரியர்கள் இருக்கிறார்கள்.

கோடிக்கணக்கில் தொடக்கக் கல்விக்கு அரசு பணம் கொட்டப்படுகிறது. ஆனாலும் கல்வியின் தரம் உயரவில்லை. இது இந்தியாவில் உள்ள கல்வி அமைப்புகள் மீது கூறப்படும் மிகப்பெரிய குற்றச்சாட்டு. கல்வி அடிப்படை உரிமை சட்டத்தால் (ஆர்டிஇ) எந்த பலனும் ஏற்படவில்லை. அதற்கான காரணம் தெரிந்ததுதான். இந்தச் சட்டம் உள்ளீடுகளில் மட்டுமே கவனம் செலுத்துகிறது. பலனை பார்ப்பதில்லை.

வகுப்பறை அளவு, கழிவறைகள், விளையாட்டு மைதானங்களின் அளவு போன்ற உள்கட்டமைப்பு விஷயங்கள் மட்டுமே கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. மாணவர்கள் என்ன கற்கின்றனர், கற்பித்தல் தரம் எப்படி இருக்கின்றது என்பதை பற்றி எல்லாம் அளவிட மாநிலங்களை இந்தச் சட்டம் அனுமதிப்பதில்லை.

கற்றல் தரத்தை நீங்கள் அளவிட முடியாத போது, ஆசிரியர்களை எப்படி பொறுப்பாளியாக்க முடியும்? உலகில் சிறந்த பள்ளிக் கல்வியை வழங்கும் நாடுகள் இதை உணர்ந்திருக்கின்றன. அதனால் ஆசிரியர்கள்தான் எல்லாமும் என்கின்றன. அதற்காக தேசிய அளவில் ஆசிரியர்களுக்கு மதிப்பீடுகளும் கடுமையான பயிற்சி திட்டங்களையும் செயல்படுத்துகின்றன.

‘சிறந்த ஆசிரியர்களாக இருப்பவர்கள் பிறவியிலேயே அப்படிப்பட்டவர்கள்’ என்று நம்புவதுதான் நமது தவறு. உண்மையில் போதிய பயிற்சியின் மூலம் யார் வேண்டுமானாலும் சிறந்த ஆசிரியர்களாக உருவாக முடியும். ஆனால், அந்த பயிற்சி தொடர்ந்து இருக்க வேண்டும், கடுமையாக இருக்க வேண்டும், ஆசிரியர் பணி காலம் முழுவதும் இருக்க வேண்டும்.

ஸ்மிருதியிடம் காணப்பட்ட குறைபாடுகள் ஜவடேகரிடம் இல்லை. பிரதமர் அலுவலகம், நிதி ஆயோக், டிஎஸ்ஆர் சுப்பிரமணியம் குழுவுடன் இணைந்து செயல்படுகிறார். இவர்கள் எல்லாம் சிறந்த யோசனைகளை அளிப்பவர்கள். எனினும் வரும் 3 ஆண்டுகளுக்குள் ஜவடேகர் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று நினைத்தால், மாணவர்களின் கற்றல் திறனை அளவிட்டு, அதை மேம்படுத்தும் விஷயம் ஒன்றில் மட்டும் அதிக கவனம் செலுத்த வேண்டும். அதைவிட ஜவடேகருக்கு மிக முக்கியமான இலக்காக எது இருக்க வேண்டும்? வரும் 2019-ம் ஆண்டுக்குள் 3-ம் வகுப்பிலேயே மாணவர்கள் நன்கு எழுதவும் படிக்கவும் கூடிய திறனுடன் இருக்கும் வகையில் மாற்றத்தை கொண்டு வரமுடியுமா?

இதைக் கேட்பதற்கு பகல் கனவாக தோன்றுகிறதா? அரசு தன்னார்வ தொண்டு நிறுவனம் ‘பிரதம்’ இந்த இலக்கை ஒரே ஆண்டில் ஏற்படுத்த முடியும் என்பதை 2 மாநிலங்களில் செய்து காட்டி இருக்கிறது!

gurcharandas@gmail.com தமிழில் சுருக்கமாக: ஏ.எல்.பழனிசாமி

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

5 mins ago

தமிழகம்

25 mins ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

54 mins ago

தமிழகம்

1 hour ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்