உச்ச நீதிமன்ற நீதிபதி மீது பெண் வழக்கறிஞர் பாலியல் புகார்: விசாரிக்க நீதிபதிகள் குழு

By செய்திப்பிரிவு





பெண் வழக்குரைஞர் குற்றம்சாட்டியுள்ள அந்த நீதிபதி தற்போது ஓய்வுபெற்றுவிட்டார். கடந்த டிசம்பரில் அந்த நீதிபதி தன்னிடம் தகாத வகையில் நடந்துகொண்டார் என பயிற்சி வழக்குரைஞர் குற்றம்சாட்டியுள்ளார்.

பாலியல் முறைகேடு தொடர்பான புகார்களை லேசில் விட்டுவிடமுடியாது. நீதித்துறையின் தலைவர் என்கிற முறையில் இந்த விவகாரம் எனது மனதை உலுக்கியுள்ளது என்றார் தலைமை நீதிபதி ப.சதாசிவம்.

இந்த பிரச்சினை காலையிலும் எழுப்பப்பட்டது. மதிய உணவு இடைவேளையின்போது பிற நீதிபதிகளுடன் சேர்ந்து விவாதிக்கப்பட்டது.

இந்த புகார் பற்றி ஆராய நீதிபதிகள் ஆர்.எம்.லோதா, எச்.எல்.தத்து, ரஞ்சனா பிரகாஷ் தேசாய் ஆகிய 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என்றார் சதாசிவம்.

டெல்லியில் 23 வயது பெண், கும்பல் ஒன்றால் பாலியல் வன்புணர்வுக்கு ஆளானதாக கூறப்பட்ட விவகாரம் டெல்லியை உலுக்கிக்கொண்டிருந்த நேரத்தில் கடந்த டிசம்பரில் ஓட்டல் அறையொன்றில் நீதிபதி ஒருவர் தன்னிடம் தகாத வகையில் நடந்துகொண்டார் என்று பயிற்சி பெண் வழக்குரைஞர் குற்றம்சாட்டியுள்ளார்.

பெயர் குறிப்பிடாத இந்த நீதிபதி மீதான புகாரை உச்ச நீதிமன்றத்தில் வழக்குரைஞர் எம்.எல்.ஷர்மா, தலைமை நீதிபதி ப.சதாசிவம் முன்னிலையில் எழுப்பினார்.

பத்திரிகைகளில் வந்த செய்திகள் அடிப்படையில் இதை கவனத்தில் கொண்டு தானாகவே முன்வந்து விசாரணை தொடங்க வேண்டும் என்றார் கோரிக்கை விடுத்தார். அதையடுத்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தபோது, காலையிலும் இந்த விவகாரத்தை சுட்டிக் காட்டியதாக சொன்னார் ஷர்மா.

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, உச்சநீதிமன்ற வளாகத்தில் பாலியல் சம்பந்தப்பட்ட குற்றங்கள் நடந்தால் அதுபற்றி நடவடிக்கை எடுப்பதற்கு வழிகாட்டு நெறிகள் வகுக்கப்பட்டு அரசிதழில் அறிவிக்கை வெளியாகி உள்ளது என்றார். இதற்கான கமிட்டிக்கு இன்னும் உறுப்பினர்கள் நியமிக்கப்படவில்லை. அதற்கான தகவலை உச்சநீதிமன்ற பார் அசோசியேஷன், சட்ட எழுத்தர்கள் சங்கம் ஆகியவற்றுக்கு அனுப்பி உறுப்பினர்களை தேர்வுசெய்யும்படி அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நவம்பர் 20க்குள் உறுப்பினர்களை தேர்வு செய்யும்படி கெடு விதிக்கப்பட்டுள்ளது என்றார்.

