காஷ்மீர் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு: காப்பீட்டு நிறுவனங்களுக்கு உச்ச நீதிமன்றம் கண்டிப்பு

By செய்திப்பிரிவு

ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் பலர் தங்கள் காப்பீட்டு நிறுவனத்திடம் இழப்பீடு கோரியிருந்தனர். இதுகுறித்த வழக்கை விசாரித்த மாநில உயர்நீதிமன்றம், “பாதிக்கப்பட்டோர் ரூ.25 லட்சத்துக்கு மேல் இழப்பீடு கோரியிருந்தால், அதில் 50 சதவீதமும், ரூ.25 லட்சத்துக்கு குறைவான இழப்பீடு மனுக்களுக்கு 95 சதவீதமும் காப்பீட்டு நிறுவனங்கள் வழங்க வேண்டும்” என்று உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவுக்கு எதிராக நேஷனல் இன்சூரன்ஸ், யுனைட்டெட் இந்தியா இன்சூரன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தன. இம்மனு தலைமை நீதிபதி எச்.எல்.தத்து அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இதுவரை இழப்பீடு கோரி 9,917 விண்ணப்பங்கள் வந்துள்ளன. அதன் மொத்த இழப்பீட்டு தொகை ரூ.900.49 கோடி. இதில், 983 விண்ணப்பங்களை பரிசீலித்து ரூ.25 கோடி இழப்பீடு வழங்கப்பட்டு விட்டதாக காப்பீட்டு நிறுவனங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இம்மனுவை விசாரித்த நீதிபதிகள், “காஷ்மீர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியே வெள்ளத்தின் பாதிப்பை நேரடியாக பார்த் துள்ளார். நேரடி சாட்சியாக இருந்து உயர்நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. இதில் ஒரு வார்த்தையைக் கூட நாங்கள் மாற்றத் தயாராக இல்லை.

உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை காப்பீட்டு நிறுவனங்கள் அப்படியே நிறைவேற்ற வேண்டும். வெள்ள பாதிப்பு போன்ற தேசிய இடர் ஏற்படும்போது, மக்களின் நலன் கருதி, சில நேரங்களில் விதிமுறைகளை மீறி செயல்படுவதும் அவசியம்” என்று உத்தரவிட்டனர்.

காஷ்மீர் வெள்ள பாதிப்புகளை கண்டறிய அமைக்கப்பட்ட குழு உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை அளித்தது. இந்த அறிக்கை யின் நகலை அட்டர்னி ஜெனரல் உள்ளிட்ட வழக்கில் தொடர்புடைய அனைவருக்கும் வழங்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஜம்மு – காஷ்மீர் உயர்நீதிமன்றம் தற்போது விருந்தினர் மாளிகை ஒன்றில் தற்காலிகமாக இயங்கி வருவதற்கு வருத்தம் தெரிவித்த நீதிபதிகள், 13-ம் தேதி முதல் உயர்நீதிமன்றம் முழுமையாக செயல்பட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக எடுக்க வேண்டும் என்று மாநில அரசுக்கு உத்தரவிட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

23 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

ஆன்மிகம்

2 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்