தூக்கு தண்டனைகள் ஒருபோதும் பயங்கரவாத தாக்குதல்களைத் தடுக்காது: சசி தரூர்

By பிடிஐ

யாகூப் மேமனை தூக்கிலிடுவதில் காட்டிய 'அவசரத்தை' காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய் சிங் கேள்வி எழுப்புகையில், தூக்கு தண்டனையால் பயங்கரவாத நடவடிக்கைகளை தடுத்து விட முடியுமா? என்று அதே கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் கேள்வி எழுப்பியுள்ளார்.

'நமது அரசு ஒரு மனித உயிரை தூக்கிலிட்டுள்ளது' என்ற செய்தி தன்னை துயரத்தில் ஆழ்த்துவதாக கூறியுள்ளார். இது குறித்து அவர் தொடர் ட்விட்டர் பதிவுகளை வெளியிட்டுள்ளார். அதன் விவரம்:

"நாம் நம் கையில் உள்ள அனைத்து வழிமுறைகளாலும் பயங்கரவாதத்துக்கு எதிராக போரிட வேண்டும். ஆனால், ரத்தம் உறையும் தூக்கு தண்டனை எந்த நாட்டிலுமே பயங்கரவாதத் தாக்குதலை தடுக்கவில்லை.

அரசால் அளிக்கப்படும் மரண தண்டனைகள் நம்மையும் கொலைகாரர்களாக குறுக்குகிறது. மரண தண்டனை என்பது குற்றம் இழைப்பவர்களிடத்தில் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்பதற்கான ஆதாரம் இல்லை. ஆனால், அதற்கு நேர் எதிரான விளைவுகளையே ஏற்படுத்துகிறது. அது நிறைவேற்றுவதெல்லாம் சரியாக வஞ்சம் தீர்த்துக் கொள்வதையே, அரசுக்கு இது மதிப்பிழப்பை ஏற்படுத்துகிறது.

நான் ஒரு குறிப்பிட்ட வழக்கின் நன்மை - தீமைகள் பற்றி கருத்து கூறவில்லை. அதனை உச்ச நீதிமன்றமே தீர்மானிக்கும். மரண தண்டனை என்ற கொள்கை மற்றும் அதன் நடைமுறை பிரச்சினை பற்றியே நான் கருத்து கூறுகிறேன்" என்று சசி தரூர் குறிப்பிட்டுள்ளார்.

சசி தரூர் கருத்துக்கு பாஜக கடும் சாடல்:

சசி தரூரின் கருத்துகளைக் கடுமையாக விமர்சித்த பாஜக தேசியச் செயலர் ஸ்ரீகாந்த் சர்மா, "அவர் (சசி தரூர்), பயங்கரவாதத்திலிருந்து மீண்டு அமைதி விரும்பும் மக்களின் உணர்வுகளை அவர் புண்படுத்தியுள்ளார்" என்றார்.

மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, "மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளி பற்றிய காங்கிரஸ் தலைவர்களின் பொறுப்பற்ற பேச்சு கவலையளிக்கிறது. சோனியா காந்தி நாட்டு மக்களுக்கு இது குறித்து விளக்கமளிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்" என்றார்.

சசி தரூர் புள்ளி விவர பதில்:

பாஜக எதிர்வினைகள் குறித்து சசி தரூர் என்டிடிவி இணைய விவாதத்தில் கூறும்போது, "நான் ஒரு பொது விவாதத்தில் கலந்து கொண்ட போது அரசு ஒரு மனித உயிரை தூக்கிலிட்டுள்ளது என்று எனது துயரத்தை பகிர்ந்து கொண்டேன். ஒருவர் என்ன தவறு செய்திருந்த போதிலும் அரசு சார்பான கொலைகள் நம் அனைவரையுமே கொலைகாரர்களாக குறைத்து விடுகிறது என்றேன்.

எண்களை பாருங்கள்: மரண தண்டனை விதிப்புகளுக்கும், கொலையை தடுப்பதற்கும் ஏதாவது பொருத்தபாடு இல்லை. 1980 முதல் 1990 வரை இந்திய தண்டனை சட்டம் 302-ம் பிரிவின் கீழ் 10 பேருக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டது. ஆனால், இதே காலக்கட்டத்தில் கொலைகளின் எண்ணிக்கை 22,149-ல் இருந்து 35,045 ஆக அதிகரித்துள்ளது.

அதே போல் 1990-2000-ம் ஆண்டுகளில் 8 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ள போதும், கொலைகளின் எண்ணிக்கை 35,045-ல் இருந்து 37,399-க்கு அதிகரித்துள்ளது.

இருப்பினும், 2000-2010 ஆம் ஆண்டுகள் இடையே ஒருவர் மட்டும்தான் தூக்கிலிடப்பட்டார். கொலைகளின் எண்ணிக்கை 37,399-ல் இருந்து 33,335 ஆக குறைந்துள்ளது. எனவே பொருத்தபாடு இல்லை.

கொள்கை பற்றிய என்னுடைய கருத்தில் அரசியல் எதுவும் இல்லை. ஆனால், எனது கருத்து குறித்து 'அரசியல்' என்று குறிப்பிடப்பட்டதால் நான் அதற்கு பதில் அளிக்க கடமைப்பட்டுள்ளேன்.

அதாவது, மரண தண்டனை விதிக்கப்படுவது அரசியல் நோக்கங்களிலிருந்து விடுபட்ட ஒன்று கூறுவதும் அறிவுக்குப் பொருந்தாததே. ஏனெனில், கருணை மனு உள்ளிட்ட விவகாரங்களைத் தீர்மானிப்பது அரசியல் தலைமைகளே. எனவே, இது பற்றிய முடிவுகளும் பொதுமக்கள் கருத்து மற்றும் அரசியல் கணக்கீடுகளின் பின்புலத்திலேயே எடுக்கப்படுகிறது" என்றார் சசி தரூர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

19 mins ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

உலகம்

9 hours ago

ஆன்மிகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்