பின்னர் மதிய உணவு இடைவே ளைக்குப்பிறகு அமர்வு கூடியது. அப்போது செவ்வாய்க்கிழமை பத்திரிகை ஒன்றில் வெளியான செய்தியை விவரித்தார் அட்டார்னி ஜெனரல். பயிற்சி பெண் வழக்குரைஞர் வலைப்பதிவில் தனக்கு நேர்ந்த சம்பவத்தை எழுதியிருந்ததை தொடர்ந்து அவரிடம் பேட்டி எடுத்து இந்த செய்தி வெளியாகி உள்ளது என்றார் அட்டார்னி ஜெனரல் வாகன்வதி. இதை மிகமிக முக்கியமான விவகாரமாக கருதி பரிசீலிக்கவேண்டும் என்றார்.

அட்டார்னி ஜெனரல் சொல்லி முடித்ததும், ஏற்கெனவே ஒரு குழு அமைக்கப்பட்டு விட்டதால் இந்த மனுவை 2 வாரத்துக்கு கிடப்பில் போடுவதாக உச்சநீதிமன்ற அமர்வு தெரிவித்தது. வழக்குரைஞரின் வலைப்பூ கொல்கத்தாவில் உள்ள நீதித்துறை அறிவியல் தேசிய பல்கலைக்கழகத்தில் இந்த ஆண்டு பட்டம் முடித்த அந்த பெண் வழக்குரைஞரும் 'இயற்கை நீதி: சமூகத்துக்கும் சூழலுக்குமான வழக்குரைஞர்கள்' என்ற அமைப்பைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவரும் பாலியல் துன்புறுத்தல்கள் விவகாரம் பற்றி வலைப் பூவில் எழுதினர்.

இந்திய சட்டம் மற்றும் சமூக இதழுக்காக நவம்பர் 6 ல் வலைப்பூவில் எழுதிய அந்த பெண் வழக்குரைஞர், உச்சநீதிமன்றத்தில் பதவி வகித்த அந்த நீதிபதியிடம் பயிற்சி வழக்குரைஞராக பணியாற்றியபோது தன்னிடம் தகாத முறையில் அவர் கடந்த ஆண்டு நடந்து கொண்டதாக எழுதியிருக்கிறார்.

பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு எதிராக கடந்த டிசம்பரில் பெண் உரிமை இயக்கங்கள் கொதித்து எழுந்த நேரம் அது. அப்போது உச்சநீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்தவரின் (தற்போது ஓய்வுபெற்றுள்ளவர்) கீழ் எனது கடைசி செமஸ்டரில் பணியாற்றினேன். எனது அயராத உழைப்புக்கு அவரிடம் இருந்து கிடைத்த வெகுமதி பாலியல் வரம்பு மீறல். இதுபற்றி மேலும் ஏதும் சொல்ல விரும்பவில்லை. அதன்பிறகு அறையை விட்டு வெளியேறினேன். ஓட்டல் அறையில் இருந்து முகத்தில் சலனம் ஏதுமின்றி வெளியே வந்தேன். அன்றைய தினம் அது பற்றி யாரிடமும் சொல்லவில்லை என்றும் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார் எந்த தேதியில் அந்த சம்பவம் நடந்தது என்பதை அந்த பெண் தெரிவிக்கவில்லை.

கடந்த ஆண்டு டிசம்பர் 24ம் தேதி இணையதளத்துக்கு அவர் பேட்டி கொடுத்துள்ளார். அந்த நீதிபதியின் வாழ்வில் பிரச்சினை வருவதை நான் விரும்பவில்லை. அவரது நேர்மை கேள்விக்குறியாவதையும் நான் விரும்பவில்லை. அதே வேளையில் எனக்கு ஏற்பட்ட நிலைமை மற்ற பெண்களுக்கு ஏற்படக்கூடாது என்பதில் எனக்கு பொறுப்பு இருக்கிறது. இதே நீதிபதி மீது இதே போன்ற 3 புகார்கள் இருப்பதாக கேள்விப்பட்டுள்ளேன். வேறு சில நீதிபதிகளிடம் 4 பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளானதாகவும் தெரிகிறது என்று அந்த பேட்டியில் பெண் பயிற்சி வழக்குரைஞர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

33 mins ago

வலைஞர் பக்கம்

36 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

42 mins ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

மேலும்