ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு: வெள்ளிப் பொருள்களை ஒப்படைக்கக் கோரி புதிய மனு

By இரா.வினோத்

தமிழக‌ முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் தொடர்புடைய 1,116 கிலோ வெள்ளிப்பொருள்களை பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைக்க கோரி அரசு வழக்கறிஞர் பவானி சிங் திங்கள்கிழமை புதிய மனுவை தாக்கல் செய்தார்.

இதனால் சொத்துக் குவிப்பு வழக்கில் இறுதி விசாரணை நடைபெறவில்லை. அரசு வழக்கறிஞரின் புதிய மனுவால் வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, வளர்ப்பு மகன் சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணை பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா முன்னிலையில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நால்வரும் ஆஜராகவில்லை.

நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்குகோரும் மனுவை ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் மணி சங்கர் தாக்கல் செய்தார். அதனை அரசு வழக்கறிஞர் பவானி சிங் ஆட்சேபிக்காததால், நீதிபதி டி'குன்ஹா மனுக்களை ஏற்றுக்கொண்டார்.

அரசு வழக்கறிஞர் புதிய மனு

திங்கள்கிழமை காலை 11 மணிக்கு நீதிமன்றம் கூடியதும் அரசு வழக்கறிஞர் பவானி சிங் வழக்கில் தனது இறுதிவாதத்தைத் தொடங்குவார் என ஏற்கெனவே உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் அவர் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தார். அம்மனுவில், “1996-ல்

முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ்கார்டன் இல்லத்தில் இருந்து 1,116 கிலோ வெள்ளிப் பொருள்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். அப்போது வழக்கில் ஆஜரான ஜெயலலிதாவின் ஆலோசகர் பாஸ்கரனிடம் 1116 கிலோ வெள்ளிப் பொருள்களும் ஒப்படைக்கப்பட்டன. ஜெய லலிதாவிற்கு சொந்தமான 1116 கிலோ வெள்ளிப் பொருள்களையும் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் பாஸ்கரன் ஒப்படைக்கவேண்டும் '' என கோரி இருந்தார்.

ஜெயலலிதா தரப்புக்கு நீதிபதி கண்டிப்பு

அரசு வழக்கறிஞர் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி டி'குன்ஹா, பதில் மனு தாக்கல் செய்யுமாறு ஜெயலலிதாவின் வழக்கறிஞருக்கு உத்தரவிட்டார்.

அப்போது ஜெயலலிதாவின் வழக்கறிஞர் மணிசங்கர், பதில் மனு தாக்கல் செய்ய 10 நாள்கள் கால அவகாசம் அளிக்க வேண்டும் என கோரினார். இதற்கு நீதிபதி டி'குன்ஹா பதிலளிக்கையில், “தினந்தோறும் வழக்கை விசாரித்து, நீண்ட காலமாக நடைபெற்று கொண்டிருக்கும் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கை முடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் பலமுறை அறிவுறுத்தி இருக்கிறது.

அதனால் பதில் மனு தாக்கல் செய்வதற்காக‌ நீண்ட கால அவகாசம் வழங்க முடியாது. இவ்வழக்கை தினமும் விசாரிப்பதற்காகவே உச்ச நீதிமன்றம் என்னை சிறப்பு நீதிபதியாக நியமித்திருக்கிறது.அதற்காக தான் எனக்கு அதிகமான வசதிகளுடன் கூடிய ஊதியத்தை வழங்குகிறது.

பொது மக்கள் செலுத்தும் வரிப்பணத்தில்தான் இந்த வழக்கு நடைபெறுகிறது. எனவே வெறுமனே காலம் தாழ்த்தக் கூடாது. அரசு வழக்கறிஞர் மனுவிற்கு ஜெயலலிதாவின் வழக்கறிஞர் செவ்வாய்க்கிழமை பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்'' என கண்டிப்புடன் கூறினார்.

மெடோ ஆக்ரோ மனு 5-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

இதனைத் தொடர்ந்து மெடோ அக்ரோ ஃபார்ம்ஸ் நிறுவனத்தின் சார்பாக கடந்த 31-ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு வந்தது. மெடோ அக்ரோ ஃபார்ம்ஸ் நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான சண்முகம், சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணையின்போது தங்களுடைய நிறுவனம் ஜப்தி செய்யப்பட்டது. அந்த நிறுவனம் ஜெயலலிதாவிற்கு சொந்தமான நிறுவனம் அல்ல.

எனவே அதனை வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும். அதுவரை சொத்துக் குவிப்பு வழக்கின் விசாரணையை நிறுத்தி வைக்க வேண்டும் என கோரி இருந்தார். அம்மனுவிற்கு அரசு வழக்கறிஞர் பவானி சிங் பதில் மனு தாக்கல் செய்யவில்லை. எனவே இம்மனு மீதான விசாரணையை நீதிபதி டி'குன்ஹா 5-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

எதிர்ப்பு மனு தாக்கல் செய்ய திமுக திட்டம்

சொத்துக் குவிப்பு வழக்கு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் வழக்கை தாமதப்படுத்த வேண்டும் என்பதற்காக ஜெயலலிதா புதிய மனுக்களை தாக்கல் செய்து கொண்டே இருக்கிறார். இதனால் வழக்கின் விசாரணை தள்ளிப்போய் கொண்டே இருக்கிறது.

எனவே திமுக சார்பில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்திலும் கர்நாடக உயர் நீதிமன்றத்திலும் எதிர் மனு தாக்கல் செய்ய முடிவெடுத்துள்ளனர். அதேபோல அரசு வழக்கறிஞர் பவானி சிங்கிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்திலும் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

27 mins ago

தமிழகம்

7 mins ago

இந்தியா

42 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

உலகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்